search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    பெங்களூரு:

    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.

    கட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.

    இதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.

    இதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

    உரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-

    விமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.

    இதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.

    உதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தர்மபுரி மண்டலத்தில் இருந்து 8 புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 8 புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவனருள், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணைமேலாளர்கள் சின்னசாமி, ஜெயபால், சிவமணி, அரவிந்தன், ராஜராஜன், கோட்டமேலாளர்கள் மோகன்குமார், ஹர்சத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோன்று அரூர்-பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருவண்ணாமலை- பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருப்பத்தூர்-பெங்களூரு இடையே 1 பஸ்சும், கரூர்- பெங்களூரு இடையே 3 புதிய பஸ்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.அரங்கநாதன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
    பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது.
    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

    செங்கோட்டையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநில எல்லைக்குள் ஆரியங்காவு அருகே அமைந்துள்ள பாலருவியில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் போதே தண்ணீர் விழும். இதனால் குற்றாலத்திற்கு சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்கும் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டாக பருவ மழை பொய்த்த நிலையில் இந்தாண்டு முறையாக தொடங்கியதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியான புளியரை, தவணை, குண்டாறு, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் வர தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் பாலருவியிலும் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. இதனால் பாலருவில் குளிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கேரள மாநில வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலருவிக்கு செல்வதற்கான பாதையை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து பாலருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வர தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் மூலம் சென்று பாலருவியில் குளித்துவிட்டு வருகின்றனர். இதற்கு கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ, கார் செல்வதற்கு அனுமதி கிடையாது.

    பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்ததை கேள்விப்பட்டதும் தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, நீலகிரி மாவட்டத்தில் அவர்களது நாட்டில் உள்ள சீதோஷ்ணம் போன்ற காலநிலை நிலவியதால், அவர்கள் இங்கு குடியேற நினைத்தனர். ஆங்கிலேயர்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் உள்பட இதர பொருட்களை கொண்டு வருவதற்கு வாகன உதவி தேவைப்பட்டது. அதற்காக ஆங்கிலேயர்கள் மலை ரெயிலை தேர்வு செய்தனர்.



    இதற்காக ரெயில் பாதை அமைக்க 1855-ம் ஆண்டு நீலகிரி ரெயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு ராபர்ட் மில்லர் என்பவர் முதல் தலைவராக செயல்பட்டார். அப்போது ரூ.25 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. இந்த மலை ரெயில் பாதை மொத்தம் 46.61 கி.மீ. தூரம் ஆகும். இதில் மொத்தம் 212 வளைவுகள் உள்ளன. 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன.

    தற்போது, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்காகவே மலை ரெயில் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய ரெயிலாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் நிலக்கரி நீராவி என்ஜின் கைவிடப்பட்டு டீசல் மற்றும் மின்சார ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்படுகிறது.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி- கேத்தி இடையே சிறப்பு மலைரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குலசிரேஸ்தா மற்றும் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பராவ் ஆகியோர் ரெயில்வே வாரியத்திடம் ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்க பரிந்துரை செய்தனர்.

    அதன்படி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறு சுற்றுலா என்ற பெயரில் ஊட்டி-கேத்தி இடையே நேற்று மலை ரெயில் இயக்கப்பட்டது. சேலம் ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் சந்திரபால் மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு தொப்பி, ஊட்டி மலை ரெயில் குறித்த கையேடு போன்றவற்றை வழங்கினார். ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக கேத்தியை 3 மணிக்கு சென்றடைந்தது. அங்கு மலை ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் கேத்தியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு லவ்டேல் வழியாக ஊட்டிக்கு 4 மணிக்கு மலைரெயில் வந்தடைந்தது.

    மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசித்தனர். மலை ரெயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு ஒரு நபருக்கு ரூ.400, 2-ம் வகுப்புக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மலை ரெயில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் கோவை ரெயில் நிலைய முதன்மை வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு, சுற்றுலா அலுவலர் ராஜன், பாரம்பரிய நீராவி மலை ரெயில் அறக்கட்டளை தலைவர் நடராஜ், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×