search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

    சோப் மாவட்டத்தின் தனா சர் பகுதியில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் இருந்து மாகாண தலைநகர் குவெட்டாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியது.

    காரில் வந்தவர்கள் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்துள்ளார் அபாவ்
    • தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது

    சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்ற ஊழியர் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 வயதான அபாவ் [A'bao] என்று நபர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங்[Zhejiang] மாகாணத்தில் உள்ள சோசவுன் [Zhoushan] பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு [2023] பிப்ரவரி மாதம் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று மட்டுமே உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டார்மெண்ட்ரியில் [ஷேரிங் அறையில்] ஓய்வு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறலால் கடந்த ஜூன் 1 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

    அவரின் உயிரிழப்புக்குத் தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனமும் 20 சதவீதம் காரணமாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 யுவான் உட்பட மொத்தம் 400,000 யுவான்[இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000 லட்சம்] நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப் பளு காரணமாக உயிரிழப்புகளும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அதிக வேலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கரோஷி எனப்படும் டிரண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

     

     

    • விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
    • நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மினி டிரக் மீது பேருந்து மோதிய ஏற்படுத்திய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நெடுஞ்சாலை 93ல் இன்று பேருந்து ஒன்று மினி லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    பயணிகள் ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சேவாலா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விபத்தை தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நிபுன் அகர்வால் கூறுகையில், "ஆக்ரா- அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது" என்றார்.

    காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
    • ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    • பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
    • 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

    • அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
    • அனிகா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அனிகா தனது அறையின் தரையில் கிடந்தார். மேலும் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக அனிகா உயிரிழந்ததாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஏ., எல்.எல்.பி. 3-ம் ஆண்டு மாணவியான அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிர கேடரின் 1998 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார்.

    சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

    அனிகாவின் உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். விடுதி அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் உள்ளே காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு 3 பேர் உயிரிழந்தனர்.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    விஜயவாடா,மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது.

    அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கியவர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக், சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார். பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது. காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதேபோல் மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார். மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மழையில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.

    • 4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா தாலுகாவில் 454 மிமீ மழை பெய்துள்ளது. ஜாம்நகரில் 387 மிமீ மழையும், ஜாம்நகரில் உள்ள ஜாம்ஜோத்பூர் தாலுகாவில் 329 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

    4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சூரத், வதோதரா, வல்சட், தபி, நவ்சரி, நர்மதா, பஞ்சமஹாத் ஆகிய மாவட்டங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.

    மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் பலியாகினர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்தார்.

    இதுப்பற்றி பூபேந்திர படேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி குஜராத்தில் கனமழை நிலவரம் குறித்து என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை வழங்கினேன். மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை பிரதமர் மோடி வழங்கினார். மேலும் மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், உதவியையும் அவர் உறுதி செய்தார்" என தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் நாளை வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.

    உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

    ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.

    இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

    தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.

    வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.

    20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

    குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
    • சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    சவுதி அரேபியாவில் டவர் டெக்னீஷியனாக பணிபுரியும் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.

    இவர் 5 நாட்களுக்கு முன்பு சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக புறப்பட்டார். பணிதொடர்பாக, ஷாபாஸ் மற்றும் சக ஊழியர் ஜிபிஎஸ் உதவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஜிபிஎஸ்-ல் ஏற்பட்ட கோளாறால் இருவரும் ரூபா அல்-காலி பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்ற காரில் எரிபொரும் தீர்ந்துவிட்டது.

    அவர்கள் வைத்திருந்த செல்போனில் சிக்னலும் இல்லை. இதனால், வெளியே யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.

    உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி வெயிலில் 5நாட்களாக தவித்த ஷாபாசும், சக ஊழியரும் உலகின் மிக ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரூபா அல்-காலி பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    பாலைவனத்தில், ஒட்டகங்கள் உள்பட மனித வாழ்விடம் மற்றும் வனவிலங்குகள் இல்லாததால், தொலைந்து போன இருவருக்கும் உதவி தேடவோ அல்லது நிலப்பரப்பில் செல்லவோ முடியாத சூழல்.

    இருவர் காணாமல் போனதாக அவர்களது நிறுவனம் புகார் தெரிவித்த பிறகு, சவுதி அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இறுதியில், சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    • இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.
    • பல கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    சென்னை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.

    இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும், காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

    போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

    ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    ×