search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், எஸ்.பி. பரிந்துரை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இதனையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
    • கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அச்சிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசா (வயது24). இவர் தளியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கணேசன் (25). உறவினர்களான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணேசன், அவரது நண்பர்கள் கீச்சானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (28), வேணு (18), விஜய் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார். இதில் காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து சீனிவாசா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அண்ணாநகரில் பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சேத்துப்பட்டை சேர்ந்த பரத் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணத்தை வசூல் செய்தனர். அப்போது வசூல் செய்த பணத்தை காரில் வைத்து இருந்தனர். காரில் டிரைவராக கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் இருந்தார்.

    அம்பத்தூரில் உள்ள ஒருநிறுவனத்தில் ஊழியர்கள் வசூல் செய்ய சென்றபோது பணம் இருந்த காரை திடீரென டிரைவர் அமீர் பாஷா ஓட்டி தப்பி சென்று விட்டார். அந்த காரில் ரூ.35½ லட்சம் ரொக்கம் இருந்தது. இதனால் வசூலில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த காரில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதனை வைத்து பார்த்த போது பணத்துடன் கார், மாதவரம் நோக்கி செல்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து சென்று மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரூ.35½ லட்சத்தையும் மீட்டனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர் பரத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் பணத்துடன் தப்ப முயன்ற டிரைவர் அமீர்பாஷாவை கைது செய்தனர். காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அவர் உடனடியாக சிக்கிக்கொண்டார். அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சத்யாவை சந்திக்க மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த நண்பர்களான லோகேஷ், திருவள்ளூர் ஐ.ஆர்.என். பின்புறம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கோழிப் பண்ணை அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த லோகேஷ் மற்றும் ரவி ஆகியோர் சத்யாவை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் வலது கை கட்டை விரல், நடு விரலையும் கத்தியால் துண்டித்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம்கேட்டு வந்த சத்யாவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றுகின்றனர்.
    • 70 போதை மாத்திரைகள், ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் வாலிபர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில்,பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக, பெரிய கடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் போதை மருந்து, ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவர்களை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பி (எ) அக்பர் அலி (வயது 27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலாளி ரியாஷ் கான் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றி, ஊசி மூலம் உடம்பில் செலுத்துவது தெரிய வந்தது.

    எனவே போதை மாத்திரை, மருந்துகள் விற்றதாக, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணசாமி ரோட்டில் கஞ்சா விற்றதாக, தெற்கு உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த மீன் கடை தொழிலாளி ஷாஜகான் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலத்தின் கீழ்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை கண்டதும் 2வாலிபர்கள் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த ரவிச்சந்திரன், அவர்களிடம் சோதனை செய்தபோது வாள், அரிவாள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரவிச்சந்திரன் அந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவனியாபுரம் திருப்பதி நகர் 8-வது தெரு, கணேசன் மகன் ரூபன் (24), அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் இருளப்பன் மகன் தமிழ் இனியன் (19) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவராம கணேஷ்(வயது16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சிவராம கணேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்பு இரவில் வீடு திரும்பிய சிவராம கணேசின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதுகுறித்து பெற்றோர் கேட்டபோது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் நேற்று மாணவர் சிவராம கணேசுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை, அவரது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிவராம கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது மகன் இறந்ததால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த நிலையில் தனது மகன் இறந்திருப்பதால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சிவராம கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் ஊர் திருவிழாவுக்கு குரூப் டி-சர்ட் அடித்துள்ளனர். அதற்கு சிவராம கணேஷ் பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிவராம கணேஷ் தனது நண்பர்கள் 3 பேர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவரிடம் டி-சர்ட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தது தொடர்பாக நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சிவராம கணேசின் நண்பர்கள், அங்கு கிடந்த தென்னை மட்டையால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் காயமடைந்தாலேயே சிவராம கணேஷ் இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சிவராம கணேஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பிளஸ்-2 மாணவர்கள் ஆவர். மற்றொருவர் கூலி வேலை பார்த்து வரும் 18 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். 

    • தொட்டியத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • எரிசாராயம், 40 லிட்டர் ஊறல் அழிப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 லிட்டர் எரிசாராயம் மற்றும் 40 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். அதேபோல் அங்கிருந்த சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொட்டியம் போலீசார், கார்த்திகைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 40), தமிழரசன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த பகுதியை முசிறி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.தொடர்ந்து அந்த பகுதியில் வேறு எங்காவது சாராயம் காய்ச்சப்படுகிறதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.

    பல்லடம் :

    வாட்ஸ்அப்' வாயிலாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில், அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் - சென்னிமலைபாளையத்தை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 55. இவர், கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், 'வாட்ஸ் அப்' மூலம் கேரள மற்றும் மூன்றாம் நெம்பர் லாட்டரி விற்பனையும், 'கூகுள் பே' வாயிலாக, பண பரிவர்த்தனையும் மேற்கொண்டது தெரிந்து, இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 மொபைல் போன், கேரள லாட்டரி, 20 மற்றும் 1,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர். 

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் குப்பம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முருகேசன்(வயது 29), நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த ரவி(46), மரவம்பாளையம் நாடார்புரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(50), பெரிய வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்(57) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.5 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் அனிதா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது கே.டி.சி. நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு பாளை ராஜகோபாலசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துஹரி (வயது 22) என்பவரை அவரது நண்பர் பிரீதம் என்பவர், சாந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் ஜோஸ் செல்வராஜ், ப்ரீத்தம், செல்வகுமார், சுகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று ஜோஸ் செல்வராஜ் ஆஜராகி விட்டு வரும்போது முத்து ஹரியின் அண்ணன் சந்தோஷ் என்பவர் ஜோஸ் செல்வராஜின் நண்பர்கள் ஆன ப்ரீத்தம் செல்வகுமார், சுகுமார் ஆகியோரிடம் மது வாங்கிக் கொடுத்து ஜோஸ் செல்வராஜை ஜெபக்கூடத்திற்கு பின்புறம் உள்ள அந்த கட்டிடத்திற்கு அழைத்து வந்து மதுவை குடிக்க வைத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பழிக்குப் பழியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ப்ரீத்தம் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    வடகாடு அருகே வாணக்கன்காட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகேயுள்ள பாரில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்துள்ளது. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி மற்றும் போலீசார் அப்பகுதியில் நடத்திய ஆய்வில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வாணக்கன்காடு பகுதியை சேர்ந்த பரிமளம் (வயது 49) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வரும் வழியில், அப்பகுதியில் அனுமதியின்றி பார் நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அவரது மகனும் சேர்ந்து போலீசாரை வழிமறித்து பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×