search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222654"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் பகவதி அம்மன் கோவிலை வந்து அடைந்தனர். அதனை தொடர்ந்து இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சியும், வானவே–டிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    • மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
    • பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி,

    மேகல சின்னம்பள்ளியில் நடந்த வீரபத்திரசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் வழிபடும் வீரபத்திரசாமி கோவில் உள்ளது- இந்த கோவிலில் மைலேரி மல்லேஸ்வர சாமி, வீரபத்திசாமி, நீலகிரி சாமி, சித்தப்ப சாமி, மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி அழைத்தல், தம்பட எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு, வீரகாசி நடன நிகழ்ச்சியுடன், உற்சவ மூர்த்திக்ள திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மேகலசின்னம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • ஏழு கங்கையம்மன் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. ஏழு கங்கையம்மன்களான பொன்னாலம்மன், முத்தியாலம்மன், காவம்மன், அங்கம்மன், கருப்பு கங்கையம்மன், அங்காளம்மன், புவனேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரில் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    எழுந்தருளிய இடங்களில் அம்மன்களுக்கு பக்தர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பூஜைகள் முடிந்ததும் ஏழு அம்மன்களும் மீண்டும் ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு புறப்பட்டனர். ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தோரணங்கள் கட்டுப்பட்டு இருந்தது. அம்மன்கள் ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    • பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருக்கும்.
    • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சோம வார திருவிழா தொடங்கியது. விழாவில் வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், பரக்கலக்கோட்டைக்கு இயக்கப்பட்டன.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழி, நெல், தேங்காய், உளுந்து, நவதானியங்கள், தென்னங்கன்று, மாங்காய், பலாப்பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு மத்தியபுரீஸ்வரர் வீற்றிருக்கும் ஆலமரத்தின் இலையும், விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6 மணிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. நேற்று கடைசி சோம வார திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இவை ஏலம் விடப்பட்டன.

    வெளியூரில் இருந்து வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை உதவி ஆணையர் நாகையா தலைமையில் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள், ஊர் பிரமுகர்கள் செய்து இருந்தனர்.

    • திருமங்கலம் அருகே சிலை எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோவில் புரட்டாசி பொங்கல் விழா மிகவும் பிரசிதிபெற்றது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலை எடுப்பு திருவிழா பிரசிதிபெற்றது .

    பக்தர்கள் தங்களது கஷ்டம் தீர அய்யனார், கருப்ப சாமியை நேர்த்தி கடனாக சிலை செய்வதாக வேண்டி கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம் அரசு பணி வேண்டும் என்றால் அரசுஊழியர், காவல்துறை ஊழியர், ராணுவவீரர் போன்ற சிலைகளும், விவசாயம் செழிக்கவேண்டினால் டிராக்டர், காளைமாடு சிலைகளும், விஷபூச்சிகள் தீண்டாமல் இருக்க நாகர்சிலை உள்ளிட்ட சிலைகளும் நேர்த்திகடனாக செய்வதாக வேண்டி கொள்வர்.

    இந்த ஆண்டிற்கான சிலை எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் சிலைசெய்யும் வீடுகளிலிருந்து பக்தர்கள்ஆயிரக்கணக்கில் திரண்டு தாங்கள் வேண்டிக் கொண்ட சிலைகளை தலைசுமையாக ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். வாண வேடிக்கைகள் வெடிக்க வும், மேளதாளங்கள் முழங்கவும் சிலை எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    குறிப்பாக ஆசிரியர், ராணுவவீரர், அரசியல் தலைவர், டிராக்டர், ஆடு, மாடு சிலைகள், கருப்பணசாமி, அய்யனார் சாமிசிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தலையில் ஏந்தியபடியே ஊர்வலமாகவந்து வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

    இந்த சிலை எடுப்பு திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கம்பம், திருச்சி, உசிலம்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 8 பட்டறை பத்திரகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 பட்டறை பத்திரகாளி முத்து மாரியம்மன் கோவில் கொல்லர்திடலில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் 25-வது ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 30-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    மாவிளக்கு எடுத்தல், திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல் போன்றவை விமரிசையாக நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 12-ம் நாள் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர். பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • இந்த கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
    • விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில் நடப்பாண்டு புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவநாதசாமி கோவிலுக்கு திரண்டு வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மேலும் 3-ம் சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர இன்று 3-ம் வார சனிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பகுதி மற்றும் சாலைகளில் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இந்த கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்று உள்ளது. இதற்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்து உள்ளது.

    தமிழகத்தில் உள்ள மிகவும் தொன்மையான மற்றும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலின் வளாகத்தில் வீடுகள் அமைப்பு போன்று ஓட்டுக் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து செல்கின்றனர். இதுபற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சொந்தமாக வீடுகட்ட வேண்டும்.

    தங்களது சொந்த வீடு கனவு இல்லம் ஆசை நிறைவேற மங்களநாதரிடம் பிரார்த்தனை செய்து வளாகத்தில் கற்களால் வீடுகட்டி வேண்டிக்கொள்கின்றனர். பலருக்கு வீடுகட்டும் ஆசையும் நிறைவேறி உள்ளதால் அதன் நம்பிக்கையில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போன்று அடுக்கி வைத்து செல்கின்றனர்.

    இவர் அவர் கூறினார்.

    • அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
    • திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஓசூர் :

    ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கோயில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக, சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

    இதில், ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலிருந்தும் திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் காந்தராஜ், செயலாளர் மாதேஷ் என்கிற மகாதேவன், மல்லிகா, வீரபத்திரப்பா, வெங்கடேஷ் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
    • அதிகாலையில் நடை திறந்தவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் உலக புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வர். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது. இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய் ,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.

    அதன்படி கடந்த ஆவணி மாத முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி பாதுகாப்பில் இருந்த போலீசார் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது. கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாள் இரவே வந்து கோவிலில் தங்கி இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மூலவர் அம்மனுக்கு தாழம்பூ பாவாடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதைவிட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலக நலன் வேண்டி பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும் உலகத்திலுள்ள தமிழர்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து உச்சப்பட்டி சித்தி விநாயகர் கோவில் வரை பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் 30-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் புனித நீராடி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி அலகு மற்றும் பறவை காவடி எடுத்து திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், முல்லை நகர் வழியாக உச்சப்பட்டி முகாமில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார்.
    • திருமணமான தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சத்யபாமா பூமாதேவி அம்சம் ஆகும். ருக்மணி லெட்சுமி அம்சம் ஆகும்.

    பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லெட்சுமி தேவி பகவானிடம் சமர்ப்பித்தது பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருகிறார்.

    இதனை உணர்த்தும் வண்ணம் நவநீத கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இன்று மாலை 6மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெறுகிறது.

    இக்கோயிலில் பக்தர்கள் ஐந்து தீபமேற்றி 5முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள்.தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் நவநீதகிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.திருமண தோஷங்கள் நீங்கும்.

    கலியுக உபாதைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பல்லாண்டுகளாக குருவாயூர் போன்று துலாபாரம் நடைபெற்று வருகிறது.

    திருமணம் ஆன தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் 5 வயதுக்குள் துலாபாரம் ஆக வெண்ணெய் மற்றும் வாழைப்பழங்கள், வெல்லம், கல்கண்டு என விரும்பும் பொருட்களை கொண்டு துலாபாரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது தனிச்சிறப்பு ஆகும்.

    கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×