search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார்"

    ‘பொங்கல்’, ’தமிழர் திருநாள்’ என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது. #happypongal2019
    மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.

    இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.

    தற்போது, காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக 'மெட்ராஸ்' என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய ஈ.வே.ரா.பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

    1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த. பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 

    15-8-1947-ல்  இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. 26-1-1950 அன்று இந்தியா குடியரசு நாடான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
     
    தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

    சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, ‘தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

    இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலமாத்தில் தைத்திங்கள் முதல்நாளன்று (14-1-1969) சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு ‘தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது பெருமைக்குரிய மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ‘தைப் பொங்கல்’ இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று ‘மாலை மலர் டாட்.காம்’ உறுதியாக நம்புகிறது.

    எங்களது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!  வாழ்க.. வளமுடன்!! #historicpride #Pongalday #prideforTamilians #Tamilians #happypongal2019
    தந்தை பெரியார் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எச்.ராஜாவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #PMK #RamaDoss #HRaja #BJP
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

    தந்தை பெரியார் பற்றி பள்ளிப் பாடநூலில் பாடம் இடம் பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ள கருத்துக்கள் அவதூறானவை. ரசனைக்குறைவானவை. கண்டிக்கத்தக்கவை.

    தந்தை பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து எச்.ராஜா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன.

    எச்.ராஜாவைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தந்தைப் பெரியாரின் கொள்கைகள் சிறப்பானவை. தமிழ் சமுதாயத்துக்கு அவசியமானவை. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் கூட சமுதாயத்துக்கு பொருந்தக் கூடியவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #RamaDoss #HRaja #BJP
    குரூப்-2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் கொடுக்கப்பட்டதற்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    குரூப்-2 முதல் நிலைத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

    இதற்கு கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றாக ‘இ.வெ.ரா. ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பெரியாருக்கு சாதி அடையாளம் கொடுக்கப்பட்டதற்கும் ‘‘ஈ.வெ.ரா. என்பதற்கு பதிலாக தவறுதலாக ‘இ.வெ.ரா’ என்று குறிப்பிட்டதற்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ. ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரிபார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா?, தமிழ்நாடு தெரியுமா? எனத் தெரியவில்லை.

    ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், ‘இ’ என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை.



    இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச்சொன்னால், தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள். இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928-ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் தந்தை பெரியார். யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர்.

    அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல, தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத்தனமான எண்ணத்தை விதைப்பதும் ஆகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே குரூப்-2 தேர்வு வினாத்தாளில் 189-வது கேள்வியில் தவறு இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறி உள்ளனர்.

    ஆங்கிலத்தில் ஹெக்டேர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும், ஆனால் தமிழில் ஏக்கர் என்று கேள்வியில் தவறுதலாக இடம்பெற்று இருந்தது என்றும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே குரூப்-2 தேர்வில் பெரியார் பெயருடன் சாதி இடம்பெற்றதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தெரிவித்து இருக்கிறது. #MKStalin #DMK
    பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பெரவள்ளூரை சேர்ந்தவர் ராஜா. வக்கீல். இவர் வக்கீல்களுடன் பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளில் சென்னை கிண்டியில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அளித்த பேட்டியின்போது, தந்தை பெரியார் தேச துரோகி என்று கூறியுள்ளார்.

    தீண்டாமை, பெண் விடுதலை, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய பெரியாரை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார்.

    தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

    அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

    தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.

    பெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.


    தி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்? என கேள்வி எழுப்புகிறேன்.

    பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.

    இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.   #MansoorAliKhan   #ArunJaitley
    பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #AIADMK
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



    இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.

    கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த இருக்கும் தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.

    * பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவருக்கும் இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.

    * புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக முடித்த அனைவருக்கும் நன்றி.

    * சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்த முயற்சி மேற்கொண்டிருப்பதற்கும், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.10 கோடி நிவாரண நிதி மற்றும் பல கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி.

    * ரூ.328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தை பெருக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

    * குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு.

    * இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

    * பெண்களுக்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி.

    * தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க இந்த கூட்டம் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    ×