search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 139734"

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் 3 ஆண்டு காலங்களில் ரூ.240 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #AnnaUniversityScam
    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள ஊழல்கள், தமிழக கல்வித் துறையில் இதுவரை நடந்துள்ள ஊழல்கள் அனைத்தையும் மிஞ்சுவதாக உள்ளது.

    விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் நவீன முறையில் ஏமாற்றி, மிக நூதனமாக இந்த முறைகேடு நடந்துள்ளது.

    அண்ணா பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.700 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அந்த 700 ரூபாயில் ரூ.300 விடைத்தாள் போட்டோ காப்பிக்கும் ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும்.


    ரூ.700 பணம் கட்டி விண்ணப்பித்ததும், அந்த பாடத்துக்குரிய நிபுணர், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு அந்த விடைத்தாள் உகந்ததா? என்று ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மறுமதிப்பீடு நடக்கும் மையம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் 23 மையங்களில் மறுமதிப்பீடு பணி நடக்கும்.

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரடியாக இதற்கான அதிகாரிகள் மற்றும் மறு மதிப்பீடு செய்பவர்களை முடிவு செய்து நியமிப்பார். மறுமதிப்பீட்டின் போது ஏற்கனவே எடுத்த மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் வந்தால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

    மறுமதிப்பீடு செய்த பிறகு ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணை விட 15 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றால், மேலும் ஒரு நபரிடம் மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும். அவர்கள் இருவரில் யார் அதிக மதிப்பெண் அளித்துள்ளாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இந்த இடத்தில்தான் தில்லுமுல்லு நடத்தப்படும். குறிப்பிட்ட மாணவருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் செய்து விடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தையே சுற்றி, சுற்றி வருபவர்களாக உள்ளனர்.

    இந்த இடைத்தரகர்களுக்கும் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யும் பேராசிரியர்கள் சிலருக்கும் நெருக்கமான நட்பு உண்டு. இந்த கும்பல்தான் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்துள்ளனர்.

    அதாவது விடைத்தாள் திருத்தத்துக்கு ஏற்ப இந்த கும்பல் லஞ்சம் வாங்கியுள்ளது. பாசானால் போதும் என்ற மாணவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் வேண்டும் என்று விரும்பும் மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கியுள்ளனர். சராசரியாக அவர்கள் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த லஞ்சப் பணம் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளின் கைகளுக்கும் சென்று சேர்ந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். அதை உறுதிப்படுத்தவே நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    பொதுவாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் அதிகாரியாக நியமனம் செய்யப்படுபவர்கள் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார்கள். அதாவது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக ஒருவர் நியமனம் செய்யப்பட்டால் அவர் 6 செமஸ்டர்களை நடத்தும் பொறுப்பை ஏற்பார்.

    6 செமஸ்டர்களின் தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வது உள்ளிட்ட அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில்தான் நடைபெறும்.


    இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகே சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் லஞ்சம் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி ஒரு செமஸ்டருக்கு ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

    தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தங்களது 3 ஆண்டுகள் பணிக்காலத்தில் 6 செமஸ்டர்களிலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சந்தேகம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.240 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    தனிப்பட்ட வகையில் சிலர் மட்டுமே இந்த முறைகேடுகளை செய்ய இயலாது. அனைத்து மறுமதிப்பீடு மையங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் இந்த ஊழல் ஜாம்...ஜாம் என்று நடந்துள்ளது.

    போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் எப்படி நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கறுப்பு ஆடுகளும் யார் என்பது தெரிந்துவிடும்.  #AnnaUniversityScam
    தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
    தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்துணவு திட்ட முட்டை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையாளரான சுதாதேவி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்களும் சிக்கின.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலைகளை தங்கத்தில் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் சுருட்டப்பட்டது அம்பலமானது.

    இதனையடுத்து இந்து அறநிலைய துறையின் கூடுதல் ஆணையராக உயர் பதவியில் இருந்த கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டுள்ளது.


    இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். என்ஜினீயரிங் தேர்வுக்கான மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்படி தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. #AnnaUniversity
    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனராக (உரம்) பணியாற்றி வருகிறார்.

