search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

    இதுதொடர்பாக கவர்னருக்கு தமிழக அரசு பலதடவை கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்காததால் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பார்தி வாலா ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தது.

    தமிழக அரசு சார்பிலும், கவர்னர் சார்பிலும் வக்கீல்கள் வாதாடினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த விவகாரத்துக்காக கோர்ட்டுக்கு வர வேண்டுமா? என்றும் தெரிவித்தனர்.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கவர்னர் தாமதம் செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    அப்போது தமிழக அரசு வக்கீல் கூறுகையில், "கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது தொடர்பாக கோர்ட்டு வழிகாட்டுதல் வேண்டும். தமிழக அரசின் 5 ஆண்டு பதவி காலத்துக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காவிட்டால் மக்கள் பணி முடங்க வாய்ப்பு உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது" என்று வாதாடினார்.

    இந்தநிலையில் கவர்னர் சில மசோதாக்களை திருப்பி அனுப்பினார். இதையடுத்து சட்டசபை கூடி அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அதற்கும் ஒப்புதல் வழங்காமல் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டனர். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது என்ற அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினார்கள்.

    மேலும் தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

    அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தினார். இதனால் கவர்னருடனான சந்திப்பு தாமதமாகி இருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார்.

    குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜனவரி 2-வது வாரம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவும் கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

    • மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
    • காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

    மத்திய அரசு கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இது தொடர்பான வழக்குகளை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளில் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

     


    16 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

    அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாங்களை முன்வைத்தனர். வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை டிசம்பர் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்க இருக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 9 மசோதா குறித்து ஆளுநர் முடிவு எடுதுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர்கள், மந்திரிகளுடன் ஆளுநர் சந்தித்து சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில், ஆளுநர்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழகம் இதில் அடங்கும்.

    பஞ்சாப் மாநிலம் முதல்முதலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பின்னர் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

    பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாணையின்போது, "ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்டத்தை, ஆளுநர்களால் தடுத்து நிறுத்த முடியாது" என உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இது எல்லா மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் கேரள மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும், நிதி மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து இருப்பதாகவும் கேரள மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது ஆளுநர் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரலும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் "கேரள மாநில அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்" என கேள்வி எழுப்பியது.

    அதற்கு நான் இங்கு விரிவாக செல்ல விரும்பவில்லை. அது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். அதற்கு "நாங்கள் அதில் ஈடுபடுவோம், அது அரசியலமைப்பிற்கு எங்களுடைய பொறுப்பு பற்றியது. மேலும், மக்கள் இதுகுறித்து எங்களிடம் கேட்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் பொறுப்பு அமைச்சர் இருவரிடமும் ஆளுநர் விவாதிப்பார் என்பதை பதிவு செய்வோம். சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம்" என பெஞ்ச் பதில் அளித்தது.

    மேலும், கூடுதல் கோரிக்கைகளுடன் மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு அனுமதி கோரியது. இதற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேரள அரசு திருத்திய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

    மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதன் மூலம், ஆளுநர் மசோதா மீது முடிவு எடுப்பது தொடர்பான விசயத்தில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பதி வைத்ததன் மூலம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வகுப்பதை கருத்தில் கொண்டு, நிலுவையில் வைப்பதாக பின்னர் முடிவு செய்தோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • தமிழக அரசும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிக்கிறார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது.

    அன்று நடைபெற்ற விசாணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்ற மசோதாக்களை கவர்னர்களின் அதிகாரங்களை கொண்டு முறியடித்துவிட முடியாது. ஜூன் 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவித்துள்ளது.

