search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீனம்"

    • போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
    • ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கூட உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன.

    இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

    போருக்கு பயந்து வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மீது தான் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

    இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறும் போது, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.

    அவர்கள் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு சுரங்கப்பாதையில் ரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் "ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என்றார்.

    ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

    • காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் காசாவின் வடக்கு, மத்திய பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளது.

    இதையடுத்து தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் அங்கிருந்து ஏராளமானோர் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா கோரியது.

    இதையடுத்து விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    ரபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். அந்த நகரம் வழியாக காசாவின் பிற பகுதிகளுக்கு உதவி பொருட்கள் செல்ல எல்லைகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகளை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பு கூறும்போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மோசமானது, ஒழுக்க ரீதியில் அருவருப்பானது. காசாவில் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. ரபாவில் போர் இலக்குகள் தொடரும். காசா பகுதி முழுவதிலும் ஹமாசை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றனர். இதற்கிடையே ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    • நீதி மற்றும் அமைதிக்கான எங்கள் தற்போதைய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, கடிதம் எழுதியுள்ளார்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கடந்த 13-ந்தேதி காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே உயிரிழந்தார். ஐநாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழந்ததற்கு இஸ்ரேலே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஐநா பணியாளராக பணியாற்றி வந்த இந்திய ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது துரதிஷ்டவசமானது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த அதிகாரியின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம்.


    முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல், காசாவில் உள்ள மக்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகளால் நிகழ்த்தப்பட்ட பரந்த இனப்படு கொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் ஒரு பகுதியாகும்.

    பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு, பிராந்தியத்தில் நீதி மற்றும் அமைதிக்கான எங்கள் தற்போதைய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
    • பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கிடையே போர் நிறுத்தம் காரணமாக 130 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் பிணைக்கைதிகள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் இசை விழாவில் கொல்லப்பட்ட 22 வயதான ஷானி லூக் மற்றும் அமித் புஸ்கிலா (வயது 28), இட்சாக் கெலரென்டர் (56) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
    • ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால், காசாமுனை பேரழிவை சந்தித்துள்ளது. காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமாக உள்ள ரபாவில் இருந்து வெளியேறுமாறு அவர்களை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

    இதையடுத்து ரபாவில் இருந்து அவர்கள் வெளியேறி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரத்தில் குறைந்தது 4.50 லட்சம் பாலஸ்தீனியர்கள் ரபா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
    • 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.

    முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

    பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

    குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    • ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா மீது தாக்குதல் நடத்துவம் அவசியம் என்கிறது இஸ்ரேல்.
    • சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பாலஸ்தீன மக்களுக்கு ஒரு இடத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டம்.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

    வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காசாவின் முக்கிய நகரான ரஃபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியனில் 1.4 மில்லியன் மக்கள் ரஃபா நகரில் உள்ளன. ரஃபா பாதுகாப்பான பகுதியை என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளத. இந்த நிலையில் தாக்குல் நடத்தப்பட உள்ளதால், மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில் "1.4 மில்லியன் மக்கள் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வது அவசியம். எங்கே?. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அதற்கான ஒரு இடத்தை உருவாக்குவோம். ஹமாஸ் நிர்வகித்து வரும் நான்கு பட்டாலியன்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகவதற்கு மக்களை வெளியேற்றுவது முக்கிய பகுதியாகும்" என்றார்.

    • காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்து முகாமில் தங்கியுள்ளனர்.
    • லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

    காசா மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தாலும், இந்த போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்குலைந்துள்ள வடக்கு காசாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும்போது பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் அன்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் சேகரித்து வழங்க முடிவு செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டது.

    சுமார் 200 டன் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்கள் கப்பல் மூலம் காசா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உணவுப் பொருட்களுடன் சைப்ரஸ் நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டுள்ளது.

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கப்பல் காசா சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவுப் பொருட்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்க காசா அருகே கடல் பாலம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த கடல் பாலம் செயல்பாட்டிற்கு வர பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம்

    ஐந்து மாத போரில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில், பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து பொதுமக்களை படுகொலை செய்தனர். சுமார் 1200 பேரை கொலை செய்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    சண்டைக்கிடையில் ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    ×