search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாறு"

    திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி பி.ஆர்.பாண்டியன் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று தினம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் தினமும் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்திருந்தது.

    அதன்படி திருக்காரவாசல் கடைவீதியில் போராட்ட குழு தலைவர் தியாகராஜன் மற்றும் சுப்பையன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை தொடர்ந்து நடந்தது. இதில் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள், கலந்து கொண்டனர். அங்கேயே படுத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தமத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இன்று காலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் போராட்டம் நடைபெறும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அடுத்த கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கதேவர் வரலாறு சேர்க்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. #MuthuramalingaThevar #History
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்றவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று ஏழை மக்களுக்கு வழங்கியவர். அவருடைய பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    அவரது வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு திடீரென பள்ளி பாடங்களில் இருந்து முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டோம்.

    இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாற்றை தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



    அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கதேவர் வரலாறு சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  #MuthuramalingaThevar #History  #TNGovernment
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HydrocarbonProject #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடங்கி, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல் படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகின்றது.


    நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக்களத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப் படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.

    ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவேரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றது.

    வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிர்க்க மக்களுக்கு துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.

    தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது. அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்கு முறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல் கனவாகவே முடியும்.

    மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இல்லையேல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #HydrocarbonProject #Vaiko

    வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெ.பி.நாகராஜன், தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஞ்சீவராயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இதிகாசங்கள் நமது வாழ்க்கையை செழுமைப்படுத்துகின்றன. இந்திய மண் பெருமைப்படும் வகையில் நமக்கு ராமாயணமும், மகாபாரதமும் கிடைத்து உள்ளன. ராமாயணம் இதயம் போன்றது. மகாபாராதம் மூளையை போன்றது. உலகத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்த பின்னர் கம்பராமாயணத்தை படித்தால் கம்பனின் படைப்பாற்றல் குறித்து தெரியவரும். கம்ப ராமாயணத்தில் திருக்குறள் சார்ந்த 700 கருத்துக்களை காணமுடிகிறது. வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர். 
    ×