search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • கடந்த காலங்களில் அவர்கள் அளித்த தீர்ப்புகளும், பிறப்பித்த ஆணைகளும் தொடர்ந்து செல்லுபடியாகும்.
    • வருவாய்த்துறை பணிகளும் செம்மையாக நடைபெறும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி உயர்வில், பட்டப்படிப்பு படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இப்போது செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதால், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.இது அத்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். 1995-ம் ஆண்டின் அரசாணையை , அது பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படுத்தாமல், அந்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து செயல்படுத்துவதே சுமூகத் தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு செய்யும் போது, இதுவரை பதவி உயர்வு பெற்ற தொகுதி 4 மூலம் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் இப்போதுள்ள பதவிகளில் தொடர முடியும். கடந்த காலங்களில் அவர்கள் அளித்த தீர்ப்புகளும், பிறப்பித்த ஆணைகளும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

    அதே நேரத்தில் பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட தொகுதி 2 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் உதவியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, 1995-ம் ஆண்டு அரசாணை அதே ஆண்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் என்னென்ன பதவி உயர்வும், பணப்பயன்களும் கிடைத்திருக்குமோ, அவை அனைத்தையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 வருவாய் கோட்ட அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் இதை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இதன் மூலம் இரு தரப்பினரும் குறைகளின்றி செயல்படக் கூடும்; வருவாய்த்துறை பணிகளும் செம்மையாக நடைபெறும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முழுநேர பதிவாளரின் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டும் தான்.
    • பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல்கள் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ, அரசுக்கே அறைகூவல் விடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு வெகுமதி வழங்கும் செயல்களிலும், ஊழலுக்கான சான்றுகளை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, திறமையற்ற தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், அதே பெரியசாமி சாகித்ய அகாடமி குழுவில் தமிழ்நாட்டில் இருந்து பல்கலைக்கழக பேராளராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இது கண்டிப்பாக தமிழ்நாடு அரசுக்கு அறைகூவல் விடுக்கும் செயல் தான்.

    அடுத்தக்கட்டமாக, பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் எட்டாவதாக இடம் பெற்றுள்ள மென்பொருள் கொள்முதல் ஊழலில் தொடர்புடைய கணினி அறிவியல் துறையின் தலைவர் தங்கவேல் என்பவரை பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக துணைவேந்தர் அமர்த்தியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரையே, அது குறித்த விசாரணையை ஒருங்கிணைக்கும் பதிவாளராக அமர்த்துவது எந்த வகையில் நீதி? இது பெரியார் பல்கலைக்கழக ஊழல் குறித்த விசாரணையை முற்றிலுமாக முடக்குவதற்கே வழிவகுக்கும்.

    முழுநேர பதிவாளரின் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டும் தான். ஆனால், தங்கவேல் பொறுப்பு பதிவாளராகவே நான்கரை ஆண்டுகள் இருந்திருக்கிறார். மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்கவேலுவை விட அனுபவமும், கல்வித்தகுதியும் கொண்ட மூத்த பேராசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை தவிர்த்துவிட்டு, தங்கவேலு பொறுப்பு பதிவாளராக அமர்த்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஊழல்கள் குறித்த விசாரணையை முடக்குவது தான் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகின்றனர். அதை புறக்கணித்துவிட முடியாது.

    பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். அது அதன் இயல்பான முடிவை அடைய வேண்டும் என்றால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

    விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், ஏப்ரல் 12-ந் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல.
    • கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர். கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன.

    மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல. கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100 சதவீத மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது. 12-ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குற்றம் செய்தவர்களை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்.
    • உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கி இருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது.

    குற்றம் செய்தவர்களை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார். உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

    அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.
    • தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று நடுவண் அரசு தெரிவித்து உள்ளது.

    தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க முடியாது என்ற முடிவு 11.10.2012-ஆம் நாள் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வில் தான் எடுக்கப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. கடந்த பத்தாண்டுகளில் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக மாநில மொழிகளை அறிவிப்பது குறித்த சூழல்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மனநிலையும் வெகுவாக மாறியிருக்கிறது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மாற்றி வெளியிடும் திட்டத்தை 17.07.2019-ல் தொடங்கி வைத்தார்.

