search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    • 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது.
    • போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

    தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக சீரழித்துள்ளது திமுக அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23,000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துத்துறையில், தற்போது 4,000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு, வெறும் 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தி பெருங்கொடுமையையும் புரிந்துள்ளது.

    அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 25,000 பணியிடங்களுக்கு, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படாதது ஏன்? பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் 8,000 பேருக்கு, கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை வழங்க மறுப்பது ஏன்? 90,000 போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காதது ஏன்? நிதிநிலையைக் காரணம் காட்டி பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி 13,000 கோடி ரூபாயையும் சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு எடுத்துக்கொண்டது ஏன்?

    இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்? மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பினை ஒவ்வொரு ஆண்டும் ஈடுகட்டும் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பினை மட்டும் ஈடுகட்ட மறுப்பதேன்? பேருந்துகள் தனியார்மயம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

    உலக முதலீட்டாளர்களையெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துவந்து, பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாக பெருமை பேசும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்கமுடியாமல் திணறுவது ஏன்? இதுதான் திமுக அரசு ஏற்படுத்திய நூற்றாண்டு வளர்ச்சியா? மதுக்கடைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதுதான் திராவிட மாடல் சாதனையா? போக்குவரத்துத்துறையையில் தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால் அவர்களின் உரிமைகளை யார் பாதுகாப்பது? இதில் எங்கே இருக்கிறது சமூகநீதி? போக்குவரத்துக் கழகத்தையே லாபத்தில் நடத்த திறனற்ற திமுக அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மக்களின் வறுமையைப் போக்கும் என்பதை எப்படி நம்ப முடியும்? 'எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியை நடத்துகிறோம்' என்று கூறிவிட்டு, குறையைத் தவிர வேறு எதையுமே கூற முடியாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்.

    கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி முழுதாக வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது போக்குவரத்து ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். பொதுப்போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படாமலிருக்க அரசு போக்குவரத்துக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும் - போக்குவரத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணாமலை.
    • அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.

    கோவை:

    கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணாமலை முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    பொதுமேடைகளில் அண்ணாமலையும், சீமானும் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது அவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

    இவ்வாறு அரசியலில் எதிர், எதிர் துருவங்களாக உள்ள 2 தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டபோது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றைப் போல், பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரைஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வதும், தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலை, சீமானின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும்.
    • தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் 'சமஸ்கிருதம்' தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?

    அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் 'தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது' என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

    ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்?
    • பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாது,

    "திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

    இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஐயா ஈ.வே.ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப்பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது.

    இராமரை கடவுளாக வணங்கும் மக்கள், இராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர். அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் திமுக ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா?

    "இராமர் எங்களின் முன்னோடி" என்ற பாஜகவின் வர்ணாசிரம குரலை அப்படியே திமுகவும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பாஜகவின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா திமுக? திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் திமுக கூறிவந்த சமூகநீதி என்பது சனாதனம்தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்? அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    திமுக அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா கலியன் பூங்குன்றன் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்? பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் திமுகவின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் "ராமர் எங்கள் முன்னோடி" என்ற கருத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா? இதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

    ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் "திராவிட ராமர் ஆட்சி" பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை மாண்புமிகு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நாட்டுமக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
    • வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

    தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு '2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்' என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து 'வரிகொடா' இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு.

    ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

    • மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    நம்முடைய தாத்தாக்கள் இரட்டைமலை சீனிவாசனார், அயோத்திதாச பண்டிதர், 'புரட்சியாளர்' சட்டமேதை அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் காட்டிய வழியில் பயணித்து, ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கும் ஆதித்தமிழ்க்குடி மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபடவும், மறைந்த அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் 21-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

    சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    • கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.
    • குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை?

    சென்னை :

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?

    ஏற்கனவே, கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.

    இத்தோடு, தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து இக்கொடுந்துயரில் பங்கெடுக்கிறேன்.

    தம்பி பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது?
    • பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.

    ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.

    திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புபடை வீரர்களின் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு.

    ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் மீண்டும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.

    கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் மீண்டுவரமுடியாமல் முடங்கிய சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மூச்சுவிடும் நிலையில் தற்போதைய திமுக அரசின் மின்கட்டண உயர்வு அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி மீண்டும் முடக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, குருதி உறிஞ்சும் அட்டைப்போல மக்களைக் கசக்கிப் பிழிந்து, வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும். பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    ஆகவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார்.
    • தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவுநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி, மதவாதத்தை பற்றி பேசும் பா.ஜ.க., சாதி பிரிவினையை பற்றி பேசும் பா.ம.க ஆகிய கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பா.ஜ.க. கடும் பின்னடைவை சந்தித்து வருவது அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு இருப்பது போலீசார் எடுத்த நடவடிக்கையாகும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை தமிழ்நாடு அரசும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

    பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களை தொடர்ந்து சீமான் அவதூறாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது வரை பல தேர்தல்களை சந்தித்த சீமான் ஒரு தேர்தலிலாவது முழுமையான டெபாசிட் வாங்க முடிந்ததா? முதலில் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க வைத்து விட்டு பின்னர் தி.மு.க. தலைவர்கள் குறித்து பேசட்டும்.

    ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார். ஈழத்தின் வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
    • கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

    அவரது வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு பைக் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது. அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார். பின்னர் இன்னொரு பைக்கில் மற்றொருவர் வருகிறார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வருகிறார்.

    அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரமித்தனர். ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்கள் அவரை தாக்கியதை பார்த்து பின்னோக்கி சென்றனர். ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது சொமேட்டோ டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த ஆரமித்தார். உடனே அவர் பின்னோக்கி ஓடினார்.

    வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்க இன்னும் 3 பேர் சுற்றி இருந்த தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×