search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141661"

    • கோவையில் காலை 9 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு மதியம் 1 மணிக்கு சென்று சேரும்.
    • திருப்பூருக்கு 10.03 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 10.19 மணிக்கும் செல்லும்.

    திருப்பூர் :

    கோவை-சேலம் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (எண்.06802) ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் கோவையில் காலை 9 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு மதியம் 1 மணிக்கு சென்று சேரும். இந்த ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. ரெயில் வட கோவைக்கு 9.07 மணிக்கும், பீளமேடுக்கு 9.15 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 9.20 மணிக்கும், இருகூருக்கு 9.27 மணிக்கும், சூலூருக்கு 9.34 மணிக்கும், சோமனூருக்கு 9.44 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 9.54 மணிக்கும், திருப்பூருக்கு 10.03 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 10.19 மணிக்கும் செல்லும்.

    இதுபோல் சேலம்-கோவை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (எண்.06803) ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 5.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊத்துக்குளிக்கு 3.44 மணிக்கும், திருப்பூருக்கு 3.58 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 4.09 மணிக்கும், சோமனூருக்கு 4.19 மணிக்கும், சூலூருக்கு 4.29 மணிக்கும், இருகூருக்கு 4.39 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 4.46 மணிக்கும், பீளமேடுக்கு 5.04 மணிக்கும், வட கோவைக்கு 5.14 மணிக்கும் செல்லும்.

    மேலும் சொரனூர்-கோவை, கோவை-சொரனூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பாலக்காடு டவுன்-கோவை, கோவை-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்–குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று ( 9ந் தேதி ) வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இதற்கான தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகி–றார்கள். மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தாரமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள எடயப்பட்டி கிராமம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 5 வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 1ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மயக்கமடைந்த சந்திரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் முதியவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்டர் மீடியனில் கார் மோதி சாலையில் நடுவில் கவிழ்ந்தது.

    சேலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது மனைவி பரிமளா (65). இவர்களது மருமகன் பாலு (45). இவர் சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு தேவையான கிராணைட் கற்களை கிருஷ்ணகிரியில் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து இன்று அதிகாலை சொந்த ஊரில் இருந்து ஒரு காரில் 3 பேரும் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் காண்டிராக்டர் தங்கவேல் என்பவரும் காரில் இருந்தார். காரை முருகனின் மருமகன் பாலு ஓட்டினார். இந்த கார் இன்று காலை 7 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த முருகன் காயம் அடைந்து கதறினார். மேலும் காருக்குள் சிக்கிய மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களை மீட்க முயன்றனர். மேலும் அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் முருகன் மட்டும் பலத்த காயமடைந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து சாலையில் கிடந்த காரை அப்புறப்படுத்திய அன்னதானப்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதி ரகசியமாக வெளியில் சென்ற விவகாரம்: சேலம் மத்திய சிறையில் டி.ஐ.ஜி. அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சி பகுதியை சேர்ந்தவர் வசந்த்(வயது 24).இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன . சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் சென்றார்.

    அப்போது சிறை வாசலில் காஞ்சிபுரம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்ய காத்து இருந்தனர் .ஆனால் சேலம் மத்திய சிறையில் இருந்து கேண்டீன் கதவை திறந்து அவர் வெளியில் அனுப்பப் பட்டதால் காஞ்சிபுரம் போலீசார் கைது செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் வேறு வழியில் செல்வதற்கு உதவியதாக சிறை வார்டன்கள் ரமேஷ்குமார், பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .மேலும் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஜெயில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சேலம் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் இன்று சேலம் மத்திய சிறையில் விசாரணை நடத்தினார். 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி விசாரணை நடந்தது.

    கைதி வசந்த் ரகசியமாக வெளியே அனுப்பப்பட்ட தில் மேலும் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இதில் எவ்வளவு பணம் கைமாறியது? மேலும் அங்குள்ள கேமரா பதிவுகள் குறித்தும் கைதியை வெளியில் அழைத்துச் சென்றவர்கள் விவரம் குறித்தும் பணியில் இருந்தவர்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணை முடிவில் அதிகாரிகள் சிலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சேலம் சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் பஸ் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையனை பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது.

    இந்த பஸ் கம்பெனிக்குள் நேற்றிரவு 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் திடீரென புகுந்தார். இதை பார்த்த அங்கு பணியில் இருந்து ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அந்த மர்ம நபர் அங்குள்ள கழிவறையில் பதுங்கி கொண்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்து வெளியில் வந்த அவரை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊழியர்கள் அவரிடம் விசாரித்தனர். அவர் வாய் திறக்க மறுத்து விட்டார்.

