search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • கரடி ஊருக்குள் வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது.

    ஊட்டி

    வனவிலங்குகள் நடமாட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அருகே உள்ள போர்த்தியாடா எல்லைக்கண்டி பகுதியில் கரடி ஒன்று வளர்ப்பு பிராணி போல் சாலையில் உலா வந்துள்ளது.

    இதன் பின்னர் சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டியில் ஏறி, பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு கழிவுகளை எடுத்துக்கொண்டு அங்கேயே தின்றுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி போன்ற வனப்பகுதியில் உணவு கழிவுகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டக் கூடாது. குப்பை தொட்டியில் உணவு கழிவுகளை கொட்டுவதால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம். இதை வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் அதையும் கண்காணித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இல்லையெனில் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை தின்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது, என்றனர்.

    • போலீசார் இன்பமலரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    • கோத்தகிரி தாசில்தாரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது கெரடாமட்ட தேயிலைத் தோட்டத்தில் இன்பமலர் (வயது 44) என்பவர் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென இடி- மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இன்பமலர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உடன் வேலை செய்த தொழிலாளிகள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோத்தகிரி வட்டாட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இன்பமலரின் கணவர் மூர்த்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். எஸ் கைகாட்டி ஓம்நகரில் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த இன்பமலர் இடி மின்னல் தாக்கி பலியான சம்பவம், சக பெண் தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பூசனகுமார், குன்னூர் டி.எஸ்.பி குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (அமலாக்கம்) விஜயா ,கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, தீயணைப்புத்துறை ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது.

    அப்போது வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டிய கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா, அவசர கதவுகள் சரியாக திறக்கப்படுகிறதா? என்று பரிசோதனை செய்தனர்.

    அப்போது காமிரா சரியாக எந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு அம்சங்கள் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது, மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, பள்ளி வாகனங்களில் இருக்கை அளவுக்கு ஏற்ப மட்டுமே குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும், வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என்பவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் தவறான செயலில் ஈடுபடுபவர் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் தகுதி சான்று இல்லாத வாகனங்களை மீண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் பள்ளி வாகன தகுதி ஆய்வின் போது வாகனங்களை ஆய்வு மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • யானை வழித்தடத்தில் சாலை அமைத்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
    • பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குன்னூர் வனப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் காப்பி மற்றும் மிளகு பயிரிடுவதற்காக கனரக வாகனத்தை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி கடந்த 20-ந் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் கனரக வாகனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கடமைகளை செய்ய தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சம்பந்தப் பட்ட வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் செயலாளர், வனச்சரகத்தின் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.

    மேற்கண்ட குழு உறுப்பினர்கள் தங்களது பணிகளை சரியாக செய்கிறார்களா? என்பதை சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், ஆர்.டிஓ, தாசில்தார், வனச் சரக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க. வேண்டும். மேற்கண்ட பணிகளில் ஏதேனும் சுணக்கம் காணப்பட்டு, புகார்கள் ஏதும் பெறப்படுமேயானால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களின் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று குந்தா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
    • ரூ.49.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களை கலெக்டர் அம்ரித் பார்வயைிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. எனவே கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக போக்குவரத்து சாலையில் முறிந்து விழும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஊராட்சிகள், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பார்ஷா எந்திரம், ஒலிபெருக்கி, ஜே.சி.பி வாகனம், மணல் மூடைகள் ஆகியவை தயாராக உள்ளன.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று குந்தா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு உள்ள பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அவை இயங்கும் நிலையில் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சூர் அரசு தொடக்க கல்வி அலுவலர் முகாமில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை மற்றும் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களை பார்வயைிட்டார். அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுரை கூறினார்.

    • கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்தது.
    • கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ணநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் இந்த சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கோடநாடு பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    • போலீஸ் பணிக்கு விரும்பி வந்தீர்களா என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டார்.
    • சென்னையில் இருப்பதைப் போல் இந்தக் கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    ஊட்டி

    தமிழ்நாட்டில் காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். பயிற்சி வகுப்பு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு செயல்பாட்டில், போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வந்தார்.

