search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடகம்"

    தாம்பரம் அருகே பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழிப்பறி கும்பல் பறித்துச் சென்றதாக நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #CashRobbery
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழிப்பறி கும்பல் பறித்துச் சென்றதாக நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியையும் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.60 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சியை சேர்ந்தவர் முகமது அன்சாரி ராஜா(வயது28). இவர் நேற்று முன்தினம் மாலை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கை மற்றும் வயிற்றில் கத்தியால் கிழித்த காயங்களுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது காரில் வந்த கும்பல் தன்னை குத்திவிட்டு ரூ.20 லட்சத்தை பறித்துச்சென்றதாக தாம்பரம் போலீசில் தெரிவித்தார்.



    பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன், சேலையூர் உதவி கமிஷனர் வினோத் சந்தாராம், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், பிரவீன் மற்றும் போலீசார்் முகமது அன்சாரி ராஜாவை தீவிரமாக விசாரித்தபோது, அவரே கை மற்றும் வயிற்றில் பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

    மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துவந்த முகமது அன்சாரி ராஜா, ஆர்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் சென்னை வந்துவிட்டு திரும்பும்போது, சென்னையில் வசிக்கும் திருச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கொடுக்கும் பணத்தை ஊரில் இருக்கும் அவர்களது குடும்பத்திடம் கொண்டுசென்று ஒப்படைப்பது வழக்கம்.

    தனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் இப்படி பணம் கொண்டுசெல்லும்போது நாடகமாடி தனக்கு தேவையான பணத்தை அபேஸ் செய்துவிடலாம் என அவர் திட்டமிட்டார். அதன்படி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மனைவியுடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார். திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் மனைவியை தங்கவைத்தார்.

    மன்னார்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் உறவினர் நபீஸ் என்பவர் மூலம் ரூ.60 லட்சத்தை கொடுத்து, வீட்டில் கொடுக்கும்படி கூறினார். திருவல்லிக்கேணியில் நபீஸ் இந்த பணத்தை முகமது அன்சாரி ராஜாவிடம் நேற்று முன் தினம் கொடுத்து மன்னார் குடிக்கு கொண்டுசென்று கொடுக்க சொன்னார்.

    பணத்தை பெற்றுக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு முகவரியில் கொடுப்பதாக முகமது அன்சாரி கூறினார். தாம்பரம் சானடோரியத்தில் மனைவியை வரவழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்து கால்டாக்சியில் ஏற்றி திருமுல்லைவாயிலுக்கு அனுப்பிவிட்டார். பின்னர் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் ஏற செல்வதுபோல சென்று பிளேடால் கை மற்றும் வயிற்று பகுதியில் கிழித்துக்கொண்டு, காரில் வந்த கும்பல் பணத்தை பறித்துச்சென்றதாக நபீசிடம் கூறிவிட்டு போலீசில் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது.

    போலீசார் திருமுல்லைவாயிலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அங்கு பணத்தை மறைத்துவைத்திருந்த தகவலை ஆர்த்திகா தெரிவித்தார். போலீசார் அந்த பணத்தை சோதனை செய்தபோது ரூ.53 லட்சம் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ரூ.60 லட்சத்தை முகமது அன்சாரி ராஜா ஏமாற்றிவிட்டதாக போலீசில் நபீஸ் புகார் செய்தார். கணவன், மனைவியிடம் இதுதொடர்பாக விசாரித்தபோது, மேலும் ரூ.7 லட்சத்தை திருமுல்லைவாயிலில் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரி ராஜா, அவரது மனைவி ஆர்த்திகா இருவரையும் கைது செய்தனர். ரூ.60 லட்சம் ஹவாலா பணமா? எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறைக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோயும், தொற்றுநோயும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.



    தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.

    துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #SterlitePlant

    ×