என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் போராட்டம்"

    • வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
    • குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம்.

    இங்குள்ள பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது:-

    நாங்கள் 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் இந்த முள்வேலிகளை அகற்றாவிட்டால் விவசாய சங்கம், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சார்பில் முள்வேலிகளை அகற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பாதையை அடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • பள்ளியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தல்
    • போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி அருகே அலசந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப்

    கழிவறை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. மழை தண்ணீர் வகுப்பறைகள் ஒழுகுகிறது. சுற்றுச்சுவர் இல்லை எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நாராயணபுரத்தில் இருந்து இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு டவுன்பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக சரி செய்வதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர். .
    • வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி எ.டி.காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60 க்கு மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள 99/3 என்புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து வீட்டுமனை பட்டா வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர்.

    இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை. ஏற்கனவே வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பட்டா கேட்டு வந்துள்ளோம் என்றனர். தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உதவியாளர் நடராஜ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இது குட்டை புறம்போக்கு இடம். இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை .வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து பலகாலமாக எங்கள் மூதாதையர் இங்கு குடிசை போட்டு வாழ்ந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்துறையினரும் போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவசியம் வேறு நல்ல இடத்தில் வீட்டுமனை பட்டா தருவதாக வலியுறுத்தி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பண்ருட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி விரிவாக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக பஞ்சரான சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பண்ருட்டி எல் என் புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிலிள் செல்வோர் நடந்து செல்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எல் என் புரம் பகுதியில் புழுதி புயலுடன் காற்று வீசும். இதனால் நடந்து செல்வோர் மோட்டார் சைக்கிலிள் செல்வோர்களின் கண்களை பட்டு நோய் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த சேதமான சாலையால் மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் இந்த சாலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திடீரென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

    சேதமான சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் கூறிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். காலை 9:00 மணி முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்தை சரி செய்தனர். ஆனால் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • பொதுமக்களின் திடீர் மறியலால் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன.
    • 1 மணி நேரம் சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    அத்தனூர் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட அந்தப் பகுதியில் சாலையின் ஓரத்தில் சாலையை அகலப்படுத்தவும், சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான மதுரைவீரன் கோவிலை எடுக்கப்போவதாகவும் நெடுஞ்சாலை துறையினர் கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வீரன் கோவிலை சேர்ந்த சமுதாயத்தினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் மறியலால் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன. இதனால் 1 மணி நேரம் சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், நாங்களும், எங்களுடைய குழந்தைகளும், உறவினர்களும் இந்த கோவிலில் நீண்டகாலமாக வழிபட்டு வருகின்றோம். பழமையான இந்த கோவிலை இடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள், கோவிலை இடிக்காமல் சாலை விரிவாக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

    • கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
    • கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டியார் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கோவில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வரும் இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.

    அந்த கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோவிலை இடிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மணிநகரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    மேலும் வழக்கு தொடர்ந்து தனி நபரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் அந்த கோவிலை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கோவிலை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், அதனை செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மணி நகரம் உச்சி செட்டியார் தெரு மக்க ளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நடைபாதையில் இருப்பதாக கூறப்படும் கோவிலை இடிக்க அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று வந்தனர். இதையறிந்த அந்த பகுதி ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என அனைவரும் கோவில் உள்ள பகுதியில் திரண்டனர்.

    அவர்கள் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவிலை சுற்றி அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்கக்கூடாது என கூறி அங்கேயே அமர்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.

    மேலும் ஒரு வாலிபர் அங்கிருந்த வீட்டு மாடியில் ஏறி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதையடுத்து அங்கு பதட்டம் அதிகரித்தது.

    உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    போலீஸ் அதிகாரிகளும், வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வில்லை. பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதனால் வெகுநேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கோவில், பஸ் நிறுத்தம், குடியிருப்பு, மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மதுபார் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரில் பல இடங்களில் ரெஸ்டோ பார் என்ற பெயரில் டிஸ்கோத்தே நடனத்துடன் கூடிய மதுபார் அமைக்க கலால்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    புதுவையில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில் புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எதிர்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே ரெஸ்டோபாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

    கோவில், பஸ் நிறுத்தம், குடியிருப்பு, மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மதுபார் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி, மதுக்கடை அமைக்கப்படும் பகுதியில் இன்று காலை ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்டு சேதுசெல்வம், ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மறியலை போராட்டக்காரர்கள் கைவிடவில்லை.

    இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. இதனையடுத்து, போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினார்கள்.

