என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள்"
- வேதாளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை களைகட்டுகிறது.
- நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் வேதாளை கிளை சார்பில் பித்அத் ஒழிப்பு, சமுதாய பாதுகாப்பு விளக்கபொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக் சாஹிப், துணைத்தலைவர் யாசர் அரபாத், துணைச்செயலாளர்கள் கீழை சித்தீக், ரஜப்தீன், உஸ்மான், மீரான் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் தினாஜ்கான் "தடம் மாறும் இளைய சமுதாயம்" என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் இம்ரான் "பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அன்சாரி "சமுதாய பாதுகாப்பு மாநாடு ஏன்?எதற்கு?" என்ற தலைப்பிலும் பேசினர். தீர்மானங்களை மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் வாசித்தார். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் இளைய தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள்.இந்த சீரழிவிற்கு காரணமான சமூக விரோதிகளை கண்டறிந்து போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதாளை தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம், சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வேதாளையில் இருந்து வலையர்வாடி வழியாக மெயின் ரோட்டுக்கு இணைக்கப்பட்டுள்ள தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத்தலைவர் அமீனுல்லாஹ் மிஸ்பாஹி நன்றி கூறினார்.
- மதுரை அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் நடந்தது.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். முத்தமிழ் மன்ற தலைவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியை சங்கீதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.எஸ். நாகேந்திரன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் மது, புகையிலை, சிகரெட், வெற்றிலை, பாக்கு என எந்த போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையானால் மனநல பாதிப்பு, இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வாழ்க்கை அழிவுப்பாதைக்கு சென்றுவிடும். ஆகையால் மாணவர்கள் விழிப்புணர்வுடன் உண்மை, உழைப்பு, உயர்வு ஆகியவற்றை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள் என்றார்.
நிகழ்ச்சியில் நடந்த வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாகேந்திரன் பரிசுகள் வழங்கினார். உதவிப் பேராசிரியை கோதைக்கனி நன்றி கூறினார்.
- சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான்.
- போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம்.
- தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படி இருந்தும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லையே.
நாளைய எதிர்காலம் என்று நம்பும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைகளிலும் போதை பொருட்கள் விளையாடுகிறதே!
சில குறிப்பிட்டவகை மாத்திரைகள் போதை தருகிறது என்று கூறி அதுபோன்ற மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து அதை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தேவை ஏற்படும் கல்லூரி மாணவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு மது, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவற்றுக்கு அடிமையாகும் அப்பாவி மாணவர்களை, தங்களது போதைப்பொருள் வியாபார முகவர்களாக மாற்றி விடுகிறது இந்த கும்பல்.
இதுபோன்ற மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடமும் தங்களது போதை பொருட்களை விற்க தொடங்குகிறார்கள். இதற்காக மாணவர்கள் மத்தியில் தனியாக வாட்ஸ்-அப் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பல வாட்ஸ்-அப் குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது அதில் அப்பாவி மாணவர்களும், சிலரும்தான் கைதாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பல் தப்பி விடுகிறது. போலீசாரும் கிடைத்தவர்களை கைது செய்துவிட்டு, அத்துடன் வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
கல்லூரி நிர்வாகங்களும் தங்களது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடாது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் சில மாணவர்களால் அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதுபோல போதைப்பொருட்கள் ஒழிப்பில் பெற்றோர்களும் இதில் பெரும் பங்கெடுக்க வேண்டும். போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
அவர்கள் பாதை மாறுவதுபோல் இருந்தால், அவர்களிடம் அன்பாய் பேசி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.
சில நிமிட போலியான இன்பத்துக்கு, பொன்னான வாழ்வை, உயிரை இழக்க வேண்டாம்.
- மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி தேசிய இளைஞர் அணி தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரேம் யோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் ஷிவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க ஆளும் தி.மு.க. அரசு தான் காரணம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை அவர் வழங்கினார்
மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நகரத் தலைவர் பிரவீன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.
- மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது.
ஒரு கட்டிடத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால் அந்த கட்டிடமும் வலுவானதாக இருக்கும். பலவீனமான அடித்தளம் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பாதித்துவிடும். அதேபோல் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் மாணவப் பருவமே அவர்களுடைய எதிர்காலத்துக்கான அடித்தளம். அந்த அடித்தளம் நன்றாக அமைந்தால் அந்த மாணவன் வருங்காலத்தில் தன்னுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும்.
ஆனால் சமீபகாலமாக மாணவர் சமுதாயத்தை பேராபத்து சூழ்ந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. படிக்கிற காலத்திலேயே போதைப்பழக்க வழக்கங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கிற பள்ளி மாணவர்களின் பைகளை சோதித்தால் போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ளவும், போதை ஊசிகளை செலுத்தி கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. பெற்றோர்கள் இதை உணர்ந்து தங்களது பிள்ளைகளை தற்காக்க விழித்து கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கருமண்டபம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உறையூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போதைமாத்திரை விற்ற அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இந்த சமூகவிரோத கும்பல் கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து தங்களது வியாபார சந்தையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து கொண்டு அந்த மாணவன் மூலமாக மற்ற மாணவர்களிடம் போதைமாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு செலுத்தியபிறகு தான் போதைமாத்திரைகள் அந்த மாணவர்களுக்கு சென்று சேரும்.
ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடுகிறது. ஒருகாலகட்டத்தில் படிக்கிற வயதில் சிகரெட் புகைத்தாலே, மதுகுடித்தாலே மிகப்பெரிய தவறு என்று இருந்த காலம் மாறி, தற்போது போதைமாத்திரை, போதை ஊசி என சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்துக்குள் உட்புகுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஒரு கும்பல் பாழ்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாவும் தலையெடுப்பார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
இத்தகைய சூழலிலும் பெற்றோருக்கு அஞ்சி, ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சி படிப்பில் கவனம் செலுத்தி போட்டி மிகுந்த உலகில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மாணவர்களையும் தீய நண்பர்களின் சகவாசம் கெடுத்துவிடுகிறது. மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது. பணத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பொறி வைத்து பிடித்து காவல்துறையினர் தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சுய ஒழுக்கம்
சவுராஷ்டிராதெருவை சேர்ந்த வக்கீல் சுதர்சன்:-
ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் என்பது தற்போது உள்ள இளையதலைமுறையினரிடம் கெட்டுப்போய் கிடக்கிறது. போதை மாத்திரைகளை விற்கும் தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நடக்கும் ஆண்டுவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படித்து, சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்களோ பிறந்தநாள் கொண்டாட்டம் என சில தீய நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையுடன்கூடிய தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பெற்றோர்களுக்கு கவனம் தேவை
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சமூகஆர்வலர் குமார்:-
முதலில் பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆசிரியர்களும், போலீசாரும் பார்த்து கொள்வார்கள் என்றால் நமக்கான பொறுப்பு என்ன? என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒரு மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் கவனக்குறைவே முக்கிய காரணம். ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் தனித்தனி போலீஸ் வர முடியாது. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர், தம்பி, தங்கை பாசம், குடும்ப உறவுகளை மறந்து, கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்க தொடங்குகிறார்கள். தீயநண்பர்களுடன் சேர்ந்து அருவருப்பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பீடி புகைப்பதையே பயந்து, பயந்து செய்து வந்தாா்கள். இப்போது அதையும் தாண்டி போதை மாத்திரை, போதை ஊசி என எந்தெந்த வகையில் எல்லாம் போதை கிடைக்கிறதோ? அதை தேடி சென்று விடுகிறார்கள். பெற்றோர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்துவிடுகிறது.
