என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மறியல்"

    • போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.

    • பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு வடக்கு முத்துச்சாமி அவுட் பகுதியில் 4 வீதி பொது மக்களுக்கும் பொதுவாக குடிநீர் குழாய் இருந்து வந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வந்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் பொதுக் குடிநீர் குழாய் இருந்து வந்த நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் அகற்றப்படுவதாக கூறி அகற்றப்பட்டுள்ளது.

    குடிநீர் குழாய் அகற்றப்படுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அகற்றப்படக்கூடாது, கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிநீர் குழாய் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


    இன்று காலை அப்பகுதியில் குடிநீர் குழாய் இல்லாததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு முத்துசாமி லே அவுட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பொது மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களை வரவழைத்து எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிநீர் குழாய் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
    • கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டக்காடு பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வட்டக்காடு பகுதியில் தாக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. மீன் வளர்ப்பவர்கள் இந்த ஏரியில் ேகாழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மீன்களுக்கு தீவனமான ேபாடுவதால் ஏரி நீர் மாசுப்படுகிறது. இந்த தண்ணீர் வட்டக்காடு பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

    இதை தடுக்க கோரியும் , அந்த ஏரியை தூர்வார கோரியும், ஏரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை அகற்றகோரியும், குத்தகையில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும் இன்று காலை 8 மணிக்கு கைக்குழந்தைகளுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டக்காடு பஸ் நிறுத்தத்தில் வட்டக்காட்டில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியிலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் 11 மணி வரை நீடித்தது.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கோவிந்தராஜ், போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், சப்-இன்பெக்டர் ராஜா, கருப்பூர் வருவாய்துறை அலுவலர் அறிவுக்கண்ணு, ஊராட்சிமன்ற தலைவர் சுதா, துைண தலைவர் பரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஏரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை அப்புறப்படுத்தப்படும் என்றும் குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அரசு பஸ்சை விடுவித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாக புகார்
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் வேடப்பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்கள் நாள்தோறும் வணங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து வேடப்பாளையத்தம்மன் கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கோவிலுக்கு வருபவர்களை ஆபாசமாக பேசுவதாகவும், கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக பலமுறை தாசில்தார் அலுவலகத்திலும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கோவிலை சொந்தம் கொண்டாடி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்தவாசி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

    இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்
    • 81 பேர் கைது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் பேரூராட்சி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் மாவட்ட தலைவர் கோபு முன்னிலையில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலின் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயும் அறிவிக்க வேண்டும். பால் ஊக்கத்தொகை போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுவாமிநாதன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வீரபத்திரன் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கறவை மாடுகளுடன் கிருஷ்ணகிரி வாணியம்பாடி செல்லும் சாலையில் கோஷங்கள் எழுப்பி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் 81 பேர் கைது செய்யப்பட்டு பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர். நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

    • சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காங்கேயம் :

    பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., பேச்சாளரை கைது செய்ய கோரி சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கேயம் நகர, ஒன்றிய பா.ஜ.க.வினர் காங்கேயம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே நகரத் தலைவர் சிவபிரசாத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கலாநடராஜன் மற்றும் சித்ரா மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
    • சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

    கன்னியாகுமரி:

    இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி க்கூடம், மருத்துவமனை என்று பொது மக்கள் வந்து செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அகற்ற கோரி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார், இரணியல் பஞ்சாயத்து செயல் அலுவலர் லெட்சுமி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது.
    • இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலைக்கு செல்லும் சோபனபுரம் முதல் டாப்செங்காட்டுபட்டிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. வனத்துறையினருக்கு சொந்தமான 14 கி.மீ. சாலை, கடந்த 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல், மராமத்து பணிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பெய்து வரும் தொடர் கனமழையாலும், மழைநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட முழு அடைப்புகளாலும் சாலையில் மண் அரிப்பு, பள்ளங்கள் ஏற்பட்டு சாலை, வாகன போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சாலையை புதுப்பிக்க கோரி மலைவாழ் மக்கள், தன்னார்வலர்கள், சாலைப்பயனீட்டாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

    பச்சைமலையிலுள்ள திருச்சி மாவட்டம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த தண்ணீர்பள்ளம், சேம்பூர், கம்பூர், கீழ்க்கரை, பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி, சோளமாத்தி, பெரும்பரப்பு, பெரிய சித்தூர், டாப்செங்காட்டுப்பட்டி, குண்டக்காடி, லட்சுமணபுரம், புத்தூர், மற்றும் சேலம் மாவட்டம் ஆத்திநாடு ஊராட்சியை சேர்ந்த வெங்கமுடி, சின்ன பக்களம், பெரிய பக்களம், ஓடக்காடு, ஓடக்காடுபுதூர், சின்ன மங்கலம், பெரிய மங்கலம்,

    நல்லமாத்தி, சின்ன நாகூர் பெரிய நாகூர், மலங்காடு, மேல்வஞ்சாரை, கால்வஞ்சாரை, நடுவஞ்சாரை, வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது. வணிகம், சுகாதாரம், வருவாய், மின்சாரம், கல்வி, உள்ளடக்கிய அத்யாவசியமான போக்குவரத்து இச்சாலை வழியாக மட்டுமே நடைபெறுகிறது. இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

    பா.ஜ.க. சாலை மறியல்

    சாலையை புதுப்பிக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்ததையடுத்து, துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் கட்சி பிரமுகர்கள் புறக்கணித்து சாலை மறியலை அறிவித்தனர். அதன் பேரில் நேற்று காலை உப்பிலியபுரம் அண்ணா சிலையருகே பா.ஜ.க. மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில அரசையும் வனத்துறையினரையும் வெகுவாக சாடி, கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஷ்மின் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார் பாதுகாப்பு பணியினில ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முன்அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதால் 61 ஆண்கள் 9 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் உப்பிலியபுரம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • நேற்றிரவு ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
    • கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. ஆர்.சி. சர்ச் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரிய சபைகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் தினந்தோறும் இரவு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்றிரவு இந்த ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த அந்த ஆலய மக்கள் இன்று காலை ஆலயம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அங்குள்ள மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லமுடியாமல் போனது. அவை அனைத்தும் சாலைகளில் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏரல் தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    • பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை விரிவாக்க பணியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இந்நிலையில் தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் குழி தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது. இதனால் இருக்கூர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இருக்கூர் ஊராட்சி, காலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் போர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை பெய்ததால், போர் தண்ணீரும் சேருகலந்த நீராக வருவதால், அதை குடிக்க முடியாமலும், சமையல் செய்ய முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக இருக்கூர் ஊராட்சிமன்றத் தலைவி ஜானகியிடம் காலனி மக்கள் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்து இருக்கூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் தார் சாலையின் குறுக்கே அமர்ந்து இன்று காலை சுமார் 8 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தியிலிருந்து ஜேடர்பா ளையம் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்து பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்த தகவல் கபிலர்மலை வட்டார் வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் இருந்து வருவதால் உடனடியாக வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தனர்.

    சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் காலதாமதமாக சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இரு மாணவி–களையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
    • இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

    அப்போது கண்டக்டர் இளநகரில் பஸ் நிற்காது என கூறி அந்த இரு மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இனி இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    ×