search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150493"

    • பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளை யத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கலான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை, மற்றும் ஆன்மீக தளங்களுக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

    அதே போன்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்ககளாக பஸ் நிலையம் அருகே ஓடக்கூடிய பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சில இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

    இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு பயணிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

    எனவே சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் உடனடியாக கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

    உடனடியாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டையில் காத்பாடா தெரு, பென்சிலர் லைன், லெபர் லைன் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தங்க சாலை அருகே உள்ள குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் குடிநீர் சுத்தமாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க காலிமனைகளில் தேங்கி உள்ள குப்பை கழிவுநீரை அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சிதுறை ஆணை பிறப்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது சம்பந்தமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நகராட்சிகள் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து டெங்கு பரப்பக்கூடிய கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    கடந்த ஆண்டு டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களை முதன்மையாக எடுத்து கொண்டு கொசு உற்பத்தியை தடுக்க நகராட்சிகள் பலவித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் குப்பைகள் அதிகம் சேரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி வாயக்கால்களை சுத்தம் செய்து கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பராமரிப்பின்றி இருக்கும் காலிமனைகளில் புதர்கள் மண்டியும், குப்பை மற்றும் தண்ணீர் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

    எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை நகராட்சிகள் சட்டத்தின்படி புதுவை மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் மழை கழிவுநீர் முதலியவற்றை 15 நாட்களுக்குள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்ககூடிய செயல் என்பதால் இது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்ககூடிய குற்றமாகும்.

    எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஆணைப்படி காலிமனை உரிமையாளர்கள் தங்களது காலிமனையை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் சுகதாரத்தோடும் வாழவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்கள் விட்டை சுற்றியுள்ள இடங்களில் நீர்தேங்கும் ஆதாரங்களை நீக்கி நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அந்த வகையில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல இடங்களில் கால்வாய்களை சுத்தம் செய்யாததாலும், பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தினாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்கி நிற்கின்றன. குறிப்பாக அச்சுக்கட்டு பகுதியில் அபுபக்கர் நகர், காளியம்மன் கோவில் தெரு, கண்மணிபாக்கம், உசேன் அம்பலம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன.

    இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முறையான வாய்க்கால் அமைத்து கழிவுநீர் செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    தஞ்சை பூக்காரத் தெருவில் பாதாள சாக்கடை உடைந்து சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரதெரு முருகன் கோவில் அருகே செல்லும் சாலை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    இந்த பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் அதிகமாக உள்ளன. மேலும் பூக்கார தெருவில் பூக்கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன. இந்த சாலையை தினமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

    பூக்கார தெரு, முருகன் கோவில் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் பாதாள சாக்கடை உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி கொண்டே உள்ளது. இதனால் சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியாமல் அதில் விழுந்து விடுகின்றனர். அவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையில் உள்ள பாதாள சாக்கடை உடைப்பில் கற்களை வைத்துள்ளனர். இதையறிந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சுதாரித்து செல்கின்றனர். இந்த பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பல விதமான நோய்கள் பரவுகிறது.

    இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். #AmaravathiRiver
    கரூர்:

    அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் அமராவதி அணையில் தண்ணீர் அதிகளவு நிரம்பும் போது தான் காட்டாற்று வெள்ளமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீரை வைத்து கரூர் கடைமடை பகுதியில் விவசாயம் நடந்தது.

    தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் கரூர் அமராவதி ஆறு மணற்பாங்காக தான் காட்சி தருகிறது. மேலும் குடிநீருக்காக ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீரின் நீர்மட்டம் குறைந்திருப்பதால் தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர ஆற்றில் மணல் திருட்டு பிரச்சினையும் ஆங்காங்கே நடப்பதால் இயற்கை வளம் சுரண்டப்படுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    இந்த நிலையில் கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலந்து தான் ஓடுகிறது. இதன் காரணமாக கரூர் அமராவதிபாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் மூக்கினை பிடித்து கொண்டே செல்வதை காண முடிகிறது. மேலும் கழிவுநீர் ஒருபுறம் ஓடினாலும், மற்றொரு புறம் சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் லைட்அவுஸ் பாலத்தின் கீழ்புறத்தில் செம்பழுப்பு நிறத்திலும், கருமை நிறுத்திலும் அருகருகே கழிவுநீர் செல்வதாக கூறுகின்றனர். தூய்மையான நீரோடிய சென்னை கூவம் நதி சாக்கடையாய் மாறிபோனதற்கு காரணம் கழிவுநீர் அதில் விடப்பட்டதனால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே கரூரின் நீராதார பொக்கிஷமான அமராவதி ஆற்றினை வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தும் விதமாக அதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாயப்பட்டறை கழிவுநீர் அதில் கலக்கிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர் அமராவதி ஆற்றின் நிலை குறித்து சமானிய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளரும், சமூக ஆர்வலருமான சண்முகம் கூறுகையில், கரூர் செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், பெரியஆண்டாங்கோவில், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறி பாசனவாய்க்கால் மற்றும் ஆறுகளில் கலக்கிறது. இதன் காரணமாக அந்த இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் மாசடைகிறது. விவாசய நிலங்களில் இந்த நீரை பாய்ச்சுவதால் பயிர்கள் உற்பத்தி குறைகிறது. இந்த நீரில் மக்கள் குளிப்பதால் தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இனி அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகளால் அந்த நீரும் மாசடைய வாய்ப்பிருக்கிறது. எனவே அமராதி ஆற்றில் கழிவுநீர், சாயக்கழிவுநீரை திறந்து விடுபவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 
    லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் ஊற்றப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கழிவு நீரை பெற்று வெளி இடத்துக்கு கொண்டு சென்று ஊற்ற தனியார் டேங்கர் லாரிகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் டிரைவர்கள் ஊற்றி வருகிறார்கள்.

    இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் பொது மக்களை டேங்கர் லாரி டிரைவர்கள் மிரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கழிவுநீரால் அண்ணா நகர், சூளைமேடு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    புங்கோடையில் உள்ள புகளுர் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா? என்று குளத்துப்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை எதிர்பார்த்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்திலிருந்து புங்கோடையில் உள்ள புகளுர் வாய்க்காலில் கழிவு நீர் கலக்கும் வகையில் சிறு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய நிலத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் , இந்தகால்வாய் வழியாக சென்று புங்கோடையில் உள்ள புகளுர் வாய்க்காலில் கலக்கிறது. கழிவு நீர்க்கால்வாய் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பலமாதங்கள் ஆனதால் கழிவுநீர் கால்வாயில் பல்வேறு வகையான செடி கொடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது.

    தூர்வாராததால் அடர்ந்த செடி, கொடிக்குள் கொசுக்கள் தங்கி முட்டையிட்டு ஆயிரக் கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் அருகமையில் வீடுகளில் உள்ள பொதுமக்களை கொசுக்கள் தீண்டி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் பல்வேறு நோய்கள் வரும் நிலை உள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் கழிவு நீர் கால்வாய் தூர் வாரப்படாததால் விவசாய நிலத்திலிருந்து வரும் கழிவு நீர், மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் இரண்டும் அதிக அளவில் வருவதால் கழிவு நீர் கால்வாயில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் புகுவதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி பல்வேறு வகையான நோய்கள் பொதுமக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளத்துப்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×