search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது.
    • உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே வணங்கானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (வயது32). கொத்தனார். இவர் சாத்தனூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிக்காக ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 8 இரும்பு தகடுகளை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அவர் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21), அருண் (23), மாது (19), சசிக்குமார் (22) ஆகியோர் இரும்புதகடுகளை திருடியது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார்.
    • காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சரஸ்வதி (வயது 38). ஓசூர் சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சாரி (41). தொழிலாளி. 2 பேர் குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார். இதில் காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாச்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.
    • மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே அக்ரஹாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கங்கதார் (வயது28). டாக்டரான இவர் அதே பகுதியில் தனியார் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் மாதேஸ் (31). இவருக்கும் அவரது சகோதாரர் சீனிவாசன் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கங்கதார் மற்றும் கிராம மக்கள் இருதருப்பினரையும் சமதானம் செய்து வைத்தனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.

    இதுகுறித்து அவர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • பன்னீர்செல்வம் (49) என்பவர், போலீசார் மீது ஆவேசமாக கல்லை தூக்கி வீசினார்.
    • போலீசார், பன்னீர்செல்வம், சிவக்குமார், சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சீரியன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நதியா (வயது19). இவர் அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி, கல்லூரிக்கு சென்ற நதியா பின்னர் வீடு திரும்பவில்லை. அதே நாளில், அப்பகுதி யைச் சேர்ந்த விஜயஅரசு (24) என்பவரும் மாயமானார். இதுபற்றி, இருவரது பெற்றோரும் தனித்தனியே மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், நதியாவும், விஜயஅரசுவும் காதலித்து வந்ததும், சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, இருவரையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, படித்து முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்வோம் என நதியாவும், விஜயஅரசும் எழுதிக்கொடுத்து விட்டுச்சென்றனர்.

    இந்நிலையில் காதலனை பிரிந்த வேதனையில் இருந்த நதியா, கடந்த 26-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மாரண்டஹள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே, காதலனிடம் இருந்து நதியாவை போலீசார் பிரித்து அனுப்பியதால்தான், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய விஜயஅரசுவின் உறவினர்கள், போலீசார் மீது குற்றம்சாட்டி கடந்த 27-ம் தேதி மாலை பெல்ரம்பட்டி-பாலக்கோடு சாலையில் கற்கள், கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாண்டஹள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் (49) என்பவர், போலீசார் மீது ஆவேசமாக கல்லை தூக்கி வீசினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தின் முகத்தில் கல் தாக்கி ரத்தம் கொட்டியது. இதையடுத்து,பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன் தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    தொடர்ந்து அவர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பன்னீர்செல்வம், சுதன் (48), சக்திவேல் (22), சிதம்பரம் (28), சண்முகம் (35), முத்துவேல் (27), அருள் (28), ஆறுமுகம் (47), ராஜேந்திரன் (21), அமுதா (25), தெய்வானை (35), கணேசன் (40), முனுசாமி (30) ஆகிய 13 மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பன்னீர்செல்வம், சிவக்குமார், சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
    • கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.

    இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. நீதிபதி தினேஷ்குமார் வர்மா கூறும்போது, மணீஷ் சிசோடியா ஒரு செல்வாக்கு மிக்க மனிதர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

    கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தற்போது டெல்லி ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்திற்கு முயன்றவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்
    • சுப முத்துக்குமரன் பாசறையை சேர்ந்தவர்கள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே சுப முத்துக்குமரன் பாசறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் நிலையத்திலிருந்து நடை பயணமாக புறப்பட்ட நபர்களை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு மறித்து போலீசார் கைது செய்தனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு சுப முத்துக்குமரன் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை தாங்கினார்.

    • கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. டிரைவர். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி சாலையில் செல்வோரை குரைத்து மிரட்டி அச்சுறுத்திவந்ததாக தெரிகிறது.மேலும் வாகனங்களில் செல்லும் போது அதன் முன்பு நின்றும் குரைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அதே பகுதியைசேர்ந்த சங்கர், பிரபாகரன், ரோகித்த ஆகியோர் ராமமூர்த்தியிடம் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர். மேலும் அதன் கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நாய் இறந்து போனது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பஸ் டிப்போ மற்றும் சேணிஅம்மன் கோவில் அருகில் வண்டியில் காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தேவனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள் என்கிற அருள்குமார் (வயது 37). இவர் அந்த பகுதியில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அருள் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 11 மணிக்கு மணலூர்பேட்டை ரோட்டில் உள்ள தேவனூர் புதூர் அருகே வந்த போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அருள்குமாரை கத்தி அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த அருள்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது.
    • ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    ஈரோடு:

    மேற்குவங்க மாநிலம், மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம்.

    இதுகுறித்து, ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளனர்.

    இதைக்கண்ட அருகில் இருந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களை தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ண மூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பொதுமக்களை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது
    • போலீசார் எச்சரித்தும் கேட்காததால் கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    குளித்தலை,வெள்ளப்பட்டி, சின்ன தேவன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவர் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு, ஆபாச வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார். தோகைமலை போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமல் வழக்கம்போல் இன்று காலை ஓட்டலுக்கு வேலை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது விமலின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது பின்னால் வந்த அந்த கும்பல் விமல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை தாக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர். விமலுக்கு கழுத்து, தலை உள்ளிட்ட 10 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. வாலிபரை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது விமலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 3 வாலிபர்களில் 2 பேர் வானூர் அருகே மாத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக கூறினர்.

    பொதுமக்கள் கூறிய வழியில் போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விமல் மீது ஏற்கனவேகொலை வழக்கு உள்ளது. இதற்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான முழுவிபரம் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர்களை பிடித்தால் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் வாலிபரை சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×