search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூரம்"

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை கோவில் முக்கிய இடத்தில் உள்ளதால் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் நடந்த இந்த கொடிஏற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதி யில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

    இரவு பராசக்தி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12.30 மணிஅளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவுக்கான ஏற்பாடுகள் காலை முதல் நடந்தது. அதில் குண்டத்தில் இறங்குவதற்காக பக்தர்கள் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


    ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ஆடி மாதம் நம் தமிழக கோவில்கள் திருவிழா போல் களை கட்டி இருக்கும் மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்ற வரிசையில் ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அன்றுபூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த நாள். ஆண்டாள் ஜெயந்தி 27 நட்சத்திரங்களில் பூரம் ஒன்று. ஸ்ரீரங்கநாதரிடம் ஆண்டாள் கொண்ட பக்தியினை நாடே அறியும்.

    ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் யார் வயிற்றிலும் பிறக்கவில்லை. அங்கு பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடி அடியில் ஆண்டாள் சிசுவாய் கிடைத்தாள். பெரியாழ்வார் தன் குழந்தையாகவே ஆண்டாளை வளர்த்தாள். பெரியாழ்வார் மிக விடியற்காலையில் பூக்களைப் பறித்து அதனை தொடுத்து பெருமாளுக்கு அளித்து வந்தார்.

    ஆண்டாளோ அம்மாலைகளை தான் சூடி பிறகே பெருமாளுக்கு அளித்தார். இதனைக் கண்ட பெரியாழ்வார் பெண்ணை கடிந்து கொண்டார். இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் இறைவனோ பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொண்ட மாலையே தனக்கு வேண்டும் என்றார். பெரியாழ்வார் தான் வளர்க்கும் குழந்தை தெய்வக் குழந்தை என புரிந்து கொண்டார். மண வயதை நெருங்கியதும் ஆண்டாளை சீரும் சிறப்புமாய் பெருமாளின் கட்டளைப்படி ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல ஆண்டாள் ஒளியாய் தெய்வத்துடன் சேர்ந்தாள். மெய் சிலிர்க்க வைக்கும் இத்தகு ஆன்மீக நிகழ்வுகளுக்கு நம் நாடே அதிகம் சொந்தமானது. அந்த பூமியில் பிறந்த நாம் அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இந்த அருமை பெருமைகளை போற்றி கொண்டாட வேண்டாமா!

    10-வது நாள் திருவிழாவாக ஆண்டாளின் திருக்கல்யாணமாக வைணவ கோவிலில் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இதேபோன்று ஸ்ரீரங்கத்திலும் நடைபெறும்.

    ஆடிப்பூரத்தன்று யோகிகளும் சித்தர்களும் தன் தவத்தினை தொடங்குகின்றனர் என புராணங்கள் கூறுகின்றன. கல்யாணமாகாத பெண்கள் அம்மனை வணங்குவது நல்ல கணவனை அருளும் என்பதும் கல்யாணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசீர்வாதத்தினை சக்தி அருளுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அநேக பெண்கள் ஏழை சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பணம் வைத்துக் கொடுங்கள். பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

    ஆடிப்பூரம், 10-வது திருவிழா. ஆண்டாளின் திருக்கல்யாண நாள் அன்று பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்வர். ஆண்டாளுக்கும் பிடித்த தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் இவற்றினை அளிப்பார்கள்.


    கோவில்களில் ஆண்டாள் மணப்பெண்ணாக மிக அழகாக அலங்கரிப்பார்கள். பெருமாளுடன் ஆண்டாள் கல்யாணம் நிகழும். அன்று முழுவதும் வழிபாடும் ஆரத்தியும் நடைபெறும். முழு நாளும் வருவோருக்கு பிரசாதம் அளிக்கப்படும். அன்று திருப்பாவை படித்து வழிபாடு நடைபெறும். மாலை தான் சூடி பக்தியோடு இறைவனுக்கு அளித்ததால் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்ற பெயரும் ஆண்டாளுக்கு உண்டு. பக்தியால் இறைவனை அடையலாம் என்பதைக்காட்ட மகாலட்சுமியே நமக்குக்காட்டிய வழி இது.

    சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு அநேகர் கண்ணாடி வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழாவாகக் கொண்டாடுவது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒரு சமயம் பெரிய பாளையத்தில் கண்ணாடி வளையல் வியாபாரி ஒருவர் வேப்ப மரத்தடியில் வளையல் பெட்டியினை வைத்து விட்டு உறங்கினார். கனவில் அம்மன் தோன்றி தான் ரேணுகா தேவி என்றும் இந்த வேப்ப மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாகவும் அவரது வளையல் பெட்டியில் உள்ள கண்ணாடி வளையல்களை தான் அணிந்துள்ளதாகவும் கூறினாள்.

    மிகவும் மகிழ்ந்த வியாபாரி அங்கே கோவில் எழுப்பினார். அங்கு வளையல் அணிவித்து வேண்டியவர்க்கு வேண்டிய நல்லவைகள், நியாயமானவைகள் நடந்தன. வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்றனர். கர்ப்பிணி ஆடிப் பூரத்தன்று வளையல் சாத்தி வழிபட்டால் பெண்களுக்கு நல்ல சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் அன்று சக்தி ஸ்தலங்களில் கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும் என்பர். பலர் அன்று கோவில்களில் ஆடிகூழ் ஊற்றுவர்.

    அன்று அம்மனுக்கு 5 வகை உணவு மற்றும் அப்பம், அதிரசம், இவற்றினை நைவேத்தியமாக அளிப்பர். அணிவிக்கப்படும் வளையல்களும், பிரசாதமும் அனைவருக்கும் வழங்கப்படும். அன்று அம்மனுக்கு மலர், பழம், காய்கனி, மஞ்சள், குங்குமம் இவற்றால் நடைபெறும் அர்ச்சனைகளும் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக இருக்கும்.

    மயிலாப்பூர் கற்பகாம்பாள், சிருங்கேரி சாரதா, காஞ்சி காமாட்சி அம்மன், கோல விழி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன் உள்பட சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சக்தி கோவில்களும் பிரம்மாண்ட கோலாகலத்துடன் ஆடிப்பூரம் அன்று விளங்கும். சக்தி கோவில்களில் ஆடிப்பூரம் அன்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம் எனப் பார்த்தோம்.

    வீடுகளிலும் அவ்வாறு செய்பவர்கள் உண்டு. லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள் சிலவற்றினை இங்கு பார்ப்போமா! ஆதி பராசக்தியே லலிதாம்பிகையாக தோன்றினார். லலிதா சகஸ்ர நாமம் என்பது இந்துக்களின் புனித அம்பிகை வழிபாட்டு ஸ்லோகம். லலிதாம்பிகையினைப் போற்றும் ஆயிரம் நாமாக்களையே லலிதா சகஸ்ரநாமம் என்கிறோம். பிரம்மாண்ட புராணத்தில் பகவான் ஹயக்கிரீவரை அகத்திய மாமுனி கேட்டு கொண்டதன் பேரில் ஸ்ரீ ஹயக்கிரீவர் லலிதாம்பிகையின் பரம ரகசியமான 1000 நாமாக்களை கூறினார். ஸ்ரீ ஹயக் கிரீவர் விஷ்ணுவின் அம்சம். குதிரை முகம் கொண்டவர். மிகுந்த ஞானமும், அறிவும் படைத்தவர்.

    லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பு அம்சங்கள்:

    இதனை அன்றாடம் கூற

    * பரபரப்பு, மனச் சோர்வு நீங்கும். அம்பிகையின் நாமங்களை சொல்லும்போது அந்த ஒலி, மூச்சு, கானம் இவை கொடுக்கும் சக்தி உடலின் ரசாயன மாற்றங்களை ஆக்கப்பூர்வ மானதாக மாற்றுகின்றது என்பர்.
    * நரம்புகளை அமைதி படுத்துகின்றது.
    * இனிமையானது.
    * லலிதா சகஸ்ர நாமம் தொடர்ந்து படிப்பவர்கள் மனித சமுதாயத்திடம் கருணையோடு இருப்பர்.
    * மனம் உறுதிப்படுவதால் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றது.
    * உள்ளுணர்வு துல்லியமாகின்றது.
    * லலிதா சகஸ்ரநாமம் தொடர்ந்து படிப்பவர்கள் தேகசுகத்துடன் இருப்பர்.
    * எந்த தீமையினையும் வெல்லும் சக்தி பெறுவர்.

