search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார்.
    • சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (22). இவர் ரூ.36 ஆயிரத்துடன் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஹேமலதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார் மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரையும் தனக்கு நன்றாக தெரியும் ஆகவே கவுண்ட்டரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பணம் செலுத்தி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை உண்மை என்று நம்பிய ஹேமலதா ரூ36ஆயிரம் ரொக்கத்தை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற ஹேமலதா தனது வங்கி கணக்கில் பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் மேலும் பணம் செலுத்திவிட்டதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

    • நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
    • வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கிறார்கள்.
    • ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அசின் (வயது 30).

    நேற்று மாலை குலசேகரம் சந்தைப் பகுதியில் இருந்து மணியன்குழிக்கு செல்வதற்கு 2 மகள்களுடன் பஸ்சுக்காக காத்து இருந்தார்.

    அப்போது மணியன் குழி செல்வதற்கு ஒரு வேன் வந்தது. அதில் ஏறும் போது மர்ம நபர் ஒருவர் அசின் கையில் இருந்த பர்சை அபேஸ் செய்து விட்டார். வேனில் இருந்து இறங்கிய அசின், பர்சை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பர்சில் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.

    அந்த பகுதியில் கடையில் உள்ள கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    • வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர்கள் பார்த்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் இன்று காலை நடுரோட்டில் ரூ.50,000 பணம் கட்டு ஒன்று கிடந்தது.இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் அபிமன்னன் (வயது 48) அதனை மீட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கொண்டாடி வரவில்லை.இதனையடுத்து சக டிரைவர்களுடன் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

    இந்தநிலையில் வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த தயாநிதி (22) என்பதும் தனது தாய் கலைவாணியை இன்று காலை 5மணிக்கு அழைத்துக்கொண்டு கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50,000 பணத்தை அந்த வாலிபரிடம் ஒப்படைத்தார்.ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன்.

    இவரது மனைவி கமலம் ( வயது 64).

    இவர் சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.

    இதனால் கமலம் மன வேதனையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென கமலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார். 

    • திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி
    • தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    நாகர்கோவில் : திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி. நேற்று மாலை சுமார் 3.45 மணியளவில் ராஜூ திங்கள்நகர் ரவுண்டானா நெய்யூர் ரோட்டில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்யூர் மிஞ்சன்தெருவை சேர்ந்த தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    ராஜூ பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனபால் அவதூறாக ராஜூவை பேசியுள்ளார். இதை ராஜூ தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராஜூவை குத்தி உள்ளார். இதில் ராஜூ பலத்த காயம் அடைந்தார். மேலும் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பலத்த காயம் அடைந்த ராஜூவை அங்கி ருந்தவர்கள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச் சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ராஜூவின் சகோதரர் ஜெகதீஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தனபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
    • வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
    • இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 )விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஊருக்குள் ஒரு வீடும், விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது.பகலில் ஊருக்குள் இருக்கும் வீட்டிலும், இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வழக்கம்போல் தூங்கிவிட்டு காலை மீண்டும் ஊருக்குள் உள்ள வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணமும் அைர பவுன் நகையும், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள மேலும் 3 வீடுகளிலும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

    • வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
    • இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் சத்யாநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடைக்கு வந்த ஒரு மர்ம கும்பல் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடைக்குள் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.20000 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதில் வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.

    இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பைக் மற்றும் பணம் திருடு போனது குறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர் விட்டுச் சென்ற பைக் அவர்களுடையதா அல்லது அதுவும் திருடி எடுத்து வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வங்கியில் இருந்து எடுத்து வந்ததை கண்காணித்து கைவரிசை காட்டிய கும்பல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், செப்.20-

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி மேரி குளோபல் (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். அங்கு 15 பவுன் நகையை வாங்கி கை பையில் வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் வந்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கிய மேரி குளோபல் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது கை பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அதோடு ரூ.15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் மேரி குளோபல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் இருந்து மேரி குளோபல் நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதே சமயம் நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் கும்பல் நேரடியாக நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
    • இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.

    திருமண நிச்சயம்

    இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    காரில் வந்த மர்மநபர்கள்

    இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.

    மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    நகை, பணம் கொள்ளை

    இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்காணிப்பு கேமிரா ஆய்வு

    இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×