    அதன்பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.இரமணா, 26.11.2021-ம் நாள் அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசியபோது, உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

    பின்னர் 30.04.2022-ல் டெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசும் போதும், "இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும்" என்று நீதிபதி ரமணா குறிப்பிட்டார். அதே மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான சந்திரசூட்டும் இதற்கு ஆதரவாகவே இருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று 20.01.2023-ம் நாள் அறிவித்த அவர், அதை கடந்த குடியரசு நாள் முதல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்த போது, இத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதை நம்மில் எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. இப்போது மாறியிருக்கும் காலச்சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது.
    • ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ந்தேதி சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28-ந்தேதி மதுரையில் நிறைவு செய்த 'தமிழைத் தேடி...' விழிப்புணர்வு பரப்புரை பயணம் தமிழ்கூறும் நல்லுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அதை விட பல மடங்கு ஆக்கப் பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கி வணிகர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் எழுதப்பட்டிருந்த கடிதத்தின்படி வெகுவிரைவில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 575 எண் கொண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள கூறுகளின் அடிப்படையில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைக்க வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றம் ஆகும்.

    மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழி கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பலகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

    • எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும்.
    • கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கள் இல்லா விட்டால் இந்த உலகம் பசியாற முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை வணிகர்கள் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது, என்பதும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் முழங்கினோம். ஆனால், எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசக்கும் உண்மை.

    எங்கும் தமிழ் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருப்பவை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகள் தான். சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை... தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை.

    விழிப்புணர்வு பெற்ற வணிகப் பெருமக்களே, அதிக அளவாக அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றி எழுதுங்கள். பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின் முக்கியக் கூறுகள் வருமாறு:-

    எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.

    பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும்.

    பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வரையறைக்கு உட்பட்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் தமிழ் வளர்த்த உங்களால் உள் நாட்டில் தமிழ் வளர்க்க கண்டிப்பாக இயலும். அவ்வாறு தமிழில் பெயர்ப் பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணி நிலைப்பு கோரி 54 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஆணையிட்டது.
    • 13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 54-க்கும் மேற்பட்டோருக்கு பிப்ரவரி மாத ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதத்துடன் பணி நீக்கப்படவுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

    2007-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 13 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வரும் உதவி திட்ட அலுவலர்கள் பணி நிலைப்பு கோருகிறார்கள். ஆனால், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமோ அவர்களை திட்டம் சார்ந்த ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற முயல்கிறது. அது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

    பணி நிலைப்பு கோரி 54 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஆணையிட்டது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி விட்டது. திட்ட ஒப்பந்த பணியாளர்களாக மாற மறுத்தால் பணி நீக்கப்படுவர் என அறிவித்திருக்கிறது.

    13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் அரசு தலையிட்டு, அவர்களின் 13 ஆண்டு உழைப்பை மதித்து, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

    அரசு-பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மீது ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஓய்வூதியர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகள் செயல்படுத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டிருக்கிறது.

    ஆனால், அந்த ஆணையை செயல்படுத்தாத தமிழக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. அதன் மூலம் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மேலும் காலநீட்டம் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

    அகவிலைப்படி உயர்த்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், நெருக்கடிகளும் காலவரையின்றி தொடர்வதை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.
    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அன்னைத் தமிழ் மொழியின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம்.
    • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டுவது அரசின் கைகளில் மட்டும் இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் அன்னைத் தமிழைக் காக்கும் நோக்கத்துடன், 'தமிழைத் தேடி...' என்ற தலைப்பில் சென்னை முதல் மதுரை வரை நான் மேற்கொண்ட விழிப்புணர்வு பரப்புரை பயணம் மதுரையில் நேற்று (நேற்று முன்தினம்) வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த பயணம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதற்காக தமிழக மக்களுக்கு நான் எனது நன்றிகளை அடிமனதின் ஆழத்தில் இருந்து வெளிப்படுத்துகிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இது தொடர்பாக துண்டறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, வணிகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழைத் தேடி பரப்புரை பயணத்தால் ஏற்பட்டுள்ள நல்மாற்றம். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

    ஆனால், அன்னைத் தமிழ் மொழியின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம். பிறமொழி கலப்பு என்ற 1,000 ஆண்டு கால சீரழிவை ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியாது. அதனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்னைத் தமிழை சிதைவில் இருந்து மீட்டெடுக்கும் வரை தமிழைத் தேடிய எனது பயணம் தொடரும். 'தமிழைத் தேடி...' என்பது விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் மட்டுமல்ல, அது ஓர் இயக்கம். இந்த இயக்கம் தமிழ் காக்கும் பணிகளை தொடரும்.

