search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர்"

    டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். #Prapanchan #DrJayachandran
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-



    5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். #MadhyaPradeshCM #ChiefMinisterKamalNath
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.

    மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபட்டது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.  இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.

    இதனிடையே போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக  கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். #MadhyaPradeshCM #ChiefMinisterKamalNath
    தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற ஹெல்ப்லைன் எண் வசதி மற்றும் அதற்கான கால் சென்டரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #WomenSafety #Helpline181
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது. பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



    பெண்கள் பாதுகாப்புக்கான ஹெல்ப்லைன் மையத்தை நிர்வகிக்க 5 வக்கீல்கள், 5 மனநல ஆலோசகர்கள் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

    இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. #WomenSafety #Helpline181
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.



    இந்நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைகிறது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய அரசின் நிவாரண பெட்டகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

    தமிழகத்தை உலுக்கிய ‘கஜா’ புயல் தனது அடையாளத்தை அழுத்தமாக பதியவிட்டு சென்றிருக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன.

    கண்ணும் கருத்துமாக கவனிக்கப்பட்ட விளைநிலங்களும், பிள்ளைகள் போல வளர்த்த தென்னை மரங்களும் கடுமையாக சேதமடைந்து விட்டன. வீடுகள் சேதமடைந்து இருக்கின்றன. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

    பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குவிந்து வருகிறது. ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்து வருகின்றன.

    இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகத்தை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தில் 27 அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. தற்போதைய சூழலில் எல்லா விதமான அத்தியாவசிய பொருட்களும் ஒருசேர மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது.

    குறிப்பாக ‘கஜா’ புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்திருக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 லட்சத்து 68 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண உதவிக்காக காத்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்படும்போது, அக்குடும்பமே பயன்பெறும்.

    அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 27 அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் ‘பேக்கிங்’ செய்து வருகின்றன.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ‘கஜா’ புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின்போதே குடும்ப அட்டைதாரர்களுக்கான நிவாரண பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகம் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிவாரணம் பெட்டகம் தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லதொரு திட்டம் என்று மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகை புறப்பட்டு சென்றார். 
    புதுவையில் காவலர்கள் ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார். #Puducherry #Narayanasamy #ChiefMinister
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 134 காவலர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சியின் நிறைவு மற்றும் அணிவகுப்பு நேற்று காலை கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியில் முதலிடம் பிடித்த காவலர்களுக்கும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் நம் மாநிலத்தில் காவல்துறைக்கு என்று தனித்திறமை உண்டு. இரவு பகல் பார்க்காமல் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது, குற்றங்களை உடனே கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை வெளியில் நடமாட விடாமல் பார்த்து கொள்வது. அதுமட்டுமின்றி தொடர் குற்ற செயல்கள் செய்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவது, போக்குவரத்து சரி செய்வது, சமூக பணிகள் செய்வது போன்றவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 2½ ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த போது புதுவையில் மக்கள் நிம்மதியாகவும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று உறுதி ஏற்றோம்.

    புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காக நாம், நமக்காக மக்கள் இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகின்றோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு முழு உரிமை தர வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியை காவல்துறை மிக சிறப்பாக செய்து வருகிறது. போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் அமைதியை காண முடியாது. புதுச்சேரியில் நிம்மதியாக இருக்கலாம், தொல்லை இருக்காது, குற்றம் செய்பவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீசாருக்கு அதிக சலுகைகள் வழங்க வேண்டும். பதவி உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவல்துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டியுள்ளது. போலீசார் குற்றங்களை தடுப்பதுடன், குற்றம் நடைபெறுவதற்கு முன் எப்படி தடுப்பது என்ற தகவல்களை சேகரித்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

    இந்த வழக்கை சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர். தற்போது மற்றொரு போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர். தற்போது பாரம்பரிய குற்றங்கள் மட்டுமின்றி, விஞ்ஞான ரீதியான குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இவைகளை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் கடுமையாக பேசக்கூடாது. உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். கடமையில் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும். திறமையை காட்டினால் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். #GajaCyclone #EdappadiPalaniswami #CentralTeam
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழு, இன்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    அப்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எப்போது ஆய்வு செய்வது? அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.   இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு அதிகாரிகளுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.



