search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார்
    • இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்

    குன்னூர்

    நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை காந்திநகரை சேர்ந்தவர் சபாபதி. மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. கடந்த 19-10-2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக குன்னூரில் உள்ள நன்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்து உள்ளது. ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார். அவரை உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று நன்கம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர்.  இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலா 2-11-2020 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சபாபதி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது.  இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார. அதில் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரம் அடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைப்பது, பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி ஆகும். முதலுதவி மட்டும் வழங்கி விட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் பி.ஆல்துரை வழக்கில் வாதாடினார். மருத்துவமனை சார்பில், நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை. எனவே, சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்து இருக்கிறது என்று கூறி, நோயாளியிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டு உள்ளார்.

    • இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார்
    • இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.

    ஊட்டி

    காந்தல் விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தட்சிணாமூர்த்தி மடம் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. Also Read - மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை Powered By இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார். இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பக்தர்கள் எதிர்ப்பு இதைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் அஸ்வினி, உதவி கமிஷனர்கள் கருணாநிதி விமலா, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கோவை பேரூர் ஆதீனம் பொறுப்பேற்க நேற்று காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.  ஆனாலும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதால், போலீசார் பாதுகாப்புடன் மருதாசல அடிகளாரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். மேலும் கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதன் பின்னர் அவர் காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.

    • சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.
    • 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.

    வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    அதன்படி இன்று கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. 7-ந் தேதி நாளை முதல் 31-ந் தேதி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபயணம், 11-ந் தேதி படகு போட்டி என பல்வேறு கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    இதில் சிறப்பம்சமாக வருகிற 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊட்டி நகரின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.

    இதை தொடர்ந்து படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறுவனம் மூலமாக ஊட்டி தீட்டுக்கல் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒரு முறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம்.

    அங்கிருந்து 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.

    விமான நிறுவன உத்தரவின்படி சுமார் ஆயிரம் அடி உயரம் வரை பறந்து, ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருக்கலாம்.

    ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெறலாம். தீட்டுக்கல் மைதானத்துக்கு வந்தும் அனுமதி வாங்கலாம். ஊட்டி காலநிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணி, வனம் உள்ளிட்ட துறைகளில் அனுமதி கேட்கப் பட்டுள்ளது.

    • சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றனர்
    • நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஊட்டி,

    ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை கூடலூர், கல்லட்டி. சாலை வழியாகவும் வாகனங்கள் சேர்ந்து வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    தற்போது சீசன் தொடங்கி இருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பர்லியாறு, காட்டேரி லாஸ் நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் நின்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும் ஆசையால், குறுகலான சாலை இருக்கும் ஒரு சில இடங்களிலும் நின்று கொள்கின்றனர். இதனால் விபத்து அபாயம் இருக்கிறது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் சாலை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வாகன போக்கு வரத்து அதிகம் என்பதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    அப்படி இருக்கும் சூழ்நிலையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக லாஸ் நீர்வீழ்ச்சி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது நிற்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

    அதேபோல் லாஸ்ட் நீர்வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படலாம். முதலில் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வனவிலங்கு நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைத்தும் வேகமாக செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி மேற்கண்ட பிரச்சினைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெரு நாய்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது
    • அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராம மற்றும் நகர பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உணவு தேடி கரடிகள் தினந்தோறும் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதியில் ரெயில் வேக்கு சொந்தமான ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதன் அருகாமையில் குன்னூர் பஸ் நிலையம் மற்றும் மலை ரெயில் நிலையமும், அமைந்துள்ளது. இதனிடையே இரவு கரடி ஒன்று பூட்டி இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே செல்லமுயன்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் வரவே கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அங்கிருந்த உணவு பொருட்கள் வீணாகாமல் தப்பியது. இச்சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கரடி வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது. குன்னூர் பஸ் நிலையம் பகுதியில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக வந்து சென்றது. அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கன மழையால் தரைப்பாலம் உடைந்தது
    • மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் உடைந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து அய்யன்கொல்லி, பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைபாலம் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேசெல்ல வேண்டும். இந்த பகுதியில் பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது.
    • இதனால் குடியிருப்பு பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.


    ஊட்டி,

    குன்னூர் மேட்டுப்பா ளையம் சாலையில் பர்லியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதில் மழை காலங்களில் வீடுகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வ ரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழைத் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் கட்டி 10 நாட்கள் ஆன நிலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்

    • அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.

    கூட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்தன், நீலகிரி மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்திகேத்தி, பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும் கிளை செயலாளருமான நொண்டி மேடு கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் அசோக்குமார், கூடலூர் ராமமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் பழங்கள் பெரும்பாலும் செயற்கை முறையில் ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகின்றன.

    இதனால் அதை உண்ணும் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, அவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள பழகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது 2 கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதே போல மற்ற 2 பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த 4½ கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் தெரிவிக்கை யில், தர்ப்பூசணி, மாம்பழம், வாழைபழம் போன்ற பழங்களை இரசாயன பொ ருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால், அவை பறிமுதல் செய்யப் படுவதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
    • பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் நகர்பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கக்கநல்லா.சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முறையாக சேமித்து வைத்து அப்புறபடுத்தபடாத காரணத்தால் அடர்ந்த வனப்பகுதியில் பல மீட்டர் தூரத்திற்கு பரவலாக குவிந்து கிடக்கின்றன.

    இதில் தேங்கும் உணவை ருசிக்க அப்பகுதியில் உள்ள குரங்குகள் குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிகின்றன. இதேபோல சில சமயங்களில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைத்தொட்டியில் உணவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது பற்றி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவலைபடுவதாக தெரியவில்லை என சுற்றுசூழல் மற்றும் வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    • வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் கண்காட்சி நடைபெறுகிறது.
    • 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர்.

    ஊட்டி,

    காய்கறி கண்காட்சியில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளான பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் அமைக்கப்படும். மேலும் பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    இந்த காய்கறி கண்காட்சியை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வர். எனவே பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பூங்காவின் நுழைவு வாயில் அருகே எல். இ.டி விளக்குகளுடன் 'ஐ லவ் கோத்தகிரி' என்கிற வாசகம் மற்றும் மலர் அலங்காரத்துடன் ஒரு செல்பி ஸ்பாட், பூங்காவின் மையப் பகுதியில் பிரமாண்டமான பறவையின் சிறகு போன்ற வடிவத்திலான மற்றொரு செல்பி ஸ்டேண்ட் மற்றும் செயற்கை நீரூற்று அருகே நம்ம கோத்தகிரி என்ற வாசகத்துடன் கூடிய செல்பி ஸ்பாட் என 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அரங்குகள் அமைத்து காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சுமார் 4 டன் எடை கொண்ட காய்கறிகளை கொண்டு ஒரு பிரதான காய்கறி சிற்பமும், 3 சிறிய சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

    20 அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துமிடத்தை தீர்மானிப்பது, காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சந்திரன், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் அரங்குகள் அமைப்போர் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    • இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா கொளப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது.

    ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்று கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

    இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். பல வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்தாலும் தற்போது பந்தலூரில் பூத்துள்ள இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில் பூத்துள்ளதால் தங்கள் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என கருதி சிலர் அந்த பூக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×