விளையாட்டின் தனித்தன்மை
முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:-
பிள்ளைகளை விளையாட வைத்தால் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். விளையாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர் எப்போதும் தன்னை உடல்ரீதியாக தகுதியாக வைத்து கொள்வார். அது தான் விளையாட்டின் தனித்தன்மை. ஆனால் இப்பேதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட, மதிப்பெண்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தற்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு சில மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து மீண்டும் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தற்போது போதை சாக்லேட் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மாணவர்கள் விஷயத்தில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டை ஊக்குவித்தால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய இளைஞர்களை காப்பாற்ற முடியும்.
தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்
திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி:-
போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாரத்தான், வாகன பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். இது தவிர, பள்ளிகளில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் குறித்த நடவடிக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த பள்ளிகளில் கமிட்டி ஆரம்பித்து போலீசாருடன் கலந்து ஆலோசிக்கவும் கூறி உள்ளோம்.
போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்களிடம் இதுபோன்ற தீய பழக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க பெற்றோரும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகம் இணைத்து ஒத்துழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
- குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார், வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை மென்று உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது
பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியும், கர்நாடக ஐகோர்ட்டு வக்கீலுமான நாகூர் ரோஜா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டத்தை மீறி அவற்றை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தது ஓராண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இந்த போதைப்பொருள் பயன்பாட்டை சட்டங்களால் மட்டுமே தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நான் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளேன். நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது வேறுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைப்பொருள் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. குழந்தைகளை பள்ளி-கல்லூரிகளுக்கு அனுப்பினாலும் நாம் எந்நேரமும் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நாகூர் ரோஜா கூறினார்.
பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த விஜயன் கூறுகையில், 'பெங்களூருவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயன்படுத்துகிறவர்களை காட்டிலும், அதை விற்பனை செய்கிறவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், பயன்பாடு குறைந்துவிடும். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தினசரி என்ன செய்தனர், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.
வருத்தமாக இருக்கிறது
இதுபற்றி சிவமொக்காவைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை காண்டிராக்டர் சுப்பிரமணி கூறியதாவது:-
பாக்கை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளை முதலில் ஒருவர் பயன்படுத்தும்போது அது அவருக்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது. பின்னர் அது அவர்களை தனக்கு அடிமையாக்கி விடுகிறது. மதுபானம் வாங்க குறைந்தது ரூ.100 ஆவது வேண்டும். ஆனால் போதை பாக்குகள் 5 மற்றும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது. குறிப்பாக தொழிலாளிகள் பலர் அதை ஒரு உணவுப்பொருள் போல பயன்படுத்துகிறார்கள். வேலை நேரத்தில் அதை உபயோகித்துக் கொண்டே பணியில் ஈடுபடுகிறார்கள்.
முதலில் அவர்களுக்கு சுகத்தை கொடுக்கும் இந்த போதை பாக்குகள் பின்னர் அதை பயன்படுத்துவோரின் கண் பார்வை, கல்லீரல் உள்பட உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் செயலிழக்க செய்யும். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இதை அதிகம் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு போதை பாக்குகளை பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டும், காணாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
யோகா செய்வது அவசியம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியைச் சேர்ந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூத்த சகோதரி சாரதா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் அனைவரும் உடல் ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்த வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நாம் உன்னதமாக செலவிட வேண்டும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டிய வழிகளை தேட வேண்டும். இளைஞர்கள் தங்கள் சந்தோஷத்துக்காக போதைக்கு அடிமையாகி வீட்டில் இருப்போரின் மகிழ்ச்சியை கெடுத்து விடக்கூடாது.
