search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

    இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் தமிழினத்தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

    எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.

    போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.

    கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

    ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.
    • நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும்.

    ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.

    ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.
    • சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெண்ணமலையில் பொதுமக்களை சீமான் சந்திக்க இருக்கிறார்.
    • சீமான் தங்கியிருக்கும் ஓட்டல் முன் போலீசார் குவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம்.

    வெண்ணமலை கோவில் நில பிரச்சனை சம்பந்தமாக மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். இதற்கான கரூர் சென்ற அவர் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த ஓட்டல் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களை சீமான் சந்திப்பதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த தகவல் அறிந்ததும் சீமான் தங்கியுள்ள ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். சீமானை இவர்கள் சந்திக்க சென்றதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் பால சுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறிநிலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்பாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் கடந்த மாதம் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்திப்பதற்காக சீமான் கரூர் சென்றுள்ளார். சீமானை சந்திக்க பொதுமக்களும் கூடியிருந்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூடியிருந்தனர். இந்த நிலையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள்
    • பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மொபைல் ஆப் மூலம் நாடு முழுவதும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும். அவரை (சீமான்) போன்றவர்கள் வெறும் போலி அரசியல்வாதிகள். எந்த நேரத்தில் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள். எனவே அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே எங்கள் கனவு என்றார் வன்னி அரசு.
    • திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது என்கிறார் மத்திய மந்திரி எல்.முருகன்.

    நாமக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது.

    இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

    எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?

    உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்?

    இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.

    நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம் என தெரிவித்தார்.

    • மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும்.
    • கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம்.

    திருச்சி:

    பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து, 8,096 ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இணையவழி முதல் சுற்று தேர்வில், 2,008 பேரும், 2-ம் கட்ட தேர்வில் இவர்களில் இருந்து 992 பேரும் தேர்வாகினர். இறுதி சுற்றில் 75 சதவீதம் அதற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் மாநில அரசின் கனவு ஆசிரியர்களாக தேர்வாகினர்.

    இவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 75 முதல், 89 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 325 ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 2 குழுக்களாக டேராடூன் சென்று திரும்பினர்.

    இதில் 90 முதல் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வருகிற 23-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை அவர்கள் பிரான்ஸ் நாட்டை சுற்றி பார்க்கின்றனர்.

    பிரான்ஸ் செல்லும் ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களது பயணம் சிறக்க வாழ்த்தினார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுவாக சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் ஆசிரியர்களை மாணவனாகிய நான் அழைத்துச் செல்கிறேன். தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளோம்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது ஆசிரியர் சார்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகாரம் செய்யும் விதமாகவும் முதல் முறையாக ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

    பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும். சில நேரங்களில் மாத்திரைகளை கொடுக்க தெரியாமல் கொடுத்து சோகமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    அது மாதிரி நடைபெறக்கூடாது என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி, சரியான முறையில் ஊட்டச்சத்து வழங்கவும் சில சமயங்களில் வயதிற்கு தகுந்த வளர்ச்சி குழந்தைகளுக்கு இல்லாத நிலையில், அதுபோன்ற குழந்தைகளையும் கண்டறிந்து பிள்ளைகளின் உடல்நலம் சார்ந்து ஒவ்வொன்றையும் அனைத்தையும் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதலமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது.

    கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.
    • அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.

    ஆகவே தமிழர்களின் நிலத்தையும், வளத்தையும், உடல் உழைப்பையும் உறிஞ்சி ஆண்டிற்கு ரூ.2,378 கோடி நிகர லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிரிஸ்பேன் நகரங்களில் ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
    • ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகிற 27-ந்தேதி ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் ராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.
    • விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    விக்கிரவாண்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜரானார்.

    கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

    • விமல் நடித்த சார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
    • சார் திரைப்படத்தை நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியுள்ளார்

    SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  "சார்". 

    இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது..

    என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனா, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.  தம்பி போஸ் வெங்கட் அவர்களுக்கும், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொள்கிறேன் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் இனிய வாழ்த்துக்கள், நன்றி.

    இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருபெரும் திராவிடக்கட்சிகளும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, முறையாள மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.

    மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால் தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.

    இயற்கைச்சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும். இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.

    தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழை வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும். 2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காது இருந்துவிட்டு திமுக அரசும் தொடர்ச்சியாக மக்களை வெள்ளப்பாதிப்பிற்குச் சிக்கித் தவிக்கவிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் முதன்மை காரணம்.

    சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல நூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? அல்லது அக்கறை இல்லையா? இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும். தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், தலைநகர் சென்னைக்குத் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×