    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடலாம் என தெரிகிறது.

    கஜா புயல் ஏற்படுத்திய சேத  விவரங்களை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.   #GajaCyclone #EdappadiPalaniswami  #CentralTeam
    விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் மின்னணு கொள்முதல் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் வகையில் 7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்டத்திற்கான மென்பொருள் செயல்முறையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2100 அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



    மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் திறந்து வைத்தார்.

    காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    கனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் விழா தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாமர மக்களும் கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #SivanthiAditanar #Manimandapam

    முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூருவில் மூத்த குடிமக்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். மேலும் கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்த குடிமக்களுக்கு விருதுகளை வழங்கி முதல்-மந்திரி குமாரசாமி கவுரவப்படுத்தினார்.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நிறைவு செய்யும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் வங்கி அதிகாரிகள் விவசாயி களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும். மண்டியாவில் ஒரு விவசாயிக்கு கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுபற்றி மண்டியா மாவட்ட கலெக்டரிடம் தகவல் கேட்டு அறிந்தேன்.



    அந்த விவசாயி கடந்த 2007-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் விவசாயி இருந்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி தற்போது கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. அவருக்கு வங்கி சார்பில் கடன் வாங்கியதற்காக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. ஆனால் வங்கி சார்பில் கடனை செலுத்தும்படி விவசாயிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

    இந்த அரசு விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதுவும் தவறானது. விவசாயிகள் பிரச்சினைகளில் மட்டும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் நோக்கமாகும். இதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தேவையான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது, மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதனால் விவசாயிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக வாழ இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜெயமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.



    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam

    மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. #EdappadiPalaniswami #TNassembly
    சென்னை:

    மத்திய அரசு சமீபத்தில் புதிதாக அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வந்து மந்திரி சபையின் ஒப்புதலை பெற்றது.

    இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க கோரி சட்ட சபையில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு, 2010-ம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என அம்மா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக பிரதமரை கேட்டுக் கொண்டார்.

    எனினும், இந்த வரைவு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் கருத்து வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அத்தருணத்தில், 3.8.2011 அன்று புதுடில்லியில் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் வேணுகோபாலும், நமது பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளும் நீர்வள ஆதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான கோகாய்யை நேரில் சந்தித்து அம்மா குறிப்பிட்ட மறுப்புக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    அம்மாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.

    இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது.

    இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.

    அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக் கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரிய வில்லை.

    மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் கட்டிய அணைகள், அந்த அணையை கட்டிய மாநிலத்திற்கு சொந்தமானதாகும் மற்றும் அதனை இயக்குகின்ற மற்றும் பராமரிக்கக் கூடிய பொறுப்புகள் அம்மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால்  தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை.

    மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

    உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இவை, மத்திய நீர்வளக் குழுமம் அவ்வப்போது அளித்துவரும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகின்றன.

    மேலும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அணை பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அம்மா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இவ்வரைவு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கீடு செய்கிறது என்றும், மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, அண்டை மாநிலத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்றும், எனவே, இந்த மசோதா அவசரகதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

    இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சினைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.

    27.2.2006 மற்றும் 7.5.2014 ஆகிய நாளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு, அத்தீர்ப்புகளின்படி 21.11.2014 மற்றும் 7.12.2015 ஆகிய நாட்களில் முதற்கட்டமாக 142 அடி வரையில் அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டது.

    மேலும், மத்திய நீர் வளக் குழுமம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, தமிழ்நாடு அரசு, முல்லைப்பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடி வரையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதன்பொருட்டு, தமிழ் நாடு அரசு செய்து முடிக்க வேண்டிய மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளைச் செய்வதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காமல், தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசு இவ்விடையூறுகளை நீக்கி, பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும்.

    மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    “மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

    இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த தீர்மானத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். #EdappadiPalaniswami #TNassembly
    ×