search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143519"

    குஜராத்தில் கோர்ட்டில் சிறுத்தைப்புலி புகுந்ததால் இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்டம் சோட்டிலா நகரில் கோர்ட்டு உள்ளது. நேற்று கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை பிடிக்க முயன்றபோது அது கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அங்கும் இங்கும் ஓடியது. இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    சிறுத்தை கோர்ட்டில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்து கொண்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.

    அவர்கள் சிறுத்தையை பார்த்ததும் வெளியே ஓடி வந்து கதவை பூட்டி விட்டனர். 2 ஊழியர்கள் மட்டும் அங்கிருந்த மற்றொரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.

    உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த அறையின் ஜன்னலை உடைத்து 2 பேரையும் மீட்டனர்.

    அதன்பின் வனத்துறை அதிகாரிகள் கோர்ட்டு அறைக்குள் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு கோர்ட்டு உத்தரவினை மீறி விதி மீறல்களை செய்வதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டியுள்ளார். #GkVasan
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவினை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களை செய்கிறது. இதை அங்கிருக்கும் மக்களே முழுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். 8 வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து இறுதி முடிவு வந்த பின்னரே கருத்து கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், மாநில நெசவாளர் அணி தலைவர் அக்னி ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர். #GkVasan
    8 வழிச்சாலை திட்ட தொடர்பான வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #ThambiDurai

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

    தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai

    ஓடும் ரெயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ. 32 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தர விடப்பட்டுள்ளது. #Court

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த ரெயில் பயணி வெங்கடாசலம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர் வரும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது அவரை எலி கடித்துவிட்டது. இதனால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. கடுமையான வலியும் ஏற்பட்டது. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தும் எந்த முதல்உதவியும் அளிக்கப்படவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்.

    இதனால் ரெயில் எழும்பூர் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசிலும் அதிகாரிகளிடமும் புகார் செய்தார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வெங்கடாசலம் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார்.

    எலி கடித்த வேதனை ஒருபுறம், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவித்தது ஒருபுறம் என பல வழிகளில் துன்பத்துக்கு ஆளான வெங்கடாசலம் இதுபற்றி நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு கேட்டு இருந்தார்.

    மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி ஆர்.வி. தீனதயாளன், உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். இதில் ரெயில் பயணிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அசவுகரியத்துக்காக அவருக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    மேலும் மருத்துவ செலவு ரூ. 2 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரம் சேர்த்து ரூ. 32 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் 3 மாதத்தில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். #TNPSC

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தனியார் டி.வி. சேனல் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த திருநங்கை சுவப்னா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த தேர்வு முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம்ராஜேஸ்வரன், சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, முன்ஜாமீன் பெற்றார்.

    இவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சாம் ராஜேஸ்வரன் முறைகேடாக மாணவர்கள் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கீழ் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளதால், விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

    இதையடுத்து, அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சாம் ராஜேஸ்வரனுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார்.

    அகதிகள் விவகாரத்தில் குழந்தைகளை பெற்றோருடன் இணைக்க ஆகும் செலவை அரசுதான் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

    இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் டிரம்ப் பணிந்தார். அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரிக்கும் கொள்கையை திரும்பப்பெற்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமை யூனியன் ஒரு வழக்கை கலிபோர்னியா மாகாணம், சாண்டீகோவில் உள்ள கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டானா சாப்ரா, “ பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களுடன் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஆகிற செலவை பெற்றோர்கள் தர வேண்டியது இல்லை. அமெரிக்க அரசுதான் இந்த செலவை ஏற்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

    முதலில் ஒரு குழந்தையை பெற்றோருடன் இணைப்பதற்கு பெற்றோர் 1900 டாலர் (சுமார் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம்) தர வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #Tamilnews 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் சட்டசபையில் பேசுவது மரபல்ல என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    இதுகுறித்து இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



    ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற துணைத்தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய துரைமுருகனே, இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

    நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பொருளைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமி‌ஷனிலே அளிக்கலாம் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    நாட்டிலேயே முதன்முறையாக விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதுரை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23-ந் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

    அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதி படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர், மதுரை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விபத்தில் உயிரிழந்த கண்ணனுக்கு உரிய இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில் ‘’மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி, 2 நாட்களாக நின்றதும், இதை முறையாக எடுத்துச்செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காததாலும்தான் விபத்து ஏற்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதனையடுத்து நீதிபதி சஞ்சய்பாபா தாமாக முன்வந்து இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்த்தார்.

    வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பு வழங்கினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    4 வழிச்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, சாலைகளை முறையாக பராமரிப்பதும், விபத்து ஏற்படாமல் தடுப்பதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பணி. ஆனால் தங்களது பணியை கவனிக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்த வழக்கில், ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்க வேண்டும்.

    மனுதாரரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். எனவே, இழப்பீட்டில் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள பணத்தில், லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனம் 50 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 35 சதவீதமும் என கணக்கிட்டு மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    விபத்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×