search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா"

    சுற்றுலா வந்த இடத்தில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து மீட்ட தந்தை, 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரை இலங்கைக்கு அழைத்து சென்றார்.
    கூடலூர்:

    இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30-9-2009-ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

    இதையடுத்து இந்தியாவிற்கு சென்ற தனது மகன் காணாமல் போய்விட்டதாக சத்தியவான் தூதரகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சத்தியவான் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் வந்தார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிப்பதால், இங்கு தனது மகன் இருக்கலாம் என தேடும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது பந்தலூர் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு சத்தியவான் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் மகனை மீட்டு அவருக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயன்றார். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் சுதர்சனை இலங்கைக்கு அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தேவாலாவில் உள்ள உறவினர் வீட்டில் மகன் சுதர்சனை ஒப்படைத்து விட்டு சத்தியவான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

    மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை அவரது தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார். சட்ட ரீதியாக பல்வேறு தடைகள் இருந்த நிலையில், பல கட்டங்களாக போராடி தனது மகனை இலங்கைக்கு மீண்டும் தந்தை அழைத்து சென்ற பாச போராட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மலேசியா சங்கைப்பட்டாணிகெடா, தாமன்டேசா ஜெயா பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன்(34). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(34). அங்குள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரகதி(9) ஜனனி (6) என்ற 2 மகள்கள் உள்ளார்கள்.

    இந்த நிலையில் கணவன் மனைவி 2 பேரும் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 2-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னையில் தங்கியிருந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 8-ந்தேதி ஊட்டி செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து காரமடை ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு சிவனேசன் எழுந்து பார்த்த போது தனது மனைவி புவனாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விடுதி மற்றும் அக்கம்பக்கம் விசாரித்தும், தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அவர் விடுதியில் இருந்து கைப்பை, பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து சிவனேசன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பெண் மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா சென்ற திருப்பூர் பக்தர்கள் பத்திரமாக உள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலைலயில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள்.

    தற்போது நேபாள நாட்டின் மலை பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தமிழக பக்தர்கள் 24 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் திருப்பூரை சேர்ந்த 12 பக்தர்களும் ஆவார்கள்.

    திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டதின் சார்பில் கைலாய மலைக்கு யாத்திரை சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் தலைவர் குமாரவேல் கூறியதாவது-

    திருப்பூர் குமார் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 12 பேர் மற்றும் சேலம், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் திருஞானானந்தா சாமிகள் தலைமையில் கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர்.

    அவர்கள் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நோபாள நாட்டில் சிமிகோட் பகுதியில் கடும் மேகமூட்டம், பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.

    அங்குள்ள நிலைமைமையும் வீடியோ காட்சியாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். பனிப்பொழிவு குறைந்ததும் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கணவர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வினோபா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (வயது44). இவர் தனியார் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (30) இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்குமார் (12)என்ற மகனும், ஹனிஷ்கா (10) என்ற மகளும் உள்ளனர்.

    லட்சுமி கணவரிடம் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு மறுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகாலட்சுமி கணவரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு ஒருநாள் வேலைக்கு செல்லாமல் இருந்தால் கூட குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறினார்.

    இந்த நிலையில் கணவர் வீட்டு வாரண்டாவில் தூங்கினார். குழந்தைகளும் விளையாட சென்று விட்டனர். மகாலட்சுமி வீட்டில் உள்ள அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ரகு அறைக்கதவை தட்டினார் ஆனால் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி மகாலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.

    பாராளுமன்ற தேர்தலில் உற்சாகமாக பணியாற்றுவதற்காக அந்தந்த தொகுதியில் உள்ள தொண்டர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்ல அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வை பலப்படுத்தவும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அவர்களை சொகுசு பஸ்களில் அழைத்துச்செல்லவும், ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்து குளித்து மகிழவும், உணவு, விருந்து உள்பட அனைத்துக்கும் அவரே ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    கரூர் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பித்துரை மணப்பாறை தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களை புதன்கிழமை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல 6 பஸ்களை ஏற்பாடு செய்து இருந்தார். இந்த 2 நாள் சுற்றுலாவின் போது திருச்செந்தூர் கோவிலுக்கும் சென்று வந்தனர்.