    இந்த கருத்தை மேற்கோள்காட்டிய ப.சிதம்பரம், "உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மட்டுமல்ல. அனைத்து ஆளுநர்களுக்கும்தான். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, நீதிபதிகளின் கருத்துக்களை ஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும். தேவைப்பட்டால் திறமையான வழக்கறிஞரை அழைத்து விளக்கம் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • கவர்னருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
    • விவகாரம் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னே, கவர்னர் செயல்பட வேண்டும்

    இந்தியாவில் பா.ஜனதா ஆட்சி செய்யாத பெரும்பாலான மாநிலங்களில், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்கள் இதில் அடங்கும். பஞ்சாப் மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் "நீதிமன்றத்திற்கு முன் இதுபோன்ற விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன் கவர்னர்கள் முன்னதாக செயல்பட வேண்டும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மசோதாவை ஆய்வு செய்யவும், ஆய்வு முடியும் வரை மசோதாவை நிறுத்தி வைக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன் அதனை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது." எனக் கருத்து தெரிவித்தது.

    அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், "மாநில கவர்னர் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதா மீது நடவடிக்கை எடுத்துள்ளார்" என்றார். அப்போது நீதிமன்றம் "இதுதொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்து விசாரணையை வருகிற 10-ந்தேதி ஒத்திவைத்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
    • ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நவம்பர் 6-ந்தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா. எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க இருக்கிறது.

    • குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு.
    • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு.

    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி எல். நாதன், பாலாஜி ஆகியோர் வழக்கில் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஆறு வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

    இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • காவிரி நீர் மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

    காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் செப்.6-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்.21-ந்தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை.

    தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறினார்கள். இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர்.

    ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின் பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் ம்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழ கத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது.

    அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது.

    எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறைவு இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?

    நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான். கடந்த 12-ந்தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள்.

    ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர்.

    அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    • மணிப்பூரில் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்
    • ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறைக்கு 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் உயிருக்குப் பயந்து ஊரை காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். மூன்று மாதங்களாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. வன்முறை தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர்நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது.

    தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த உத்தரவு நேற்று இரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த உத்தரவில், மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக சித்ரவதைகளுக்கு ஆளான விதம் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. கும்பலாக சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடர்வதற்கு, அவர்கள் அதிக அளவில் உள்ள பிரிவில் உள்ளவர்கள் என்றால் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் போன்ற பல காரணங்கள் உள்ளன.

    மதவெறி போன்ற வன்முறை நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்களை அடிபணிய வைக்கும் தகவலை வெளிப்படுத்தவே பாலியல் வன்முறை போன்ற கொடூர வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள்.

    மோதலின்போது பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை, கொடுமையைத் தவிர வேறு ஏதுமில்லை. இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுவோரை தடுக்கவும், வன்முறையில் தாக்கப்படுபவர்களை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும்.

    மேலும், பெண்களுக்கு எதிராக மே 4-ந்தேதியில் இருந்து நடைபெற்ற வன்முறைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பெரும்பான்மை சமூகமான மைதேயி சமூகத்தினர் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே 3-ம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி' நடத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக மைதேயி சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு, கடும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது
    • குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் தடை

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் டுவிட்டர் முகப்பு பகுதியில் மக்களவை உறுப்பினர் (Member of Parliament) என குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக, மக்களவை செயலகம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஆணை பிறப்பித்தது.

    இதனால் தனது டுவிட்டர் முகப்பில் பராளுமன்ற உறுப்பினர் என்பதை நீக்கிவிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகர் மற்றும் மக்களவை செயலகத்திடம் முறையிட்டனர்.

    இதனால் இன்று காலை மக்களவை செயலகம், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றதை உறுதி செய்தது. இதனால் அவர் மக்களவையில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு பகுதியில் (Dis'Qualified MP) என்பதை மீண்டும் Member of Parliament என மாற்றியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது
    • நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சுவலி காரணமாக அரைசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

    நீதிபதி பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி நிஷா பானு கைது நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

    இதைதொடர்ந்து 3-வது நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை விசாரித்தார். அவர் கைது நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, செந்தில்பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீது இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், வருகிற 12-ந்தேதி வரை அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இன்றே அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க முடிவு செய்திருப்பதால் 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×