நமது உடல் கோவிலுக்கு சமமாகும். ஒரு கோவிலை நாம் எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்கிறோமோ, அதுபோல் நாம் நம் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் அனைவரும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் ஒஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன் என்கிற மூர்த்தி கூறியதாவது:-
இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் விவசாயிகள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வார்கள். அப்போது தூக்கம் வராமல் இருக்க போதை பாக்குகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிராமத்தில் வசித்து வரும் சில டிரைவர்கள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிகரெட் புகைப்பது மற்றும் போதை பாக்குகளை பயன்படுத்துவது போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே அவர்களால் நீண்ட நேரம் தூங்காமல் வாகனத்தை ஓட்ட முடியும் என்று கூறுகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் அடிமையாகாமல் இருக்க இரவு நேரத்தில் டீ, காப்பி போன்றவற்றை குடிக்கலாம். அவற்றை குடிப்பதால் உடலுக்கு எந்தவித கோளாறும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் பண்ணூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி கூறுகையில், 'போதை தரும் பாக்குகள், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை பயன்படுத்துவோர் கண்ட, கண்ட இடங்களில் உமிழ்நீரை குதப்பி, குதப்பி துப்புகிறார்கள். குறிப்பாக பஸ்கள், ரெயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது மற்றவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால், அரசு தான் இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், போதை பாக்குகள் மற்றும் புகையிலையை பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தடை விதிக்க வேண்டும்
இளைய சமுதாயத்தினர் போதைப்பொருளால் வாழ்க்கையை தொலைத்து வருவது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், டாக்டருமான பவன்குமார் கூறியதாவது:-
போதை தரும் பாக்குகள், மதுபானம், சிகரெட் என அனைத்து விதமான போதை பொருட்களும் மனிதர்களை அடிமையாக்க கூடும். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் மட்டும் தான் நேரடியாக கிடைப்பதில்லை. மற்றபடி சிகரெட், மதுபானம், போதை தரும் பாக்குகள் போன்றவை சாதாரணமாக கடைகளில் விற்கப்படுகின்றன. அவை எல்லாம் அரசு அனுமதியோடுதான் விற்கப்படுகின்றன. கஞ்சா போன்ற போதைப்பொருள் மட்டுமே சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் போதை பொருட்களிடம் இருந்து இளைய சமுதாயம் ஒதுங்கி இருக்க வேண்டும். எதிர்கால சிந்தனை, வாழ்க்கை முறை, தங்களது குறிக்கோள்கள் போன்றவற்றை நோக்கி பயணிக்க வேண்டும். கல்வி, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
புகையிலை, போதை பாக்குகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும். புற்றுநோய், குடல் பிரச்சினை என பல்வேறு நோய்கள் ஏற்பட போதை பொருட்களே காரணம். போதை பொருட்கள் விற்பனையை அரசு அடியோடு நிறுத்த வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இளைய சமுதாயம் அதிலிருந்து மீண்டு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
- இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால அடுத்த ராயன் பாளையம் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
இம்முகாமில் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் பற்றியும் தன்னார்வலர்க ளுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன். நவோதயா பள்ளியின் முதல்வர் நந்தகுமார், போக்குவரத்து துறையைச் சார்ந்த கல்விமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சு மணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
- 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
கோலாலம்பூர்:
தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.
இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, உயா்நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018-ல் தீா்ப்பு அளித்தது.
இந்நிலையில், தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
- பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை.
- பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையின் எதிர் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபை சேர்ந்த மல்கித் சிங், தர்மேந்திர சிங் மற்றும் ஹர்பால் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. செல்போனை ஆய்வு செய்ததில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து தொடர்புக் கொண்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போதைப் பொருளை கையாளுபவர்கள் இந்த எண்களை பயன்படுத்தி பாகிஸ்தானால் கடத்தப்பட்ட போதைப்பொருள் சரக்குகளை எங்கு சேகரிக்க வேண்டும் என்றும், அது பின்னர் பஞ்சாபில் உள்ள சப்ளை செய்வது தொடர்பாகவும் தகவல் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
- கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.
போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.
இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.
விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.
மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
- கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.
தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், உத்தரவின்பேரில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆலோசனைப் படி அ.முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கினார்.
கூட்டத்ததில் சைபர் குற்றங்கள் குறித்தும், 1930 புகார் எண் குறித்தும் விளக்கப்பட்டது.
பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப் பட்டது. பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.