search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 153498"

    • பயிற்சிகள் மூலம் பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
    • சத்குரு வழங்கும் தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகள் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    கோவை:

    கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.

    தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் ஈஷா யோகா மையம் வந்து யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.

    ஈஷா சார்பில் இரண்டு நாள் பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதியோகி திவ்யதரிசனம், தியானலிங்கத்தில் நாத ஆராதனை, லிங்கபைரவியில் அபிஷேகம், நாட்டு மாடுகளை பராமரிக்கும் மாட்டுமனை, உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

    BNI என்பது உலகளவில் 75 நாடுகளில் 300,000 உறுப்பினர்களை உடைய உலகின் முன்னணி வணிக பரிந்துரை அமைப்பு. BNI உறுப்பினர்கள் பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய BNI ஊழியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும், தங்களுடைய இலக்குகளையும் தாண்டி சாதிப்பதற்கும் தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.

    இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள் மூலம் அவர்களின் உடல் மன நலம், திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அங்கு அய்யப்பன் அவர்கள் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், "எனக்கு எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் இருக்கும். இங்கு வந்து இன்று காலை யோகப்பயிற்சிகள் செய்த போது நிறைய மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துவந்தால் குடும்ப வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் திறம்பட இயங்க முடியும்" என்று பகிர்ந்துகொண்டார்.

    பேபி வேர்ல்ட் உரிமையாளர் அமர் கூறுகையில், "இது மிகவும் வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சிகளை தொடர்ந்தால், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருந்தது" என்றார்.

    சத்குரு அவர்கள், அனைவரும் பின்பற்றும் வகையிலான எளிய யோகப்பயிற்சிகள் வழங்குவது மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் திறன் மிகுந்தவர்களாக வளர அவர் வழங்கும் 'ஈஷா இன்சைட்' போன்ற தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    ஒரு வெற்றிகரமான தொழில் புரியத் தேவையான தகுதி குறித்து அவர் சொல்கையில், "எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்திப்பதை விடுத்து, நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று பார்ப்பதாலும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது அதுவாகவே நடக்கும்" என்கிறார்.

    • மொத்தம் 73 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.
    • இவ்வகுப்புகளில் ஆண் மற்றும் பெண் கைதிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கோவை:

    ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

    சிறைகளில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்வதால் மன அழுத்தம், உடல் நலப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சினைகளில் இருந்து அவர்கள் வெளி வர உதவும் விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் கற்றுக்கொடுத்து வருகிறது.

    அதன்படி, நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய சிறைகள், பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகள் என மொத்தம் 73 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

    சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைக்கு நேரில் சென்று 'உயிர் நோக்கம்', 'உப யோகா', 'சூரிய சக்தி' போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர். இவ்வகுப்புகளில் ஆண் மற்றும் பெண் கைதிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    • ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.

    கோவை:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

    சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

    • விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி அந்தந்த துறையைச்சேர்ந்த நிபுணர்கள் பேசினார்கள்.
    • மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    கோவை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் & விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து நடத்திய உழவர் வயல் தின விழா மற்றும் விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.

    செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள், களை மற்றும் பூச்சி மேலாண்மை, பயிர்களைத்தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கான இயற்கை வழி தீர்வுகள் என விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளைப்பற்றி அந்தந்த துறையைச்சேர்ந்த நிபுணர்கள் பேசினார்கள்.

    குறிப்பாக, நூற்புழு வகைகள், அதன் தாக்குதல்கள், அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி முனைவர் சீனிவாசன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

    பயிர்களை தாக்கும் நோய்கள், நோய்க்காரணிகளான பூஞ்சைகள், வைரஸ்கள் குறித்து பல தகவல்களுடன் பயிர்நோயியல் துறையைச்சேர்ந்த முனைவர் அங்கப்பன் விளக்கினார். உயிரி தொழில்நுட்பவியல் துறையைச்சேர்ந்த முனைவர் நா.மணிகண்ட பூபதி, உதவி தோட்டக்கலைத் துறை இயக்குநர் நந்தினி, பயிற்சிப் பிரிவு மற்றும் வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தை சேர்ந்த முனைவர் ந. ஆனந்தராஜா, ஈஷா மண் காப்போம் இயக்கத்தை சேர்ந்த ஜெ. பிரபாகரன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

    மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    • கல்வி உதவி தொகையால் பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் தொடர்வதாக மாணவி நெகிழ்ச்சி
    • கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ஈஷா சார்பில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    கோவை:

    ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள சிவாங்கா குடிலில் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    நல்லூர்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஜிதா பேசுகையில், "நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஈஷா வித்யா பள்ளியில் முழு கல்வி உதவி தொகையில் படித்தேன். இப்போது நான் அவிநாசிலிங்கம் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஈஷாவின் கல்வி உதவி தொகையால் தான் பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். கல்வி உதவி தொகை மட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி போன்ற அரசு தேர்வுகளுக்கு ஈஷா மூலம் எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நான் என்னை தயார் செய்து வருகிறேன். சத்குருவின் அருளால் தான் இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சத்குருவிற்கும் ஈஷாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    இதேபோல், முள்ளாங்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி பேசுகையில், "எனக்கு அப்பா, அம்மா இல்லை. பெரியம்மாவும், பாட்டியும் தான் என்னை பார்த்து கொள்கிறார்கள். ஈஷாவின் உதவியுடன் கோவை பி.எஸ்.ஜி பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தேன். இப்போது கோவை கலைமகள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஈஷாவின் உதவி இல்லாமல் நான் படித்திருக்க வாய்ப்பில்லை. ஈஷாவிற்கு நன்றி" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கோவை ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் சாவித்ரி, கலைமகள் கல்லூரியின் முதல்வர்  மாலா, முகவரி அறக்கட்டளையின் நிர்வாகி ரமேஷ், ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அலோகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கினர்.

    தொண்டாமுத்தூர் பகுதி கிராமத்தில் வாழும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மட்டுமின்றி பல்வேறு வழிகளில் ஈஷா உதவி வருகிறது. கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி, உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர மலைவாழ் கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஈஷாவின் வாகனங்கள் மூலம் தினமும் போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் NMMS என்ற தேர்வு எழுதி ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் கல்வி உதவி தொகை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது தவிர, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரேம குமாரி நீட் தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கும் உதவி வருகிறது. மேலும், அவர்களிடம் கலை ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    • வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன
    • நூற்பு கைத்தறி நெசவு சமூகத்தின் கைத்தறி ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது

    'பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி' என பல்வேறு அம்சங்களுடன் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோவை ஈஷா யோகா மையத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

    தமிழ் மண்ணின் வாழ்வியலுடன் தொடர்புடைய அம்சங்களை கொண்டாட்டங்களின் மூலம் புதுப்பிக்கவும், புத்துணர்வூட்டவும் இவ்விழா மஹாசிவராத்திரியை தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்பட்டது.

    அதன்படி, தினமும் மாலை வேளையில், ஆதியோகி முன்பு வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈஷாவில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஸ்வாமி அதிந்திரா அவர்கள் நாயன்மார்களின் கதைகளையும், தேவாரப் பாடல்கள் இயற்றப்பட்ட வரலாற்றையும் பொதுமக்களுக்கு எளிய முறையில் புரியும்படியாக கதை சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டும் செய்து காட்டினார்.

    இது தவிர, தொன்மையான கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம், மஹா ஆரத்தி ஆகியவை தினமும் தொடர்ந்து நடத்தப்பட்டன.

    மேலும், 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, நூற்பு கைத்தறி நெசவு சமூகத்தின் கைத்தறி ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை, தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மேக்கருன், மணப்பாறை முறுக்கு போன்ற கிராமிய உணவுப் பண்டங்களின் விற்பனை, தேன் விற்பனை ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

    • ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.
    • தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.

    "பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்" என சத்குரு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன் தேவாரம் பாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சிறப்புப் பரிசுகளை வழங்க உள்ளோம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்" என கூறியுள்ளார்.

    முன்னதாக, இது தொடர்பாக ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு பேசுகையில், "12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள் நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும் இங்கு வந்து தேவாரப் பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும். இது ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் எங்கிருந்து வந்தாலும் ஆதியோகி முன்பு தேவாரம் பாடிவிட்டு அவர்கள் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

    மஹாசிவராத்திரி விழாவில் 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்ற தேவாரப் பாடலுடன் துவங்கியது. அதேபோல் விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும் 'மாதர் பிறை கண்ணி யானை' என்ற தேவாரப் பாடல் பாடப்பட்டது. ஈஷாவில் உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வெளியிட்ட தேவார பாடல் ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதியை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார்.
    • ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது.

    கோவை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் ஜனாதிபதி சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரபுவதி முர்மு வந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். ஜனாதிபதி முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.

    பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்றார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். 

    • ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருகிறார்.
    • அதனால் இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று தமிழகம் வருகிறார்.

    கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

    இந்நிலையில், ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 9 மணிக்கு பிறகு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் யாத்திரை வந்தவர்களை மேள தாளத்துடன் வரவேற்றனர்.
    • பல்லக்குகளை ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், பழங்குடி மக்கள் தோள்களில் சுமந்து வந்தனர்.

    தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் கொண்ட தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்னையில் இருந்து கோவை ஈஷா யோகா மையம் வரை பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

    இதில் மிக முக்கிய அம்சமாக 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகளுக்கென பிரத்தியேகமாக 63 பல்லக்குகள் உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திரளும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேரில் பவனி வரும் நாயன்மார்களை பல்லக்குகளில் ஏற்றி பவனி வரும் வைபவம் நிகழ்த்தப்பட்டது.

    அந்த வகையில் சென்னையிலிருந்து தேருடன் சிவ பக்தர்கள் பாத யாத்திரையாக 28 நாட்களில் 7 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 640 கிலோ மீட்டர் கடந்து கோவை ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு கூடிய திரளான கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் யாத்திரை வந்தவர்களை மேளத் தாளத்துடன் வரவேற்றனர். 

    பின்னர் ஈஷா யோகா மையத்தை அடைந்த அவர்கள் அங்கு தேரில் இருந்த 63 மூவர் திருமேனிகளை தனித் தனி பல்லக்குகளில் ஏற்றி பக்தி பரவசத்துடன் பவனி வந்தனர். பல்லக்குகளை ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், பழங்குடி மக்கள் என அனைவரும் தங்களது தோள்களில் சுமந்து ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை வலம் வந்தனர்.

    இதுதவிர, பெங்களூரு, நாகர்கோவில், புதுக்கோட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்தும் ஆதியோகி தேருடன் பாத யாத்திரையாக வந்த பகத்தர்களும் இந்த வைபவத்தில் இணைந்து கொண்டனர்.

    நம் தமிழ்நாட்டில் சைவம் தழைத்தோங்கிட வீதி வீதியாய் அலைந்து திரிந்து திருமுறைகள் பாடி மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திய பெரும் பங்கு நாயன்மார்களையே சேரும். அவர்கள் பாடிய சிவத் தலங்கள் பாடல் பெற்ற தலங்களாக இன்றும் அறியப்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியத்தில் அவர்களின் கொடை மகத்தானது. சைவத்திற்கும், தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய நாயன்மார்களை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களின் புகழை பரப்பும் வகையிலும் இந்த பாதயாத்திரை நிகழ்த்தப்படுகிறது.

    இந்த பாத யாத்திரை ஈஷா யோகா மையம் சென்றடைந்த பின்னர் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவடைகிறது. மேலும் பாத யாத்திரை வந்த பக்தர்கள் அனைவரும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம்.

    கோயம்பத்தூர்:

    பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்.18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசு தலைவர் மற்றும் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

    அதன் பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும். இதற்கிடையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முஹூர்த்த காலத்தில் சத்குரு வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடைபெறும்.

    குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் திரு. வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர்.

    விழாவிற்கும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும் மஹா அன்னதானம் வழங்கப்படும்.

    கடந்தாண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

    இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம்.

    • பண்டிட் ஜெயதீர்த் மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • நாளை புல்லாங்குழல் இசைக்கலைஞர் சஷாங்க் சுப்ரமணியம் இசை நிகழ்ச்சி நடக்கிறது

    கோவை ஈஷா யோக மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா இன்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி மிக விமரிசையாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்ஷா' கலைத் திருவிழா இன்று மாலை தொடங்கியது.

    இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப்புகழ் பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

    விழாவின் தொடக்கமாக பண்டிட் ஜெயதீர்த் மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அவரின் அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும் மெய் மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தனர்.

    அகில இந்திய வானொலியில் 'ஏ-டாப்' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின் ஒளி' என வர்ணிக்கப்படும் ஜெயதீர்த் மேவுண்டி, பண்டிட். ஜஸ்ராஜ் கவுரவ் புரஸ்கார், யங் மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத் கவுரவ் புரஸ்கார், சண்முகானந்தா சங்கீத் ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து நாளை (பிப். 16) புல்லாங்குழல் இசைக்கலைஞர் சஷாங்க் சுப்ரமணியம் இசை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (பிப். 17) மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

    ×