search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 139734"

    பா.ஜனதா பூத்கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், ஊழல் இல்லாத வளர்ச்சியை கர்நாடகம் விரும்புகிறது என்று பேசினார். #PMModi #BJP
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

    அதே போல் கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது மோடி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அரசு சொன்னது. அது மிகவும் கொடூரமான நகைச்சுவை ஆகும். ஊழல் இல்லாத வளர்ச்சியை தான் கர்நாடகம் விரும்புகிறது. கர்நாடக மக்கள், பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.



    அதனால், மாநில அரசு மக்களின் நலன்களை புறக்கணிக்கும்போது, அதற்காக நமது கட்சி நிர்வாகிகள் குரல் கொடுக்க வேண்டியது கடமை ஆகும். கர்நாடகத்தில் ஆட்சி செய்பவர்கள், இசை நாற்காலி ஆட்டத்தை ஆடுவது போல் தெரிகிறது.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால், நல்ல நிலையில் உள்ள விவசாயிகளே பயன் பெறுகிறார்கள்.

    நாட்டை சுற்றிவரும் சிலர், விவசாய கடன் தள்ளுபடிக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். அத்தகையவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கும் பொறுப்பு ஏற்பார்களா?.

    இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
    கஜா புயல் நிவாரணத்தில் தமிழக அரசு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.

    தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.

    தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

    அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

    இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பழனிசாமி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?



    அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.

    மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #LokpalBill #Siddaramaiah
    உப்பள்ளி :

    கர்நாடக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்வதாக தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா சொன்னது.

    ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை கர்நாடக அரசு வழங்குகிறது. நிலுவைத்தொகையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மந்திரிசபையை உடனடியாக விரிவாக்கம் செய்யும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் வற்புறுத்தவில்லை. மந்திரிசபை விரிவாக்கம் செய்தால் அன்றைய தினமே கூட்டணி அரசு கவிழும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா கட்சிக்கு கூட்டணி அரசு பற்றி பேச தகுதி இல்லை. கூட்டணி அரசு சுதந்திரமாக செயல்படுகிறது.



    பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. மந்திரியாக வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவர் எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கூட்டம் நடத்தவில்லை. வருகிற 5-ந் தேதி கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும்.

    பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், முதல்-மந்திரியாக வேண்டும் என்று எடியூரப்பா கனவு காண்கிறார். கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இந்திரா உணவகத்தை நடத்த நிதி பற்றாக்குறை ஒன்றும் இல்லை. பா.ஜனதாவினர் ஏழைகளுக்கு எதிரானவர்கள்.

    அதனால் இந்திரா உணவகத்தை எதிர்க்கிறார்கள். ஊழலுக்கு எதிராக பேசி தான், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை லோக்பால் அமைப்பை அக்கட்சி உருவாக்கவில்லை. இதன் காரணமாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    இந்த பேட்டியின் போது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உடன் இருந்தார். இதன்பின்னர் சித்தராமையா கார் மூலம் பாகல்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். #LokpalBill #Siddaramaiah
    ‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் ஒப்புதல் அளித்துள்ளார். #DevendraFadnavis
    மும்பை :

    மராட்டியத்தில் ‘ஜல்யுக்த் சிவார்’ நீர் சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் வறட்சி குறித்தும், ‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    அப்போது நீர்சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-



    ‘ஜல்யுக்த் சிவார்’ மிகப்பெரிய அளவில் மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட முதல் திட்டமாகும். இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    மிகப்பெரிய அளவில் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் சில இடங்களில் ஊழல் நடைபெற்றது. இருப்பினும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக ஐ.ஐ.டி. வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    மேலும் 75 சதவீதத்திற்கும் குறைவாகவே மழைப்பொழிவு இருந்தபோதும், விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் உழவு தொழில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #DevendraFadnavis
    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    புதுடெல்லி:

    மத்திய அரசு செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட போது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.

