search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராதவிதமாக காணாமல் போன சம்பவம் குறித்து கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 21-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார்.

    கடந்த 22-ந் தேதி 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் கடலில் தவறி விழுந்தார். படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

    ராமலிங்கம் கிடைக்காததால் நேற்று இரவு அவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பினர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் உதவியுடன் கடலில் மாயமான ராமலிங்கத்தை தேடிவருகின்றனர். #tamilnews
    பாகூர் அருகே மதுகுடிக்கும் போது தகராறில் மீனவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது47), மீனவர். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ரீதர் புதுவை வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள உறவினர் முருகன் வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதர் நேற்று இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு சென்றார். அங்கு சராயம் குடித்து கொண்டு இருந்த போது இவருக்கும் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல் (35) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கமலை ஸ்ரீதர் தாக்கினார்.

    இதனால் ஸ்ரீதர் மீது கமல் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதர் சாராயம் குடிக்க சாராயக்கடைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கமலுக்கும், ஸ்ரீதருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கமல் அங்கிருந்த சோடா பாட்டிலை உடைத்து ஸ்ரீதரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரஹீம் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்ததும் கமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    புதிய புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக நேற்று நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    நாகப்பட்டினம்:

    கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள் சேதம் அடைந்தன. தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகும் என்றும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    புதிய புயல் உருவாக உள்ளதால் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களையும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புதிய புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
    கேரளாவில் தொண்டி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடற்கரைகிராமமான காரங்காட்டைச் சேர்ந்தவர் ஐசக் நியூட்டன். இவரது மனைவி அந்தோணியம்மாள்.

    இவர்களது மூத்த மகன் ரூசோ (22). பட்டதாரியான இவர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சக்தி குலங்கரா கடல் பகுதியில் மீன் பிடிக்க விசைப் படகில் சென்றார். கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார்.

    இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான காரங்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    சாயல்குடி அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இது குறித்து பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள தெற்கு மூக்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 28) மீனவர். நேற்று இரவு நரிப்பையூரில் இருந்து சாயல்குடிக்கு செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மாணிக்கம் நகர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அதனை செல்வகுமார் சரியாக கவனிக்கவில்லை. இதனால் பஸ்சின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவருடைய சகோதரர் திருமேணி சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (42) கைது செய்யப்பட்டார்.

    பலியான செல்வ குமாருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். #tamilnews
    ×