search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
    • பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.

    கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் பா.ஜனதா முறியடித்தது. தற்போது, பா.ஜனதாவை மக்கள் ஆசீர்வதித்து, அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கச் செய்துள்ளனர்.

    இந்த அமோக வெற்றியால், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பா.ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது. இலவசம், வெற்று வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பா.ஜனதாவுக்கு முன்எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர்.

    இந்த வெற்றிக்காக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குஜராத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த சரித்திர வெற்றி, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை மீது பா.ஜனதா கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    இந்த வெற்றிக்கான பெருமை, பிரதமர் மோடியின் தலைமை, அவரது புகழ், நம்பகத்தன்மை ஆகியவற்றையே சாரும்.

    ஜே.பி.நட்டா, அமித்ஷா, பூபேந்திர படேல், சி.ஆர்.பட்டீல் ஆகியோரின் கடின உழைப்பால், பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் பிரசாரத்துக்கு சென்றுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.
    • சந்திப்பின்போது மத்திய உளவுத்துறை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்கூறி இதுதொடர்பாக மத்திய குழு விசாரிக்க வலியுறுத்த போவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்தார்.

    மோடி கூட்ட நிகழ்ச்சிக்கான பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகவும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் செயல்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்புத் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கவர்னரை சந்தித்து புகார் செய்தார்.

    இதற்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினரும் அதுபற்றி குறை சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவே அவர்கள் வாய்மொழியாக கூறிவிட்டு சென்றனர்.

    மேலும் தமிழக காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, அப்போதுள்ள நவீன வசதிகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகிறது. பழைய பாதுகாப்பு உபகரணங்கள் வழக்கம் போல மாற்றப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. தரப்பிலும் அண்ணாமலையின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

    பிரதமர் ஒரு இடத்துக்கு வந்தால் மத்திய அரசு தான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும். டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்துதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். அவர்களை தாண்டி தமிழக போலீசார் எதுவும் செய்ய முடியாது என்றார்.

    இதுதொடர்பாக பா.ஜனதா துணைத் தலைவர் சக்கரவர்த்தி கடும் கண்டனம் தெரிவித் ள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரதமரின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை பார்த்து கொள்ளும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களை கண்காணிப்பது, பரிசோதிப்பது எல்லாவற்றையும் மாநில அரசுதான் பார்த்து கொள்ளும்.

    அதில்தான் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளது. செயல்படாத மெட்டல் டிடெக்டர் வழியாக எல்லோரும் கூட்ட அரங்குக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?

    அதனால்தான் குறையை கண்டுபிடித்து எதிர்காலத்திலாவது திருத்தி கொள்ளத்தான் விசயத்தை சுட்டி காட்டுகிறோம். ஆனால் விஷயத்தை திசை திருப்ப காவல்துறையும், அரசும் முயற்சிக்கிறது என்றார்.

    இந்த நிலையில் டெல்லியில் பிரசாரத்துக்கு சென்றுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின்போது மத்திய உளவுத்துறை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்கூறி இதுதொடர்பாக மத்திய குழு விசாரிக்க வலியுறுத்த போவதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியம்.
    • ஒவ்வொரு வெற்றியும் அரசின் வெற்றி.

    புதுடெல்லி :

    டெல்லியில், ஒரு ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பா.ஜனதா அளித்து வரும் வாக்குறுதி ஆகும். பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது.

    ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியம். இப்பிரச்சினை குறித்து, வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். அந்த விவாதம் முடிந்த பிறகு அச்சட்டத்தை கொண்டு வருவோம்.

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளன. அக்குழுக்கள் அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது சிவில் சட்டத்தை பா.ஜனதா மட்டும் ஆதரிக்கவில்லை. அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதை எல்லோரும் மறந்து விட்டனர்.

    நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்டசபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.

    காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எனது தனிப்பட்ட வெற்றியாக பார்க்கவில்லை. மோடி மந்திரிசபையில் நான் ஒரு மந்திரி. ஒவ்வொரு வெற்றியும் அரசின் வெற்றி.

    370-வது பிரிவு இருப்பதால்தான், இந்தியாவுடன் காஷ்மீர் ஒட்டிக்கொண்டுள்ளது என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால், அந்த பிரிவு நீங்கிய பிறகும், காஷ்மீர் இந்தியாவுடன்தான் உள்ளது.

    காஷ்மீரில் 30 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் அடிமட்டத்தில் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது.

    மிகக்குறைவான பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. கல்வீச்சு சம்பவம் இல்லை. இவையெல்லாம் அரசின் சாதனைகள்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் சோதனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. யாருக்காவது குறை இருந்தால், கோர்ட்டை அணுகலாம்.

    திகார் சிறையில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சலுகைகள் அளிக்கப்படுவது பற்றிய வீடியோ உண்மையானதா என்பதை ஆம் ஆத்மிதான் சொல்ல வேண்டும். நான் சிறை சென்றபோது, மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், சிறைக்கு போனபிறகும் மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி. தொகுதி எண்ணிக்கை மற்றும் ஓட்டு சதவீதத்தில் முந்தைய சாதனைகளை முறியடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகார எழுச்சியால் உலகம் கடுமையான விளைவுகளை சந்தித்தது.
    • லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றன.

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதிகரிக்கும் சவால்களை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இது கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைமை மாறியுள்ளது, அல்கொய்தா மற்றும் ஐஎஸ் அமைப்புகளின் செல்வாக்கு பிராந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உள்ளது.

    சோவியத் ஒன்றியம் உடைந்ததன் பின்னணியில், ஆப்கானிஸ்தானில் தலிபானின் அதிகார எழுச்சியால் உலகம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக அமெரிக்க இரட்டை கோபுர கொடூர தாக்குதலை நாம் அனைவரும் பார்த்தோம்.

    தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றங்கள் நம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. அல்கொய்தாவுடன், தெற்காசியாவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளும் தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றன.

    பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களையோ அவர்களின் வளங்களையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ஆதரிப்போரின் இரட்டைப் பேச்சையும் நாங்கள் உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம்.
    • அதிக ஓட்டுகள் வாங்குவோம்.

    ஆமதாபாத் :

    குஜராத் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது. எனவே மனுதாக்கலின்போது அவரும் கலந்து கொண்டார்.

    அப்போது அமித்ஷா கூறும்போது, "குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும். இங்கு மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம். அதிக ஓட்டுகள் வாங்குவோம்" என கூறினார்.

    • பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்" என உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் நடைபெற்ற "இந்தியா சிமென்ட்ஸ்" நிறுவன பவள விழாவில் பேசியிருக்கிறார்.

    அன்னைத் தமிழ் மொழி மீது உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி. எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மொழி.

    ஆகவே தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தமிழ் மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலையாய பணி.

    ஆகவே, தமிழ்மொழிக் கல்விக்காகத் தி.மு.க. அரசு ஆற்றிய பணிகள் சிலவற்றை உள்துறை மந்திரிக்கு நினைவூட்டிட விரும்புகிறேன்.

    இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக, 1997-2001-ல் தமிழ்மொழி, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு, முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது.

    பள்ளிப்படிப்பில் 10-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் என தி.மு.க. அரசில்தான் சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.

    கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் தி.மு.க.வின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967-68-ல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூ.900 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் கழக அரசின் திட்டம்தான்.

    உள்துறை மந்திரி இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில், கலைஞர் கருணாநிதி 2010-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார்.

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரெயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா 2020-ம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்றுள்ளார்.

    இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவிட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில் கற்பதற்கு வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்கள் அன்னைத் தமிழ் மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும், உள்துறை மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
    • தமிழக மக்கள் மீது பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் பயணம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

    அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாநில பாஜக ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இன்னும் என்ன செய்ய வேண்டும்? நான் பிரதமரிடம் ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார்.

    மாநில தலைவர் என்ற முறையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவரும் தமிழக மக்களுக்கு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். தமிழக மக்கள் மீது பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளுக்காக பா.ஜ.க.வினர் மீது எப்படிப்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர் என்று எங்கள் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாநில துணை தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் அளித்தனர். இதனை கவனித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று அமித்ஷா உறுதி அளித்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
    • மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பவள விழா நிகழ்ச்சியில்மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார். அங்கு இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார்.

    இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றியதாவது:-

    இந்தியா சிமெண்ட்ஸ் 75 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக அந்நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். விளையாட்டு துறையில் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது எங்கள் நட்பு வளர்ந்தது. விளையாட்டு வீரர்கள் நலன் மற்றும் உயர்வுக்காக பாடுபட்டவர் சீனிவாசன்.

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது. வளர்ச்சி என்பது நாட்டின் கட்டமைப்பை பொறுத்து அளவிடப்படுகிறது. தரமான கட்டமைப்புக்கு அடிப்படையானது சிமெண்ட்.

    இந்தியா சிமெண்ட்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் சீனிவாசன். பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு செல்ல கட்டமைப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

    வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க இந்தியா தீவிரமாக முயன்றுள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

    புதிய தொழில்நுட்பம், கட்டமைப்புகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆய்வு, வளர்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

    கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியா தற்சார்பு நாடாக உயர்ந்தது. 5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 60 கோடி மக்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

    2023-ம் ஆண்டுக்குள் ஜி20 நாடுகள் பட்டியலில் இந்தியா 2ம் நிலையை பிடிக்கும்.

    உலகிற்கு எடுத்துகாட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது.

    தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானம் 91 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக சுமார் 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது.
    • ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.

    திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர்.

    தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    • இமாசல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    சுல்லா

    இமாசல பிரதேசத்தில் நாளை (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

    இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காங்ரா மாவட்டத்தின் சுல்லாவில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தனது பிரசாரத்தில் அவர் கூறியதாவது:-

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் இணைந்த இரட்டை என்ஜின் அரசு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ், மருத்துவக்கல்லூரிகள் என மாநிலத்தில் வளர்ச்சிக்கான அனைத்து வழிகளையும் திறந்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் தாக்குதல், அயோத்தியில் ராமர் கோவில், புனித தலங்கள் சீரமைப்பு என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூலம் காங்கிரஸ் செய்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) எனும் தவறை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு சரி செய்து விட்டார்.

    தற்போது காஷ்மீர் நம்முடையதா இல்லையா? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதா, இல்லையா?

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் நமது வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்து வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அது குறித்த பேச்சு கூட இல்லை. உரி, புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், ஒரு எதிர்மறை டுவீட்டை போட்டு விடுவார். ஆனால் மக்கள் அவர்களுக்கு செவிமடுப்பதில்லை.

    பரம்பரை அரசியல் செய்து வரும் ஒரு கட்சியில் (காங்கிரஸ்) கடின உழைப்பை கொடுக்கும் மக்களுக்கு இடமில்லை. அந்த கட்சியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், புகழ்பெற்ற குடும்பத்தில் நீங்கள் பிறக்க வேண்டும்.

    நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ராஜா-ராணி காலம் ஓய்ந்து விட்டது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    சென்னை:

    மத்திய மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக நாளை இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவில் அங்கு தூங்குகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்ட மீண்டும் முயற்சிக்கிறார்.

    அதற்காகவே நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே சென்னை வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    நாளை இரவு இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார். இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றைத்தலைமை அது எடப்பாடி பழனிசாமி. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார் என்றனர்.

    • நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
    • மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை அதிகாரிகளுடன் (ஐ.பி.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ×