search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226542"

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.
    • கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டனர்.

    இதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை மற்றும் ஆறுகளில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் அனுமதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதியில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்கள் தர்ப்பணம் செய்து சென்றனர்.

    • முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர்.
    • பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

    புண்ணிய நதியாக கருதப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர். பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

    இதேப்போல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    இதேப்போல் டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
    • சமயபுரம் மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை ஒரே இடத்தில் அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீர் நிலைகள் மற்றும் கோவில் வளாக பகுதிகளில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் பலர் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு நடத்த முடியாமல் போனது. அவர்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். தற்போது எந்தவித தடையும் இல்லாததால் திரளானோர் நீர் நிலைகளில் குவிந்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நோய் பரவல் காரணமாக எங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனது. அவர்களின் திதி நாட்களை மறந்தபோதிலும், இதுபோன்ற மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவோம்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் புனித நீராடி, மன நிறைவுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு உள்ளோம். இதன் மூலம் எங்களின் மனக்குறைகள் நீங்கிவிட்டது. எங்கள் குலம் செழிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

    இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரியம் மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.

    • இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் படித்துறையில் இருந்து தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு குடும்பத்துடன் சென்று தர்ப்பணம் செய்து எள்ளும், நீரும் இறைத்தனர்.

    இதேபோல் கடற்கரை பகுதிகளிலும் இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் கடலில் எள்ளை கரைத்து புனித நீராடினர். சிவந்திபுரம் கஸ்பா கல்யாணிதுறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கி அம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதனையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை மற்றும் மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.

    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிகாலையில் பொதுமக்கள் குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள் தூவி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயு தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலும் பொதுமக்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கடலில் எள்ளை கரைத்தனர். பெரும்பாலானோர் தர்ப்பணத்தை முடித்துவிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். மிதமாக கொட்டிய தண்ணீரில் புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

    • ஈரோடு பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வர ரை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று ஏராளமானோர் பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.

    இதை யொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.

    அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கக்கபட்டு வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வழியுறுத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.

    மேலும் வெளியூர்களில் வந்த வாகனங்கள் பவானி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, செல்லாண்டி யம்மன் கோவில் வளாகம் மற்றும் தேர் வீதி உள்பட பல் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் கனரக வாகனங்கள் பவானி நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கனரக வாகங்கள் பவானி புதிய பஸ் நிலையம், காவிரி ஆற்று பாலம் மற்றும் குமாரபாளையம் வழியாக சென்றன.

    பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    • பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.
    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப அபிவிருத்தி உண்டாகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை தினம் இன்று (25-ந்தேதி) என்பதால் ராமேசுவரத்தில் நேற்று முதலே பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.

    இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் ராமேசுவரம் திருவிழா கோலம் பூண்டது.

    தர்ப்பண வழிபாடு மட்டுமின்றி பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் குளித்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் ஜோதிர்லிங்கம் சன்னதியில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்துக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடிநீர் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு சுகாதாரத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. மேலும் இந்த மலையில் பல சித்தர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.

    சதுரகிரியிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரியிலும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மற்றும் வைகை ஆற்றாங்கரைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.
    • எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!

    தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவருலகவாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

    அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும்.

    பிறகு ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • இந்த கோவிலில் சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும்.
    • மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் பூசிய தேங்காயை தங்களது இல்லத்தில் இருந்து எடுத்து வந்து மூலை அனுமாரை புகழ் பெற்ற ராசி மண்டலம் சிற்பத்தில் அவரவர் ராசிக்கு கீழ் நின்று தரிசனம் செய்து மனம் உருகி தரிசனம் செய்வார்கள்.

    பின்னர் காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். பூர்வ ஜென்மம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 25-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு லட்ச ராமநாமம் ஜெபம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கனிகளால் ஆன சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. மூலை அனுமாருக்கு மகாளய அமாவாசை அன்று பழங்களால் ஆன மாலை சாற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    • இந்த 15 நாட்கள் மட்டுமே பித்ருக்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும்.
    • சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம்.

    தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனில் இருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலம், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலம், ரிஷிகடனில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மகாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மகாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    • அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • கொடி மரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

    மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்றவனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பிறகு காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பகாசுரன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கோவில் கொடி மரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.

    • சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குகிறது.
    • தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) ஆவணி அமாவாசை தினம்.

    தமிழர்களின் ஜோதிட கணக்கின்படி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் இம்மாதத்தை சிங்க மாதம் எனவும் அழைக்கின்றனர்.

    இம்மாதத்தில் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குவதால் இன்று காலை அமாவாசை தர்ப்பணம், திதி போன்ற சடங்குகளை செய்யலாம். ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

    தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்பு இந்த தர்ப்பணம் சடங்கு நன்றாக அமைய தேவர்களின் நாயகனாகிய விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபட வேண்டும். அல்லது மானசீகமாக வழிபடலாம்.

    பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது. வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் கஷ்ட நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.

    ×