    இவர் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை மாவட்ட ஆய்வுக்குழுவினர் சேர்ந்து கடந்த 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    இதில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் சங்கரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 6 போலீசார் நேற்று 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வீட்டுப்பத்திரம் உள்ளிட்ட 57 ஆவணங்கள் மற்றும் ஒரு லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    நகைகள் அனைத்தும் தனது மகள் திருமணத்துக் காக வாங்கியது என்று கூறி, அதற்கான ஆவணங் களை போலீசாரிடம் வேளாண்மை துறை துணை இயக்குனர் சங்கர் காண்பித்தார். இதை யடுத்து அவற்றை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கரிடம் திரும்ப கொடுத்தனர்.

    இதையடுத்து சங்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 57 முக்கிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


    சங்கரின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் கச்சிராயப்பாளை யம் அருகே உள்ள நல்லாத்தூரில் உள்ள சங்கருக்கு சொந்தமான விதைப்பண்ணையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அங்கு எந்தவித ஆவணமும் கைப்பற்றப்பட வில்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத் தூரில் சங்கரின் தம்பி ராஜேந்திரன் பெயரில் 10 ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் மற்றும் மாடி வீடு உள்ளது. ராவத்தநல்லூரில் 3 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இவை அனைத்தும் சங்கர் தனது உறவினர்கள் பெயரில் வாங்கி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி செயலாளராகவும் சங்கர் பணியாற்றினார். அப்போது பல்வேறு திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.10 கோடி வரை மோசடி செய்து வீட்டுமனை உள்ளிட்டவைகளை சங்கர் வாங்கி இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vaiko #Corruption

    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பெருமளவு பணம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிந்தேன். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, டெண்டர் எடுக்கும் காண்டிராக்டரிடம் இது கைப்பற்றப்பட்டது. இதில் முதல்-அமைச்சரின் உறவினருக்கும் தொடர்பு உண்டு என்று பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.

    தமிழகம் தற்போது நாசகரமான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்று தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருமான வரி சோதனை மூலம் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவை வெறும் செய்தியாக மட்டும் இருந்து விடக் கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது.

    ஊழல் செய்தவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படா விட்டால், ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கை போய் விடும். எனவே ஊழலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

    அதிகாரத்தை பயன் படுத்தி இதுபோன்ற பணம் குவிப்பவர்களால் தமிழகத்துக்கு பெரும்கேடு சூழந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு ஊழல் மலிந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

    மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத்திய அரசு வருமான வரிசோதனை நடத்தியதற்கு காரணம் கற்பித்து குறை கூறக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை நிறைவேற்ற வேண்டும்.

    11 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம், இழிவு. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மிருகங்களை விட கொடியவர்கள்.

    பெண்களை தெய்வமாக வழிபடும் நாட்டில் இது போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மிகவும் வேதனை தருகிறது.

    இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #Corruption

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #dinakaran #Corruption #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோமா நிலையில் உள்ளது. இந்த ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. சத்துணவு முட்டையில் மட்டும் ஊழல் இல்லை. எல்.இ.டி. பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

    அமைச்சர் தங்கமணி பொய்யான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த வெற்றியை போல வருகிற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.

    அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக உருவெடுப்போம். மத்திய அரசு தமிழக அரசை ஊழல் ஆட்சி என குற்றம் சாட்டுகிறது. ஆனால் எதற்காக ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை. இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சி அமைக்க முடியாது.

    லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையில் பலியான மாணவி வழக்கு தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள். கோவையில் போலி நிறுவனங்கள் தொடங்கி அரசு டெண்டர் எடுத்து வருகின்றனர். 8 வழிச்சாலை மக்களுக்கான திட்டம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக நிறைவேற்ற துடிக்கின்றனர்.

    இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் சமயத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #Corruption #edappadipalanisamy

    பொறுத்திருந்து பாருங்கள் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று தமிழிசை கவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #amitshah

    மதுரை:

    பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி மதுரை விளக்குத்தூண் அருகில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளது என்றுதான் அமித்ஷா பேசினார். அது இப்போது வேறு மாதிரி உலா வருகிறது.

    பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்ப்பதில் பா.ஜ.க. பெருமிதம் கொள்கிறது.

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சிப் பாதைக்கு செல்வது அகிய வி‌ஷயங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வது காமராஜர் ஆட்சிதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் இருக்கக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.

    தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்தியில் எந்த கட்சி ஆளுகிறதோ, அந்த கட்சியின் சின்னமான தாமரைதான் இங்கு மலரும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். பொருத்திருந்து பாருங்கள்.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை அமித்ஷாவின் வருகை உறுதிப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #amitshah

    ஊழல் அதிகம் புரளும் மாநிலம் தமிழ்நாடு என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

    தமிழகம், ஊழல் அதிகம் உள்ள மாநிலம் என்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும்.

    அமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.


    நாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும்.

    ஒரு நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.

    மீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி? என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.

    முட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தான்.

    அண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AmitShah #EdappadiPalanisamy #Divakaran
    தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு ஊழலே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.

    மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017-ம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

    உண்மையான அக்கறையுடன் பரிந்துரைகளை செயல் படுத்தும் மாநிலங்கள் மிகவும் எளிதாக முதலிடத்தை பிடிக்க முடியும். ஆந்திரா அப்படித்தான் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. தமிழகத்திற்கும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    ஆனால், ஆந்திரா 98.42 சதவீதம் சீர்திருத்தங்களை செய்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழகம் 90.68 சதவீதம் சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால் தான் 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர் திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத் தவிர வேறல்ல.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழகத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

    ஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர்.

    தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது.

    இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29.85 சதவீதம் வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன்களை தமிழகம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அப்போது தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இச்சிக்கலை சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் கையூட்டை வாங்கிக் குவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர்.

    தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப் போவதில்லை.

    எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அமித் ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #Amitshah #HRaja #Jayakumar
    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவது குறித்தும் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது. அது தனக்கு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.

    அமித்ஷா இந்தியில் பேசியதை தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே பரஸ்பர ஒற்றுமை இருந்து வருகின்ற நிலையில் அமித்ஷா ஊழல் பற்றி பேசியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமித்ஷாவின் ஊழல் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பா.ஜ.க.வும் நடத்தியுள்ளது.


    அந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் (மைக்ரோ இர்ரிகே‌ஷன்) என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்துள்ளார்.

    அதுபோல அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மாற்றி இருக்கிறார்.

    இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

    அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி எச்.ராஜாவிடம் கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்து விட்டார். #Amitshah #HRaja #Jayakumar
    மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசுப் பணம் 680 மில்லியன் டாலர்களை தனது சொந்த வங்கி கணக்கில் முதலீடு செய்த ஊழல் வழக்கில் இன்று அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் 14-வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக அப்போதைய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக  இருந்த மகாதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

    அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

    அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

    இந்த நிலையில் அவர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் சம்மன் அனுப்பியது.

    இதைதொடர்ந்து ஊழல் தடுப்பு கமிஷனர் முஹம்மது ஷுக்ரி அப்துல் முன்னர் ஆஜரான நஜிப் ரசாக்கிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்த நஜிப் ரசாக், வரும் வியாழக்கிழமை நடைபெறும் விசாரணையிலும் ஆஜராவேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #NajibRazak
    தமிழகத்தில் தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது. தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். #Corruption #tngovt

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிறு மின்விசை தண்ணீர் தொட்டிகளை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நதிநீர் பங்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரியாக கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டக் கூடாது என்று கூறுகிறார்கள். அது உண்மையாகவே பாராட்டத்தக்கது. ஆனால் கட்டினார்கள் என்றால் அதைத் தடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்று நமக்குத் தெரியவில்லை?

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்த பிறகு இதற்கு என்னென்ன அதிகாரம் எந்தெந்த வகையில் செயல்படும் என்பதை தெரிந்து கொண்டு தான் முழு ஆதரவையும் அல்லது அவர்கள் செய்த தவறுகளையும் சொல்ல முடியும்.

    மேலும் குட்கா போதைப் பொருள் பிரச்சினை தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போதும் நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் விலக்கி வைக்க வேண்டும்.

    ரூ.200 கோடி ஊழல் என்பது எல்லாம் சாதாரணமாகி விட்டது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடி என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது. தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இவர்களுக்கு கமி‌ஷன் வாங்குவதைத் தவிர வேறு எந்த கவனமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Corruption #tngovt

    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×