    அவர் பண மதிப்பு நீக்கம் குறித்து கூறுகையில், “இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சரிவடைந்தது” என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் ஏன் அப்போது பதவி விலகவில்லை.

    ஆனால் முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்தார்.

     


    ரபேல் ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம். மனோகர் பாரிக்கர் அதில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

    அரவிந்த் சுப்பிரமணியனும் இப்போது கருத்து தெரிவித்து அதில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள். இதுபற்றி விசாரண நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    ஐதராபாத்தில் ஊழல் வழக்கில் நீதிபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #judgearrested #Hyderabadjudge

    நகரி:

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக உள்ளவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நீதிபதியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் அவருக்கு தெலுங்கானா மற்றும் மும்பையில் பல சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று தெலுங்கானாவில் உள்ள நீதிபதி வரபிரசாத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மும்பை தானேவில் உள்ள அவரது நண்பரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.3 கோடி அளவிலான கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஐதராபாத்தில் சுக் நகரில் உள்ள வீட்டில் வைத்து நீதிபதி வரபிரசாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


    அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி வரபிரசாத் கஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீதிபதி வரபிரசாத் ஊழலில் ஈடுபட்டு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது.

    இந்த பணத்தை மும்பை தானேவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் நண்பரிடம் கொடுத்து அதில் முதலீடு செய்திருக்கிறார். தனது குடும்பத்துடன் அடிக்கடி சீனா, அமெரிக்கா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று லட்சக் கணக்கில் செலவு செய்து வந்திருக்கிறார். #judgearrested #Hyderabadjudge

    கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், ‘தமிழக கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடை பெற்றுள்ளதாகவும், தமிழக அரசின் தணிக்கை துறை அறிக்கையின்படி ரூ.17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்ததது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை செயலருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    ஊழலை எதிர்த்த போதெல்லாம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் பேசினார். #IASOfficer #Sagayam
    கோவை:

    கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊழலை ஒழிப்போம்; நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலக அரங்கில் நடந்தது.

    இதில் சென்னை அறிவியல் நகர துணைத்தலைவரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல. நேர்மையானவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

    நம் நாட்டில் ஊழல் என்பது ஆழமாக பரவி விட்டது. அதை அழிக்க வேண்டியது இளைஞர்களின் கடமை, ஊழலை எதிர்த்த போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். இருந்தும் என் கடமையிலிருந்து நான் விலகவில்லை. ஆய்வு ஒன்றின்படி 92 சதவீத இந்திய மக்கள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.

    இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டு கட்டுரை, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.எஸ்.டி.கமி‌ஷனர் ஸ்ரீனிவாசராவ், கமி‌ஷனர் (தணிக்கை) குமரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.  #IASOfficer #Sagayam
    ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.6 கோடி முறைகேடாக பெற்றதாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வங்காள தேச ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

    அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


    திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

    ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியா (வயது 73), அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    வங்காளதேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #KhaledaZiaGraftCase 
    லாலு மகள் - மருமகனுக்கு சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடியாகும். #LaluPrasadYadav #IncomeTax

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான பல்வேறு முறைகேடு குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    லாலு குடும்பத்தினர் மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை வருமான வரித்துறை தற்காலிகமாக முடக்கி இருந்தது. இது தொடர்பான விசாரணையில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி இருந்தது தெரியவந்தது.


    டெல்லி பிஜ்வாசன் பகுதியில் லாலு மகள் மிசா பார்தி, மருமகன் சைலேஷ் குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பண்ணை வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி இருந்தனர். கே.எச்.கே. கோல்டிங்ஸ் என்ற போலி நிறுவனம் மூலம் இந்த பண்ணை வீடுகள் வாங்கப்பட்டன. பின்னர் இந்த சொத்துக்கள் இருவரது பெயருக்கு மாற்றப்பட்டன.

    இந்த நிலையில் மிசாபார்தி, சைலேஷ்குமாருக்கு சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடியாகும்.

    பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. #LaluPrasadYadav #IncomeTax

    ×