    ஒரு மணி நேரம் மறியல் தொடர்ந்தது. இதனையடுத்து தாசில்தார் குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வருமானம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் நடனமதுபார் அமைக்க அனுமதி வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் சேது செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரத்தி ற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
    • இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.

    ஏலம்

    கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு, 2 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஏரியிலும் நாட்டு இன மீன்கள் அதிகளவில் உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் 2 ஏரியிலும் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டு வருகிறது.

    பொதுபணித்துறைக்கு சொந்தமான 2 ஏரிகளிலும், ஓமலூர் வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பாசி குத்தகை விடப்பட்டது. அதன்படி குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்திற்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கடந்த 2 ஆண்டுகள் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் போராட்டம்

    இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. முன்னதாக காலையில் பெரிய ஏரிக்கு நடைபெற்ற ஏலத்தில் 8 பேர் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில், சுப்ரமணி என்பவர் 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மாலையில் சின்னஏரிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் தாசில்தார் வள்ளமுனியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில், இங்கு ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியே சென்று, அவர்கள் தனியாக ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ஏலம் விட்டு பணத்தை பாகம் பிரித்து கொள்கின்றனர்.

    சுகாதார சீர்கேடு

    அதனால், ஏலம் விடாமல் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடித்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், ஏரியில் மீன் பிடி உரிமை எடுக்கும் ஏலதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி, குப்பை, காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால், தண்ணீர் வளம் பாதிக்கிறது, ஏரியில் துணி துவைத்து குளித்தால் கூட மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடி ஏலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

    அமைதி கூட்டம் நடத்திய பிறகு மீண்டும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே இன்று 14-வது நாளாக உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
    • ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    உடுமலை :

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விரைவாக நடந்து வருகிறது.

    இதற்காக அதிக அளவில் மண் மற்றும் சரளைக்கற்கள்,ஜல்லிக்கற்கள் போன்றவை தேவைப்படுகிறது.இவற்றை கொண்டு செல்ல பெரிய அளவிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களால் இயக்கப்படும் இந்த லாரிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஆறுமுகம் நகர் பகுதியை ஒட்டி மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவே இந்த சாலை உருவாக்கப்பட்டது.அதிக பட்சம் 10 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய கிராமத்து சாலையில் 50 டன்னுக்கு மேல் எடையுடன் கூடிய கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலை பல இடங்களில் சேதமடைந்து மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது.

    அந்த பள்ளங்களை சீரமைக்கக் கோரி கடந்த முறை போராட்டத்தில் ஈடுபட்ட போது மண் கொட்டி பள்ளங்களை மூடி விட்டார்கள். தற்போது லாரிகள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் மண் புழுதி பறக்கிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் புழுதி படிந்து மாசடைகிறது.

    அத்துடன் மண் புழுதியை தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய நிலையால் பல்வேறு விதமான சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் மண் புழுதியால் அருகிலுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் பாழாகி வருகிறது. இலைகளின் மீது தூசி படிவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

    மல்பெரி இலைகளில் தூசி படிவதால் அவற்றை உண்ணும் புழுக்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வாழைத்தார்களில் புழுதி படிந்திருப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். இதனால் செலவு செய்து தண்ணீரை பீய்ச்சியடித்து கழுவி வைத்தோம். ஆனால் மீண்டும் புழுதி படிந்து விட்டது.

    தீவனத்துக்காக வளர்க்கும் யானைப்புல் போன்றவற்றில் மண் படிந்து கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே லாரிகளில் மண்ணை மூடி கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக வேகத்தில் இயக்குவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். புழுதி பறப்பதைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்ட விவசாயி மீது வாகனத்தை ஏற்றி விடுவேன் என்று மிரட்டுவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    • பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.
    • தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராம பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.

    ஆனால் தற்போது அதே பகுதியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையைவிட இங்கு மதுபானங்கள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து மதுவாங்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெருமாள்மலை பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த நாரணா புரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த அரசு பஸ் உக்கடம், ெரயில் நிலையம், காந்திபுரம், சரவணம்பட்டி வழியாக வடுகபாளையத்தை கடந்து வாகாரப்பாளையம் வரை செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக குறித்த நேரம் காலை நேரத்தில் வராமல் உள்ளது.

    இதனால் காலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், செல்வராஜ் மற்றும் அன்னூர் போலீசார் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று நடைபெற இருந்த போராட்டத்தை கைவிடுமாறு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முன்பு போல பஸ்களை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    ×