    அப்போது பொருட்களை திருடும் நோக்கில் கம்பெனியில் புகுந்திருக்கலாம் என்றும் இதே போல மேலும் பல இடங்களில் புகுந்து கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ஊழியர்கள் மர்ம நபர் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் வாய் திறக்க மறுத்து வருகிறார். இதனால் அவர் ஊமையா அல்லது அப்படி நடிக்கிறாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #TNPrisons
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
    சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். #SalemEarthQuake
    சேலம்:

    சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    காலை சுமார் 7.45 மணி அளவில் சேலம் நான்கு ரோடு, பழைய பஸ் நிலையம், கோரிமேடு, அழகாபுரம், மாமாங்கம், ரெட்டிப்பட்டி, வின்சென்ட், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, அரிசிப்பாளையம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

    வீடுகள், கட்டிடங்கள் லேசாக ஆடின. சில வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியால் கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென வீடுகள் குலுங்கியதால் எழுந்து வெளியே ஓடி வந்தனர்.

    மாடியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தெருவில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் சாலையில் சென்றவர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்கள்.

    கருப்பூர் பகுதியில் நில அதிர்வு தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. அந்த பகுதியில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

    தாரமங்கலம் மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான பூலவாண்டியூர், மல்லிகுந்தம், கூணான்டியூர், பள்ளிப்பட்டி மற்றும் மேச்சேரி ஒன்றியம் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தது. பொதுமக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தாரமங்கலம் 17-வது வார்டு ஆசிரியர் காலனி பகுதியில் 7.50 மணிக்கு சில வினாடிகள் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீட்டில் இருந்த சாமான்கள் உருண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி கூறுகையில், ‘‘தரைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் தெரிந்தது. எல்லோரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். அடுத்த சில நிமிடத்தில் இந்த நில நடுக்கம் அடங்கி விட்டது’’ என்றார்.

    இந்த பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி ராகவி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உறவினர்கள் அவருக்கு பயப்படாதே என ஆறுதல் படுத்தினார்கள்.


    ஓமலூர் பகுதியில் காலை 7.48 மணிக்கு திடீர் என்று பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 வினாடிகள் பூமி அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டில் பாத்திரங்கள் கீழே விழுந்தன. சிக்கனம்பட்டி, ரெட்டிப்பட்டி, புளியம்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு 2 வினாடிகள் முதல் 4 வினாடிகள் வரை நீடித்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மேட்டூர் அணையில் நீர் நிரம்பி இருக்கும் சமயங்களில் இது போல் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆகவே மாவட்ட நிர்வாகம் பூமியில் ஏற்பட்ட இந்த புவியியல் மாற்றத்தை கண்டுபிடித்து பொதுமக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலை 7.47 மணி அளவில் திடீர் என பஸ் நிலையம், வாங்கிள் பேட்டை, ஜெரீனாகாடு, தலைச்சோலை, செங்காடு, தாசம்பாடி, பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    அதன்பிறகு மீண்டும் காலை 8.26 மணிக்கு பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதிமக்கள் பீதி அடைந்தனர்.

    இதேபோல் தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. நாமக்கல், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் கிராமத்தில் நாகப்பன் மற்றும் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள பந்தலில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருந்தனர். அப்போது பந்தல் 2 நிமிடங்கள் ஆடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஏரியூர், நெருப்பூர், நாக மரை, பெரும்பாலை, சின்னம்பள்ளி, பழையூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கம்பைநல்லூர், நல்லம் பள்ளி பகுதியிலும் இன்று காலை 7.45 மணியளவில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது.

    அப்போது வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன அந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த மாணவர்கள் நில அதிர்வு ஏற்பட்டதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் பயந்து போன மாணவர்கள் அறையை விட்டு வெளியேறினர்.

    நில அதிர்வு குறித்து ஏரியூரை சேர்ந்த முருகேசன் கூறியதாவது:-

    இன்று காலை நான் எனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று லாரி ஒன்று நிலத்திற்குள் செல்வது போல் பயங்கரமான சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன நாங்கள் எங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூரையொட்டியுள்ள ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மா பேட்டை, கொமராயனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 7.30 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொது மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வீடுகளில் பூமிக்குள் ஒருவித சத்தம் வந்ததாக பேசிக்கொண்டனர்.

    உலகத்தில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராபி கருவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வானிலை ஆய்வு மையத்தில் உள்ளது.

    இந்த சீஸ்மோகிராபி கருவி கடந்த ஒரு மாத காலமாக பழுதாகி உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை.

    நில அதிர்வு தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SalemEarthQuake
    தான் வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டிய ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததால், மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டுடோரியல் கல்லூரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இந்நிலையில் இங்கு படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி, தனக்கு பாடம் நடத்தும் சுந்தரம் என்ற ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 4 வாலிபர்கள் அங்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

    தகவலறிந்த அங்கு வந்த போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம், மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதை திசை திருப்புவதற்காக மாணவி ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது. 

    இதில் காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கூறிய சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மற்ற பஸ்களை பயணிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்டத்தில் நேற்று சில அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த காரணங்களால் மாலையில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்களுக்காக காத்திருந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்ற மற்ற பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பஸ் டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பேரில் மேட்டூருக்கு 3 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    ×