    கரூர் தொகுதியில் உள்ள பஞ்சாயத்து அளவிலான அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் 200 பேரை, தம்பித்துரை இந்த மாதம் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறார். வருகிற 21-ந்தேதி டெல்லி செல்லும் இவர்கள் ஆக்ரா மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள்.

    திருச்சி எம்.பி. குமார் தனது ஆதரவாளர்கள் 50 பேரை நேற்று டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

    “நாங்கள் முதல் முறையாக விமானத்தில் செல்கிறோம். டெல்லியில் பாராளுமன்றம், மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு” செல்வோம். என்று அவர்கள் கூறினர்.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன. எனவே, அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்துவற்காக இந்த சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினால், அவர்கள் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வினரை தயார்படுத்த முடியும். அதற்காகவே இந்த சுற்றுலா ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

    இது போன்று அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினரை அழைத்து வந்து புத்த கயா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டு பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது.

    இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள ராணுவத்தினர் 80 பேர்களை அழைத்துக் கொண்டு வந்து, புத்த கயா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி, விபின் ராவத், நல்லெண்ணப் பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்புக்குச் சென்றபோது, சிங்கள ராணுவ தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்தாராம். அதை இந்தியத் தளபதி ஏற்றுக் கொண்டாராம்.

    அதற்காகவே, சிறப்பு விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளனர். அந்த ராணுவத்தினரும், அவர்கள் குடும்பத்தினரும், இந்திய விமானப் படையின் சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் இங்கே வந்துள்ளனர்.

    2005 முதல் 2009 வரையிலும், சிங்கள ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் அடிக்கடி கொழும்பில் சந்தித்துக் கொண்டாடிக் கும்மாளம் போட்டதுபோல், மோடி ஆட்சியில் இன்னும் வீரியமாகத் தொடர்கின்றது.

    இனப்படுகொலை செய்த சிங்களக் குற்றவாளிகளைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டும் இந்திய அரசை, மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு விதைக்கின்ற வினைகளுக்கெல்லாம், உரிய அறுவடையைக் காலம் தீர்மானிக்கும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    கோவாவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சம்பவங்களில் தமிழக வாலிபர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ‘செல்பி’ எடுக்க முயன்ற போது இந்த பயங்கரம் நிகழ்ந்தது.
    பனாஜி:

    உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக கோவா மாநிலம் விளங்குகிறது. இங்குள்ள அழகான கடற்கரைகளை காண வரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி செல்கின்றனர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் கடலில் குளிக்கவோ, நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி முதல் 4 மாதங்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு குழுவினர் கடந்த 16-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அன்று மாலையில் அவர்கள் வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு சென்றனர்.

    இதில் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்ற வாலிபர் உள்பட 3 பேர் கடலுக்குள் இறங்கி, அங்கிருந்த பாறை மீது ஏறினர். பின்னர் அந்த பாறையில் நின்றவாறு அவர்கள் தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ராட்சத அலை ஒன்று திடீரென எழுந்து அவர்கள் 3 பேரையும் இழுத்துச்சென்றது. இதில் தினேஷ் குமார் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். தினேஷ் குமாரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.

    இதைப்போல கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், அங்குள்ள சிக்குரியம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றனர். அவர்களும் கடலுக்குள் இருந்த பாறைகளில் ஏறி ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை ஒன்று சசிகுமார் வாசன் (33) என்ற வாலிபரை இழுத்துச்சென்றது. இதில் அவரும் கடலில் மூழ்கி இறந்தார். இதனால் சக நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இரு சம்பவங்களிலும் உயிரிழந்த 2 வாலிபர்களின் உடலும் பனாஜி அருகே உள்ள கோவா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் ‘செல்பி’ மோகத்தால் அடுத்தடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    கோவாவிற்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புனே வாலிபர்கள் 9 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GoaCourt #GoaTouristsRemand
    பனாஜி:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #GoaCourt #GoaTouristsRemand
    கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.



     நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus




    ×