    மேற்கூறியவை ஆன்மீக உலகில் லலிதா சகஸ்ரநாமம் பற்றி கூறப்படும் கருத்துக்கள். நாமும் பலன் பெறுவோமே!
    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம் தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் பெண்கள் அதிக அளவில் ஆலயத்துக்கு வரும் நாட்களாகும். ஆடி செவ்வாய் தேடி குளி. அரைத்த மஞ்சளை பூசி குளி என்று சொல்வார்கள். ஆடி மாதத்து செவ்வாய்க்கிழமைக்கு அந்த அளவுக்கு மகத்துவம் இருக்கிறது.

    ஆடி செவ்வாய் தினத்தன்று பெண்கள் மா விளக்கு போடுவதும், திருவிளக்கு பூஜை செய்வதும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதும், செவ்வரளி பூக்கள் வழிபாடு செய்வதும் அதிகமாக நடைபெறும். இதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார். 
    ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.
    ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

    விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை.

    பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

    ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.

    ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

    பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

    அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

    ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

    ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

    ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும், இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி. கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்து புன்னகை முகத்துடன் அருள் புரியும் ஆண்டாளை தரிசித்து வாருங்கள்.

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். மேலும் சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல்வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்கள் எண்ணிய வரம் அளித்து அருள்புரியும் தலமாகும்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விசாலாட்சி அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொடி மரம் முன்பு காலை 11.15 மணி அளவில் கேடயத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து துணியில் காளை வாகனம் வரையப்பட்ட கொடியினை கோவில் அர்ச்சகர்கள் கொடிமரத்தில் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை வணங்கினர். தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் காலையில் பல்லக்கிலும் இரவில் ஒவ்வொரு நாளும் சேஷ வாகனம், கிளி வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், அன்னவாகனம், யாளி வாகனம், தங்க குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. 14-ந் தேதி காலையில் நடராஜர் புறப்பாடு, (தேர்க்கால் பார்த்தல்) நிகழ்ச்சியும், பல்லக்கு புறப்பாடு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும், இரவு கேடயத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது. 15-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா, கோவில் பணியாளர்கள் மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 4-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் வெளிநாடு, பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் கார்த்திகை தீப விழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானவை.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் விழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    பின்னர் உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையும், மாலையும் விநாயகர் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இந்த விழாவானது கொடியேற்றத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் என 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 13-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவு பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு 13-ந் தேதி இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர். 
    ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில். காவிரி வடகரையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்ம ராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்கள் எண்ணிய வரம் அளித்து அருள்புரிந்து வருவதான சிறப்பு பெற்ற இக்கோவில் கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதான கோவிலாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் ஆடிபூரத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆகஸ்டு 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு நேற்று கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தின் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அனைத்து கிராம பட்டயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
    ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காகப் பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு ‘ஆடி வீதி’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளை காப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.
    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

    கடந்த 11-ந் தேதி மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. அன்று இரவு காந்திமதி அம்பாள் 4 ரதவீதிகளையும் சுற்றி கோவிலை அடைந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் அம்பாள் ஊஞ்சல் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    அங்கு அம்பாளுடைய வயிற்றில் முளை கட்டிய பாசிப்பயிறு கட்டப்பட்டது. அம்பாள் முன்பு பலகாரங்கள் படைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பிறகு வயிற்றில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முளைகட்டிய பாசிப்பயிறு அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்றுடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைந்தது. 
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. விழாவின் 4-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. அம்பாள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைகிறார்.

    10-ம் திருநாளான 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள் விழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    ×