search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • ஏற்கனவே நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
    • கெஜ்ரிவால் 8-வது முறையாக ஆஜராகாத நிலையில், தற்போது 2-வது முறையாக நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், அம்மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பியது. தனக்கு அனுப்பிய சம்மன் சட்ட விரோதமானது எனக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

    தொடர்ந்து ஏழு முறை இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கையோடு 8-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போது, நேரில் ஆஜராகமாட்டேன். காணொலி வாயிலான ஆஜராக சம்மதம் தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் நாங்கள் பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆஜராக உத்தரவிடும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையில், வருகிற 16-ந்தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கிறது என பா.ஜனதா மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை இவரது வீட்டில் சோதனை நடத்தியது.
    • திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் இருந்து விலகினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தபஸ் ராய் திகழ்ந்து வந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருக்காக குரல் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதனால் கட்சி மீது அதிருப்தி அடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில இணைந்துள்ளார். மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதா கொடியை பெற்றுக் கொண்டு அந்த கட்சியில் இணைந்தார்.

    "சொந்த நலனுக்கான கட்சியில் இருந்து விலகிய தபஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி "தபஸ் ராய் எங்கள் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கட்சியுடன் ஆலோசனை நடத்தி, உயர்த் தலைவர்கள் சம்மதம் பெற்ற பிறகு  கட்சியில் இணையும்படி கேட்டுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    பா.ஜனதாவில் இணைந்த தபஸ் ராய் "தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராட விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியது. கட்சியில் இருந்து யாரும் முன்வந்து ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. மேலும் மனவேதனை அடைந்த எனது குடும்பத்தினரிடம் ஆறுதலாக கட்சித் தலைவர்கள் பேசவில்லை. ஆகவே, நான் மிகவும் கவலை அடைந்தேன். பா.ஜனதாவால் என்னுடைய வீட்டிற்கு அமலாக்கத்துறை அனுப்பப்படவில்லை. சுதிப் பனார்ஜிதான் அனுப்பினார். அவர் என்னைக் கண்டு பயப்படுகிறார். பொறாமைப்படுகிறார்" என்றார்.

    முறைகேட்டில் சிக்கியவர்கள் பா.ஜனதாவில் இணைந்தால் அவர்களை மத்திய அமைப்புகள் கண்டு கொள்ளாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தபஸ் ராய் அமலாக்கத்துறையால் சோதனைக்கு உட்பட்ட நிலையில் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

    • கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச் 11-ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.

    அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு 24-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும், செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டதற்கு, செந்தில் பாலாஜி தரப்பு இன்று நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து, தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை மார்ச் 11-ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    • தனக்கு அனுப்பப்படும் சம்மன் சட்ட விரோதமானது என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • ஏழு முறை சம்மனை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது காணொலி வாயிலாக ஆஜராக இருப்பதாக தகவல்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 8-வது முறை சம்மன் அனுப்பியிருந்தது.

    இதனால் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காணொலி வாயிலாக ஆஜராக தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்து, ஆம் ஆம்தி கட்சியை அழிக்க பா.ஜனதா அமலாக்கத்துறை மூலம் சதி செய்வதாக அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை. அவரை ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த மாதம் 27-ந்தேதி அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜெயலில் உள்ளார்.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தில் நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.

    அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டு.
    • விசாரணை என்ற பெயரில் கைது செய்ய முயற்சி என பா.ஜனதா மீது விமர்சனம்.

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு மந்திரிகளை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் அம்மாநில முதல்வரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். நான் எந்த தவறும் செய்யவில்லை என கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.

    கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை மூலம் பா.ஜனதா அழிக்க பார்க்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மேலும் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்வதுதான் அமலாக்கத்துறையின் குறிக்கோள். இதன் மூலம் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா முடக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டியது.

    ஆறு முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, எப்படி சம்மன் அனுப்ப முடியும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நீதிமன்றம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், மார்ச் 16-ந்தேதி நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    • 6 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • தற்போது 7-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

    5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது. இதையடுத்து 7-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.

    இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு செல்லவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

    தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • மத்திய புலனாய்வு அமைப்புகள் சுமார் 30 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளன.
    • சோதனைக்கு பின் பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, பல தனியார் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த 3 புலனாய்வு அமைப்புகளில் 2 அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

    பா.ஜ.க. அரசாங்கத்தால் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முழு தேசத்திற்கும் தெரியும். 2014-ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.

    பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.187.58 கோடி வழங்கிய 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை பா.ஜ.க.வுக்கு எந்த நன்கொடையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே நன்கொடை வழங்கி வந்த நிறுவனங்கள், சோதனைக்குப் பிறகு அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.

    விசாரணை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோதமானது என நாங்கள் கூறவில்லை. விசாரணையை எதிர்கொண்ட பின் இந்த நிறுவனங்கள் ஏன் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்குகின்றன என்பது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிப்பது வெறும் தற்செயலானதா?

    இந்த விவகாரத்தை நாங்கள் நீதித்துறையிடமும், மக்களிடமும் கொண்டு செல்வோம். இரு இடங்களிலும் நாங்கள் உங்களைத் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.க. தனது நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி இல்லையெனில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் இந்த நன்கொடைகள் குறித்த விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்றார்.

    • தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன்.
    • மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

    இவர் ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை கைது செய்து உள்ளனர்.

    தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

    இந்த வழக்கில் குற்றபத்திரிகை தயாராக உள்ளது. இந்த சமயத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பக்கூடும் என்று வாதாடினார்.

    பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரினார். விசாரணை முடிவில், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • பெண்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு.
    • உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற பகுதியில் ஷேக் ஷாஜகான் என்பவர் பெண்களின் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண்களை கூட்டு பாலியல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாக்கிறது என பா.ஜனதா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்பான ஆறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி ரேசன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஷேக் ஷாஜகானின் உதவியாளரக்ள் ஷிபு ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகியோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஷேக் ஷாஜகான் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அமைக்கப்பட்டுள்ள முகாமில் புகார் அளிக்கலாம் என போலீசார தெரிவித்துள்ளனர்.

    • அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.
    • வழக்கை அடுத்த மாதம் 16-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை.

    அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அடுத்த மாதம் 16-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதில் வருகிற 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை எதையும் கட்டுப்படுத்த அரசு தயாரில்லை. அதற்கு மாறாக விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை நசுக்கி வருகிறது.

    அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.


    சி.ஏ.ஜி.யை முடக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக எந்த அறிக்கையும் வருவதில்லை. விவசாயிகள் தற்கொலை பற்றி எந்த அறிக்கையும் தரவில்லை. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக மோடி முடக்கி வைத்துள்ளார். இது ஜனநாயக நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.

    அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

    ×