என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடலூர்"
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜாக்டோ- ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு தரப்பில் அடக்கு முறைகள் ஏவப்படுவதும், புளுகுமூட்டைகள் அவிழ்த்து விடப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசும், அமைச்சர்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் உள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500 சம்பளத்தில் 28-ந்தேதி முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பயமுறுத்த அறிக்கை விட்டு விட்டு ரூ.7,500-க்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் அதை இப்போது ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும் அவர்களால் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தக்க முறையில் பாடங்களை போதிக்க முடியாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிவர். ஆனால் அரசோ ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை நேரடியாக அழைத்து பேசுவதை கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது.
அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரும் இந்த அரசுதான் நாங்கள் போராடாமல் எங்கள் கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று பலமுறை கெஞ்சியபோது அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் 110 சதவீத ஊதிய உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டது. ரூ.50 ஆயிரம் ஆக இருந்த எம்.எல்.ஏ. சம்பளத்தை ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தியபோது மட்டும் அரசின் நிதி நிலைமை செழிப்பாக இருந்ததா என்பதை அரசு விளக்க வேண்டும்.
30 ஆண்டுகளாக அரசில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட்டு வரும் பயனளிப்பு ஓய்வூதியத்தை பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றிவிட்ட இவர்கள், ஒருமுறை எம்.எல்.ஏ.க்களாகவோ, எம்.பி.க்களாகவோ இருந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதை மட்டும் பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றவில்லை.
ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்களுக்கு தேவையானதை கஜானாவில் இருந்தும். கருவூலத்தில் இருந்தும் சுரண்டி எடுத்துக் கொண்டு விட்ட பின் கஜானா காலியாக இல்லாமல் வேறெப்படி இருக்கும்.
அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார். அம்மா எந்த காலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்துவோம் என்று கூறவில்லை. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று தான் கூறியுள்ளார் என்கிறார். அவர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கண்ணாடி போட்டு கொஞ்சம் படித்துப் பார்த்திருந்தால் அந்த பொய்யான அறிக்கையை விட்டிருக்க மாட்டார்.
நியாயமான முறையில் போராடுபவர்களை நேர்மையான முறையில் அழைத்து பேசி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசு தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், ஆசிரியர்களையும் எதிரிகளைப் போல் பாவிப்பதையும் அடிமைகள் போல் நடத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டும்.
வெறும் அறிக்கைகளும், புள்ளி விவரங்களும், மாற்று ஏற்பாடுகளும் அடக்கு முறைகளும், நசுக்கிவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #JactoGeo #MLAsSalary
விழுப்புரம்:
புதிய ஓய்வுஊதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.
விழுப்புரத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தை நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 170 பேர் மீதும், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்திய 150 பேர் மீதும் போலீசார் வழக் குபதிவு செய்தனர்.
இதேபோல் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,065 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்ப அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நேற்று பணிக்குவராத 381 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
அதில், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் பிற துறைகளிலும் பணிக்கு வராதவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #JactoGeo
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி, கமல்ஹாசன் இன்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (26-ந் தேதி) கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அதிசயநத்தத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தேவனாம்பட்டினம், மந்தாரகுப்பம் மற்றும் விருத்தாசலத்தில் மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.
27-ந் தேதி கடலூர் அண்ணா நகரில் நடைபெறும் சான்றோன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
பாகூர்:
கடலூர் புதுபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரளா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ரமேசின் உறவினர் ஒருவர் நேற்று இறந்து போனார். இந்த தகவலை கூறுவதற்காக இன்று காலை பாகூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரமேஷ், அவரது உறவினர் பிரவீன் (20), ஷேக் முகமது (39) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு சென்று விட்டு பாகூரில் இருந்து கடலூர் ரோட்டில் திரும்பிய போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ரமேஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் பிரவீன், ஷேக் முகமது படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீன், ஷேக்முகமது இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை யோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்துசென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 7 ஆயிரம் கட்டு மரங்கள், பைபர் படகுகள், விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்டேர் நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தது.
சுனாமி பேரலை தாக்கி 14-வது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.
தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக பூக்கூடைகளையும், பால் குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்தனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் அந்தப் பகுதி மீனவர்கள் சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர். இதையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, கூனிமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், எக்கியார்குப்பம், கீழ்புத்துபட்டு குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் பலியானார்கள்.
இதையொட்டி இன்று மரக்காணம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்று பால் ஊற்றினர். பின்பு கடலில் மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர். சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.
சுனாமியின்போது காரைக்கால் பகுதியில் உள்ள பட்டனம்சேரி, கீழ் தான்குடி உள்பட 11 கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
சுனாமி தினத்தை யொட்டி கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் கலெக்டர் கேசவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்பு சுனாமியின்போது இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நன்டலாறு, பட்டினச் சேரி ஆகிய பகுதிகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. #Tsunami #MemorialDay
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுவதால் தென் தமிழகம் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்தது. கடலூர் நகரில் சாரல் மழை பெய்தது.
பண்ருட்டியில் இன்று காலை 6 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கி பின்னர் பலத்த மழையாக பெய்தது.
மேலும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.
மக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி சென்றனர். முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது.
ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுக்குப்பம், சேத்தாம்பட்டு, அம்புஜ வள்ளிபேட்டை, ஆத்தூர், முத்தரசன் பேட்டை, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.
பண்ருட்டியில் பள்ளி மாணவிகள் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday
மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.
கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:-
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.
கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.
படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #GajaStorm #NationalDisasterRescueTeam
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்றார். #GajaStorm #ChennaiRain
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35), மாளிகைமேடுவை சேர்ந்த நிஷாந்தி(13), புதுவை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற வந்தனர்.
புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Denguefever
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(வயது 29). என்ஜினீயர்.
இவர் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தானே சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.
கோபிநாதனுக்கு கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் கோபிநாதனுக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர் பரிசோதனை செய்தனர்.
அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கோபிநாதன் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் மாவட்டத்தில் 650 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனகிரியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் பணியாற்றிய போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தற்போது ராஜ்குமார் உள்பட 3 பேருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்