search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • அமல்ராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகிறார்.
    • 4 பேர் கும்பல் அமல்ராஜை செங்கலால் தாக்கி கொல்ல முயன்று உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவைகுளம் நவமணி 2-வது தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது29) இவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் (31) மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை தாள முத்துநகர் திரேஸ்நகர் பகுதியில் அமல்ராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடன் முன்பு வேலை செய்தவர் உட்பட 4 பேர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இதனைக் கண்ட அமல்ராஜ் அதனை தடுத்து நிறுத்தி விலக்கி விட்டு அவர்களை சத்தம் போட்டார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அமல்ராஜை அடித்து உதைத்துள்ளனர்.

    வீட்டுக்கு வந்த அமல்ராஜ் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் அவர்கள் காயம் பட்ட இடத்தில் மருந்து போட்ட பின்னர் பேசிக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டுக்கு வெளியே அமல் ராஜ் வரும்போது அங்கு வந்த அதே 4 பேர் கும்பல் அமல்ராஜை மீண்டும் செங்கலால் தாக்கி அவரை கொல்ல முயன்று உள்ளனர்.

    இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    அதில் தாக்குதலின் ஈடுபட்டது டி.சவேரி யார்புரத்தை சேர்ந்த தாமஸ்,செண்பகராஜ், சந்தோஷ், மில்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    • முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது
    • மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தையல் எந்திரத்தையும், பேராசிரியை பாத்திமா பாபு குடங்களையும், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் சேலைகளையும் வழங்கினர்.

    தூத்துக்குடி:

    முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. விழாவில் தையல் எந்திரம், குடங்கள், சேலை என 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பீட்டர் பர்னாண்டோ தலைமை தாங்கினார். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் ரோமால்டு, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் ஜான்சன், பியோ பரதர், எழுத்தாளர் பீட்டர் பிரான்சிஸ், தேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தையல் எந்திரத்தையும், பேராசிரியை பாத்திமா பாபு குடங்களையும், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் சேலைகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் சசிக்குமார், சேவியர் சில்வர, டெரன்ஸ், கல்யாண சுந்தரம், அலாய், அமலன், சேரானந்தம், சுடலைமுத்து, தராஜ், பிரைட்டன், தினேஷ், ஆனந்த் பாண்டியன், வர்கீஸ், பிரவின், சல்வடோர், இனிகோ, தினேஷ், கிரிஸ்டோ, ராஜா, சுரேஷ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், நிஷாந்த், கென்னடி, ஜே.பி., மற்றும் பாத்திமா நகர், திரேஸ்புரம், குரூஸ்புரம், லூர்தம் மாள்புரம், லயன்ஸ்டவுன், இனிகோ நகர், காந்திநகர், மரக்குடி தெரு, மாதா கோவில்தெரு இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஹெர்மென் கில்டு வரவேற்றார். எழுத்தாளர் ஆசிரியர் நெய்தல் அண்டோ சிறப்புரை நிகழ்த்தினார். எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்

    • அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்
    • அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

    கேக் வெட்டினார்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்க மோதிரம்

    பின்னர் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • முகாமில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வலிமையான பூத் என்ற நிகழ்ச்சிக்கு உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மாவட்ட தலைவர் சித்ராங்தன் ஆலோசனைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 60 பூத் கமிட்டிகளிலும் கிளை தலைவர்கள் மூலம் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு பூத்திருக்கும் 5 பேர் நியமனம் செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தெற்கு மண்டலத்தில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, கே.டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி, தங்கமாள்புரம் மேல்நிலைப்பள்ளி, புதிய துறைமுகம் மேல்நிலைப்பள்ளி,தெர்மல் நகர் காமராஜர் பள்ளி, குழந்தை இயேசு துவக்க பள்ளி உட்பட 17 வாக்குசாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,முகாமில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    வலிமையான பூத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில்,தெற்கு மண்டல தலைவர் மாதவன்,மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கிருஷ்ணன், ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டனர்.

    இதில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி,துணை தலைவி சிலம்பொலி,அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தெற்கு மண்டல தலைவி சுமித்ரா, பொதுச் செயலாளர் பிரபு, துணைத்தலைவர் பொய்சொல்லலான், வர்த்தகப் பிரிவு தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாரிராஜ்,செல்லப்பன் சக்திகேந்திர, பொறுப்பாளர்கள் துர்க்கையப்பன் ,முத்துகிருஷ்ணன், பாலகுமார், முனியசாமி, செல்வம் , பலவேசம், முகேஷ் குலசை ரமேஷ், அருண்பாபு, ராஜ்குமார், விக்னேஷ், தீபன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.

    • முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் சாலை ஓரங்களில் லாரி செட்டுகளும், தடி யார்டுகளும் அதிக அளவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    இதனால் அங்கு வரும் அதிக பாரம் ஏற்றும் ட்ரெய்லர் மற்றும் டாரஸ் லாரிகளும் பிரதான சாலைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும், தொடர் விபத்துகளும் நடந்து வருகிறது.

    முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் இருக்கும் லாரி செட்டில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் ட்ரெய்லர் லாரிகளால் திருச்செந்தூர் பிரதான சாலையில் நீண்ட நேரமாக பஸ்களும், மற்ற வாகனங்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகரில் நடைபெற்றது.
    • காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகர் ஞானமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சின்னதங்கம் தலைமை தாங்கினார். இந்து வியாபாரிகள் சங்க தலைவர் தனராஜ், முள்ளக்காடு சங்கத் தலைவர் முனிய தங்கம் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள், கஞ்சா விற்பனை பெருகிவிட்டன. இதில் காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    மேலும் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சார்பாக பொதுமக்கள் வியாபாரிகளுக்கு ஓர் அறிவிப்பு என்ற பெயரில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு, மூன்று, மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, ரவுடியிசம் பெருகிவிட்டன.

    இதுவரை காவல் துறையால் இவைகளை கட்டுப்படுத்தவோ, குற்ற வாளிகளை கண்டு பிடிக்கவோ முடியவில்லை. பலமுறை குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுத்தும், மனுக்கள் அளித்தும் இது வரை எந்த பலனும் இல்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்களின் உடைமை களையும், பணத்தையும் தாங்களே பாதுகாத்திட முத்தையாபுரம், ஸ்பிக்நகர், எம். சவேரியார்புரம், முள்ளக்காடு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக கேட்டுக்கொள்கி றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • குரும்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    குரும்பூர்:

    குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி குரும்பூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் மாணவர்களிடம் பேசும் போது "மாணவர்கள் ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும் எனவும், கவனத்தை திசை திருப்பாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். மேலும் 'குட் டச்', 'பேட் டச்' பற்றியும் விளக்கம் அளித்தார். பின்னர் மாணவ- மாணவிகள் போலீஸ் நிலையத்தை ஆர்வத்துடன் சுற்றி பார்வையிட்டனர்.

    இந் நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள், மோசஸ், ஆறுமுக நயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொலை வழக்கில் எர்னஸ்ட் பால் என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
    • இதுவரை 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த துஷாபந்த் பெஹரா (வயது25) என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் (42) என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி எர்னஸ்ட் பால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதை அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். அவரது உத்தரவின் பேரில் எர்னஸ்ட் பாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

    இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ்.
    • காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ். இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்று கூறி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை கண் டித்து பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 15-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

    ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

    கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

    எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் நான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காமராஜ் ராஜினாமா செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    • 3 பேரும் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஹேன்சன் பால்ராஜ் தலைமையான போலீசார் சோரீஸ்புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து சோதனையிட்டதில் பொட்ட லங்களில் 330 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் விற்பனை செய்வதற்காக அந்த கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அய்யனடைப்பு பிரசாந்த் (வயது 30), மாதவன் நகர் ஆகாஷ் (22),மட்டக்கடை ஹரிஹரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
    • தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவகாமி, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கப்பிரிவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    விருதினை, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனிடம் இருந்து தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜன் பெற்றுக்கொண்டார்.

    இதில், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார், துணைப்பதிவாளர் சுப்புராஜ் மற்றும் கூட்டுவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பந்தல்ராஜா உள்ளிட்ட 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    • இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 249 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 20) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இதில் கைதான நெல்லை மாவட்டம் பாளை சாந்திநகர் மெயின்ரோடு பகுதியை பந்தல்ராஜா(34), கயத்தாறு பகுதியை சேர்ந்த அஜித்கண்ணன் (27), வெயிலுமுத்து (44), ஜெயமணிகண்டன் (21), மாரியப்பன் (19), பாளையை சேர்ந்த இசக்கிராஜா (27) மற்றும் மார்ட்டின் (21) ஆகியோரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். கடந்த 21-ந்தேதி தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (22), பிரதீப்குமார் (22) மற்றும் லிங்கம்(64) ஆகியோரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (22) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 11 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 249 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

    ×