search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மட்டும் போட்டி நடத்தப்பட்டது.
    • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நடந்துள்ள 5 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தற்போது சேலம் ஸ்பார்டன்ஸ்), மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

    கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மட்டும் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை சேப்பாக்கம் மைதானத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்படுவதால் இங்கு போட்டிகள் ஏதும் கிடையாது. சேலம், கோவை ஆகிய நகரங்கள் முதல்முறையாக டி.என்.பி.எல். போட்டிக்குரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

    போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: அலெக்சாண்டர், பி.அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் காந்தி (கேப்டன்), நிலேஷ் சுப்பிரமணியன், பிரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், ஆர்.சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜயகுமார், எஸ்.கார்த்திக், மதன்குமார்.

    நெல்லை ராயல் கிங்ஸ்: பாபா அபராஜித், அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ், பாபா இந்திரஜித் (கேப்டன்), ஜிதேந்திரகுமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ், ஷாஜகான், ஸ்ரீநிரஞ்சன், சூர்யபிரகாஷ், திரிலோக் நாக், வீரமணி, அஜிதேஷ், ஆர்ய யோஹன் மேனன், கிரிஷ் ஜெயின், ஈஸ்வரன், ரூபன்ராஜ், கார்த்திக் மணிகண்டன், ரோகன் ராஜூ, விக்ரம் ஜாங்கிட், ஆகாஷ் தேவ் குமார், சதீஷ்குமார்.

    • 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

    ஜூலை 31-ந்தேதி வரை இந்த போட்டிகள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    சேலம், கோவை ஆகிய இடங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல். போட்டிகள் நடக்கிறது. ஸ்டேடியம் புனரமைப்பு காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முறை போட்டிகள் நடைபெறவில்லை.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை கிங்ஸ் , 2018-ம் ஆண்டு சாம்பியனான சீசம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    ஜூலை 24-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது.'எலிமினேட்டர்' ஆட்டம் 26-ந்தேதியும், 'குவாலிபையர்' ஆட்டம் 27-ந்தேதியும் சேலத்தில் நடக்கிறது. 'குவாலிபையர் 2' போட்டி 29-ந்தேதியும் இறுதிப்போட்டி 31-ந்தேதி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்திலும் நடக்கிறது.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.

    நாளைய தொடர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. இதற்காக கவுசிக் காந்தி தலைமையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நேற்றைய பயிற்சிக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் ஜெகதீசன், அலெக்சாண்டர் ஆகியோர் கூறுகையில், 'நெல்லையில் முதல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது என்றனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இந்த சீசனில் கார்த்திக், மதனகுமார் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்ற அணி டி.என்.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 14 பேர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆடினார்கள். இதனால் டி.என்.பி.எல். போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஏலத்தில் அதிகமான வாய்ப்பு கிடைக்கும்.

    டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் அருண் கார்த்திக் அதிரடியால் திண்டுகல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. #TNPL2018
    சென்னை :

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    நத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    இந்நிலையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    இதனால் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார். 



    மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர்  ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியளித்தனர்.

    இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் சந்திரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கள் அணியை   வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கள் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

    இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக கிடைத்துள்ளது.
    #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #TNPL #SMPvLKK
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்தது. 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து மதுரை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுகல் டிராகன்ஸ் அணி மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் ராஜகோபால் சதீஸ் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திண்டுக்கல் அணியின் மோகன் அபினவ் 2 விக்கெட் வீழ்த்தினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    ஜெகதீசன் 31 ரன்கள், விவேக் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக் கான் நல்ல தொடக்கம் தந்தனர். ஷாருக்கான் 67 ரன்களிலும், அந்தோனி தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    14 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு கோவை அணி வெற்றி இலக்கை எட்டியது. அபினவ்  முகுந்த் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் காஞ்சி வீரன்ஸ்  மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.

    முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.



    இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 33 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் பந்தில் நிஷாந்த் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக அனிருத் மற்றும் ஜெகதீசன் முறையே 41 ரன்கள் மற்றும் 27 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதுர்வேத் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்து திண்டுக்கல் அணியின் வெற்றியை பிரகாசப்படுத்தினார்.

    இறுதியாக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்கள் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மதுரை வீரன்ஸ் அணி தரப்பில் சுனில் சாம், ஸ்ரீனிவாஸ் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.  சதுர்வேத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL #DindigulDragons #KanchiVeerans
    ×