search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223472"

    • பிளஸ்-1 தேர்வு முடிவில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.
    • மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் பெற்றுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 23 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 22 ஆயிரத்து 292 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.44 ஆகும்.

    மாநில அளவில் பெரம்பலூர் முதலிடமும், விருதுநகர் 2-ம் இடமும், மதுரை 3-ம் இடமும் பெற்றுள்ளது.

    • விருதுநகர் திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (28-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவியூர், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சுழி, தமிழ்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையப்பட்டி, காத்தான் பட்டி, இலுப்பையூர், பனையூர், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.

    அதேபோல புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புல்வாய்க்கரை, ஆவரங்குளம், அ. முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், எஸ்.நாங்கூர், பிள்ளையார்குளம், தச்சனேந்தல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

    நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உழக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், இலுப்பைக்குளம், பனைக்குடி, இனக்கனேரி, எஸ். மறைக்குளம், குறவைகுளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் நாைள மின்தடை செய்யப்படும்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அப்பகுதியில் பழைய மின் கம்பிகளை அதிக திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி மற்றும் மரக் கிளைகளை வெட்டும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் மதுரைரோடு, கச்சேரி ரோடு, லட்சுமிகாலனி, நேருஜிநகரில் சில பகுதிகள், கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்.ஜி.ஓ. காலனியில் முத்தமிழ் வீதி, அம்மன் வீதி, வி.வி.வி. கல்லூரி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் தொழில் அமைச்சக விருதை 30-ந் தேதி கலெக்டர் பெற்றுக்கொள்கிறார்.
    • விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதில் இருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மாவட்டங்களை முன்னேற்றும் வகையில் பாரத பிரதமரால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி 112, மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.

    இதற்கென, சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த காரணிகள் அடிப்படையாக உள்ளன.

    இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய விருதுகள்-2022க்கான விருதுகள் பிரிவில் முதல் பரிசிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முன்னேற விளை யும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப் பட்டு, டெல்லியில் வருகிற 30-ந் தேதி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இந்திய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவ னங்களின் முதல் விருது வழங்கப்பட உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனை வோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மாவட்ட தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி மையம் மூலம் செயல்படுத்த படும் திட்டங்களை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 48). இவரது மனைவி புஷ்பராணி (45). இவர்களது மகன் ருஜித்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் தனது தாயாரிடம் ருஜித்குமார் பேசுவதை தவிர்த்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த புஷ்பராணி அவரது தாயார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.

    ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் கிழக்கு பாண்டியன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (27). இவரது மனைவி சக்திபிரியா.

    கடந்த சில மாதங்களாக அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக சக்தி பிரியா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மனைவியிடம் சமரசம் பேசி பலனில்லை. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
    • இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.1 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம் பிடித்தது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 21 ஆயிரத்து 602 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.25 சதவீதம் தேர்ச்சி ஆகும். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    • பள்ளி மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் 12-ம் வகுப்பு படித்துவிட்டு கம்ப்யூட்டர் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று 11 மணிக்கு வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்மமாக இறந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் பண்டரிபாய் (வயது 51). இவர் பரளச்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். இதன் காரணமாக பண்டரிபாய் தனியாக வசித்து வந்தார். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் தீபக்ராஜ் என்பவர் பண்டரிபாயை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதியினர் கதவை உடைத்து பார்த்தபோது பண்டரிபாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பண்டரிபாய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் “நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்” உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது.
    • குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி-தீபிகா தம்பதியரின் 3 வயது மகள் மீரா அரவிந்தா 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.

    இந்த குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார். இந்த சாதனை புரிந்ததற்காக மற்றும் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தற்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மீரா அரவிந்தாவுக்கு "நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் வழங்கி பாராட்டினர்.

    இந்த நிகழ்ச்சியில் மேகநாதரெட்டி, "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன், மாநில இயக்குனர் ஜெயக்குமார், நடுவர்கள் பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காரியாபட்டி அரசு ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளையடித்து சென்றனர்.
    • நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). இவர் அருகில் உள்ள சாலை மறைகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டைப் பூட்டி விட்டு பாண்டியராஜன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான வத்திராயிருப்புருக்கு சென்று விட்டார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 9 பவுன் 4 கிராம் நகையை திருடி கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய பாண்டியராஜன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருடு போயிருந்தது. இது குறித்து அவர் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

    சிவகாசி

    பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப அய்வு கழகம் (நீரி) அமைப்பிடம் பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவந்தனர்.

    இந்த நிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனாராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தி யாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.நான்கரை கோடியை சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.நான்கரை கோடியை நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயண கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×