    வரும் வழியில் குன்னூர், வெலிங்டன், ஊட்டி மத்திய போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். போலீஸ் பணிக்கு விரும்பி வந்தீர்களா என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டார். மேலும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள, நீலகிரி மாவட்ட முதல் போலீஸ் நிலைய பாரம்பரிய கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும் சென்னையில் இருப்பதைப் போல் இந்தக் கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் காவல்துறை சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவலர்களுக்கு, பழங்குடியினர் சான்று மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது குறித்து 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 1.2 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். கடந்த ஆண்டு இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 75 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு பழங்குடியினர் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களில், 2,600 பேருக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் உயர் கல்வி போட்டி தேர்வுகளில் அவர்கள் பணிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    2,300 வரவேற்பு அதிகாரிகள் போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நல்லுறவு பேணும் வகையில் போலீஸ் நிலையங்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் அவர்களுக்கு தெரிந்த மொழியில் கணிவாக பேசி, புகார்களை பதிவு செய்வது குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

    காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, முழு திறன் கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 3500 காவலர்கள் தேர்வாகி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். உதவி ஆய்வாளர்கள் 1000 பேர் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 600 உதவி ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கவுள்ளது. இனி 6 மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் ஆட்கள் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

    • டீசல் டேங்கில் புகை வந்ததால், டிரைவர் காரை நிறுத்தினார்
    • கோத்தகிரி பகுதியிலும் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.

    அரவேனு,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற மாருதி கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    .

    கார் தட்டப்பள்ளம் அருகே வந்த போது வாகனத்தின் டீசல் டேங்கில் இருந்து புகை வந்துள்ளது. உடனே காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். காரில் தீ மளமளவென பரவி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

    இதனைபோல, கோத்தகிரி நகர் பகுதியில் டானிங் டன் பகுதியில் சக்தி தியேட்டர் பின்புறம் பாரத் என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து தீயணைப்பு துறையுனர் மின்கசிவு ஏற்பட்ட வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர் .

    இந்த 2 தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் பழுதாகியது.
    • வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் அணிவகுத்து நின்றன.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை திருவிழா நடைபெற்று வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் நீலகிரிக்குள் வந்து செல்ல ஏதுவாக மாவட்ட நிர்வாகம் சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாகவும் சுற்றுலாவை முடித்து விட்டு திரும்பி செல்ல கோத்தகிரி வழியாகவும் ஒருவழிப்பாதையாக உள்ளது.

    இதனால் மாலை வேளைகளில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மேட்டுப்பாளையம் வரை ஊர்ந்து செல்லும் நிலையில் இருக்கின்றன.

    இதில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்று விட்டது.

    காலை முதல் மாலை வரை அந்த லாரியை பழுது பார்த்து விட்டு மாலை லாரியை அங்கிருந்து கிளப்ப முற்பட்டபோது லாரி சாலை வளைவின் நடுவில் மீண்டும் பழுதாகி நின்று விட்டது. இதனால் வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் வரை சாலையில் அணிவகுத்து நின்றன. மேலும் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கீழ்குந்தா கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா்.

    இதில் வருவாய்த் துறை சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நத்தம் பட்டா, 5 பயனாளிகளுக்கு சாலை விபத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ.1.80 லட்சத்துக்கான உதவித்தொகை, விதவை சான்று, புதிய குடும்ப அட்டை, நுண்ணீா் பாசனக் கருவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மகளிருக்கான சுயதொழில் கடனுதவி, ஊராட்சித் துறை சாா்பில் 28 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    முன்னதாக நடமாடும் மருத்துவ முகாம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, பொது விநியோகத் திட்டம், சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தோ்தல் பிரிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இ-சேவை மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, கீழ்குந்தா பேரூராட்சி, மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.

    முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனப்பிரியா, தோட்டகலைத் துறை துணை இயக்குநா் ஷிபிலாமேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, கீழ்குந்தா பேரூராட்சித் தலைவா் சத்தியவாணி, செயல் அலுவலா் ரவி, தூனேரி ஊா்த் தலைவா் ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம்.

    அரவேனு,

    கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா உள்ளது. இது 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பேரூராட்சியின் 21 வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    அதன்பிறகு இங்கு மக்கும்- மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யபட்டு அங்கு தற்போது 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம். எனவே தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரம் வாங்கி பயன் பெறலாம் என்றனர்

    • போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.
    • ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ெகாடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சோலூர்மட்டம் போலீசார் சார்பில் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கூறுகையில் போதைப்பொருளுக்கு ஏராளமான இளைஞர்கள் பலியாகி உள்ளனர். அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டாலும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.

    உங்கள் பகுதியில் போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு கோடநாடு ஊராட்சி சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாகவும் துணைத் தலைவர் ரவி தெரிவித்தார்.

    ×