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டுவது அரசின் கைகளில் மட்டும் இல்லை. தமிழறிஞர்களின் கைகளில் மட்டும் இல்லை. பொதுமக்களின் கைகளில் மட்டும் இல்லை. பள்ளிகளை நடத்துபவர்களின் கைகளில் மட்டும் இல்லை. இந்த நான்கு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் தனித்தமிழ் பயன்பாட்டை உறுதிசெய்ய முடியும்.

    அதற்காக தமிழ் கட்டாய பயிற்று மொழி சட்டம், தமிழ்மொழி பாதுகாப்பு சட்டம், தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க செய்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், தமிழை சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவித்தல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு, தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப்பாட மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழைத் தேடி பரப்புரை பயணத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல், பொதுமக்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து தமிழ் மொழியிலேயே பேசவும், எழுதவும் செய்ய வேண்டும். தமிழ் சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், தமிழ் கண்டிப்பாக அரியணையில் ஏறும். இதை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு வார்த்தையில் பாதிக்குமேல் ஆங்கில கலப்பு வந்துவிட்டது.
    • மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் என எந்த படிப்பையும் தமிழில் படிக்க முடியும்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் பா.ம.க.வின் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிைழத்தேடி பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். எந்த இடத்திலும் தமிழை காணவில்லை. திண்டுக்கல்லில் வந்து பார்த்தபோதும் இங்கும் இல்லை. இதனைதொடர்ந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தேடிச்செல்கிறேன். அங்காவது தமிழ் இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறேன்.

    தமிழ்மொழியை குழந்தைகள் இடத்தில் இருந்து நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பிறகு பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் டாடி, மம்மி என்று அழைப்பதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

    மகாகவி பாரதியாரின் ஆருயிர் நண்பரான நீலகண்ட சாஸ்திரிகள் ஒருமுறை மெல்லதமிழ் இனி சாகும் என்று கூறினார். இதற்கு ஆவேசமாக பதில் அளித்த பாரதியார் மெல்லதமிழ் இனி சாகும் என்று ஒரு பேதை உரைத்தான் என்றார். அப்போது தனது நண்பர் என்ற போதிலும் தமிழ்மொழி மீது பாரதியார் கொண்ட பற்று வெளிப்படுகிறது. கிராமப்புற பெண்கள் கூட தன் மகள் கருவுற்றால் கன்சிவ் அடைந்துவிட்டதாக கூறுகின்றனர்.

    ஒரு வார்த்தையில் பாதிக்குமேல் ஆங்கில கலப்பு வந்துவிட்டது. சாதம் என்ற சொல்லைக்கூட மறந்து வொயிட்ரைஸ் என்று அழைக்கும் நிலை வந்துவிட்டது. நம்நாட்டில் மிகப்பெரிய தலைவர்களாகிய அப்துல்கலாம், வெங்கட்ராமன், நிதியமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தமிழில்தான் படித்தார்கள், தமிழை வளர்த்தார்கள்.

    தற்போது தமிழ் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வந்துவிட்டது. மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் என எந்த படிப்பையும் தமிழில் படிக்க முடியும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழ் அறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். நாங்கள் உயிரைத்தருகிறோம். தயவுசெய்து தமிழை தாருங்கள் என்று போராடினர்.

    கல்வி வணிகமயமானதால் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. சட்டங்கள் போட்டாலும் இதனை பள்ளிகள் மதிப்பது இல்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு போடுகின்றனர். இவர்கள் தமிழை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். தமிழை அழிப்பதற்கு பதிலாக நீங்கள் பொரிகடலை வியாபாரம் செய்யலாம். தற்போது பிரி.கே.ஜிஎன்ற படிப்பிற்கு ரூ.2லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கே இவ்வளவு தொகை என்றால் மற்ற படிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும் என எண்ணிப்பார்க்க வேண்டும்.

    தற்போது பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மாதத்திற்கு பிறகு எங்கள் இளைஞர்கள் அதனை தார் பூசி அழிப்பார்கள். நாங்கள் எந்தமொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ்மொழியை காக்கவே விரும்புகிறோம். சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். இவ்வாறு பேசுவதால் நாங்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக நினைக்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×