search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232788"

    • நோபல் கமிட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.
    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது.

    நான் மோடியின் மிக பெரிய ரசிகர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது-

    ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 'ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' என்றார்.

    நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.

    உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது
    • இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்று கூறி உள்ளது

    மின் கட்டணம் செலுத்த தவறுவோரின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களாக போலியான தகவல் பரவி வருகிறது. மக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த தகவல் வலம் வருகிறது.

    'வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவு 8.30 மணியளவில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாரியங்கள் அல்லது மின்விநியோகஸ்தர்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான மொத்த மின்கட்டணத் தொகை மற்றும் நிலுவைத் தேதி குறித்து எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கின்றனர். இதே பாணியில் இந்த போலி செய்தியும் உள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி ஏமாந்துவிடுகின்றனர்.

    தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அரசு காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இந்த தகவல் போலி எனவும், இந்த குறுந்தகவலை பயனாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

    மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் தகவலுக்கு பதில் அனுப்பினால், மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருடிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது.
    • மத்திய கல்வி அமைச்சகம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்விக் கொள்கையின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

    'புதிய கல்விக் கொள்கைக்கு சில மாற்றங்களுடன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்றங்களின்படி, இனி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இல்லை, எம்ஃபில் படிப்பு நிறுத்தப்படும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்' என அந்த வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி பலமுறை அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.

    இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், 10வது வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது எனக் கூறும் வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி போலியானது என்றும், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிபிசி ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
    • ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.

    2002 குஜராத் கலவரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது. தொடர்ச்சியான காலத்துவ மனநிலையை இந்த ஆவணப்படம் பிரதிபலிப்பதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், தடையை மீறி பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.

    இந்த சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிற்பதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர்.

    எனவே, இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, ராகுல் காந்தியுடன் நிற்பது பிபிசி ஆவணப்பட இயக்குனர் அல்ல, பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா என்பது தெரியவந்தது.

    கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியபோது இந்த புகைப்படம் பற்றிய உண்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றன. இதே புகைப்படத்துடன் மே 2022 முதல் வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், லண்டனில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த புகைப்படம் 2022ம் ஆண்டு மே 23ம்தேதி இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.

    ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த ஆவணப்படத்துடன் ஜெர்மி கார்பினுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

    எனவே, சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டதாக கூறி ட்விட்டரில் தகவல் வெளியானது
    • மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ.5.5 கோடி செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

    குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மோர்பிக்கு சென்று பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

    அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்காக குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்திருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இதுபற்றி தகவல் பெறப்பட்டதாக கூறி சகத் கோகலே என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    அதில், ``பிரதமர் மோடி சில மணி நேரம் வந்து சென்றதற்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த 135 பேரின் குடும்பங்களுக்கு மொத்தமே ரூ.5 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு, நிகழ்ச்சி மேனேஜ்மெண்ட் மற்றும் போட்டோகிராபிக்கு மட்டுமே 5.5 கோடி செலவு செய்துள்ளனர்'' எனப் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு வைரலான நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. அதில், சகத் கோகலே வெளியிட்ட தகவல் உண்மையல்ல என தெரியவந்தது.

    இதுதொடர்பாக PIBFactCheck தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் "ஆர்டிஐ சொன்னதாக மேற்கோள்காட்டி, ஒரு ட்வீட்டில் பிரதமரின் மோர்பி வருகைக்கு சில மணி நேரத்துக்கு ரூ.30 கோடி செலவானது என்று கூறப்பட்டது. அந்த தகவல் போலியானது. இது குறித்து RTI பதில் எதுவும் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
    • 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் கடந்த வியாழக்கிழமை வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிடிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்து போன ஒருவரின் உடல் அருகே சிறுவன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதில், இம்ரான் கான் பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர் என்று பதிவிட்டனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக இணையதளங்களில் தேடிய ஆய்வு செய்ததில், இது பழைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் வேறு தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடல் அருகே அவரது மகன் இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஹெல்மண்ட் மாகாணத்தில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சடலத்தின் அருகில் அவரது மகன் கண்ணீருடன் இருப்பதாக மற்றொரு நபர் பதிவிட்டிருந்தார். மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகள் எங்கே உள்ளன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆப்கான் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன்மூலம் இந்த புகைப்படம் பழையது என்பதும், எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது என்று பொய்யாக பகிரப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்
    • தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் நியூஸ் கார்டுகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், போராட்டத்தில் கைதான எடப்பாடி பழனிசாமி ஆட்களுக்கு யா மொய்தீன் கடையில் இருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டதாக மாலை மலர் இணையதளத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டு வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது போலியான நியூஸ் கார்டு ஆகும். இதுபோன்ற வாசகம், மற்றும் புகைப்படத்துடன் மாலை மலர் தரப்பில் எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

    • வைரல் புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது.
    • இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல என தெரியவந்துள்ளது.

    தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார். கடைகளில் கீரை மற்றும் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. நிர்மலா சீதாராமனும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் காய்கறி வாங்கியபோது வெங்காயம் வாங்கியது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெங்காயம் குறித்து பலரும் ட்ரோல் செய்தனர். இந்த புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது. அதில், 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடவே மாட்டார் என்று பாராளுமன்றத்தில் கேள்விப்பட்டோம். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் பக்கத்து வீட்டுக்கு வெங்காயத்தை வாங்குகிறாரா? கிண்டலாக கூறப்பட்டிருந்தது.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. எனவே, இதுபற்றி இந்தியா டுடேயின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. இதில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்குவது போன்ற புகைப்படம் போலியானது என்பது தெரியவந்தது. வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வெங்காயத்தை இணைத்து, சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    அமைச்சர் வெங்காயம் சாப்பிடுகிறரா? இல்லையா? என்பது உண்மைச் சரிபார்ப்புக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல.

    இதுதவிர நிதியமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில், அவர் காய்கறி வாங்கும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களையும் வீடியோவையும் காண முடிகிறது. இவற்றில் எங்கும் அவர் வெங்காயம் வாங்குவதைக் காண முடியவில்லை. வீடியோவில் உள்ள ஒரு பிரேம், வெங்காயங்களைக் கொண்ட வைரல் புகைப்படத்துடன் மிகவும் ஒத்ததாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு வெங்காயம் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுவதாக குற்றச்சாட்டு
    • அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று https://thedealership.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கான டீலர்ஷிப் நாங்கள். எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பயனளிக்கும் எரிவாயு நிறுவனத்தை இறுதி செய்வது பற்றி வாடிக்கையாளர் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பதாரர் விவரங்களை பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் விண்ணப்ப படிவமும் உள்ளது.

    ஆனால், அந்த இணையதளத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது. 'சில இணையதளங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுடன், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை மோசடியாக வழங்குகின்றன. மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் அருகிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பிரிவு அலுவலகத்தையோ அல்லது அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியிருந்தது.

    இது தொடர்பாக பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    https://thedealership.in என்ற இணையதளம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெயரில், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை வழங்குவதாகக் கூறுகிறது.

    ️இந்த இணையதளம் போலியானது. உண்மையான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளமான 'https://iocl.com' என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்று செய்தி பரவியது
    • ஹெல்ப்லைன் 1098ஐ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து இயக்கும்.


    குழந்தைகள் உதவி எண் 1098 மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்றும் நாளிதழில் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் உதவி எண் 1098 இருக்காது என்றும், குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்றும் செப்டம்டபர் 14ம் தேதி செய்தி வெளியிடப்பட்டதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த செய்தியின் தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்கள், பொது மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் உண்மை நிலையை சரிபார்க்காமல் எழுதப்பட்டுள்ளது.

    குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098 உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், அது ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்று வெளியிடப்பட்ட அந்த செய்தி முற்றிலும் தவறானது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சிறார் நீதிச் சட்டம் 2015 இன் விதிமுறைகளுக்கு இணங்க, ஹெல்ப்லைன் 1098ஐ அமைச்சகம் தொடர்ந்து இயக்கும். 1098-க்கான அழைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு வரும். மேலும் குழந்தைக்குத் தேவையான உதவிகள் தற்போது வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை போன்ற கூடுதல் அவசர உதவி தேவைப்பட்டால், உள்ளூர் காவல்துறையும் உஷார்படுத்தப்படும்.

    இவ்வாறு பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது

    • போலி வலைத்தளங்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அரசுத் துறைகள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் இப்போது இணைதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. அதேசமயம் அரசுத் துறைகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான சமூக வலைத்தள பக்கங்களும் தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன. எனவே இவற்றை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது போலி செய்திகள் மற்றும் போலி வலைத்தளங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

    அவ்வகையில், எல்லைப் பாதுகாப்பு படையின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் திறக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூறி உள்ளது. @BsfIndia0 என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கு அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும், எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @BSF_India என்றும் தெரிவித்துள்ளது. 

    • சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது
    • அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது

    பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டையே புரட்டிப் போட்ட இந்த பேரிடர் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒரு வீடியோ கராச்சியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாக்கப்படுகிறது.

    அந்த வீடியோவில், சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோ கராச்சியில்தான் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து சந்தேகம் எழுப்பட்டது. இதுபற்றி கூகுள் தேடல் மூலம் ஆய்வு செய்ததில், அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பதும், உண்மையில் அந்த வீடியோ ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சுனாமியின்போது வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி என்பதும் தெரியவந்தது. 2011 ஜப்பான் சுனாமி: இஷினோமாகி என்ற தலைப்பில் யூடியூப் சேனலிலும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், அந்த வீடியோவுக்கும் பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், வீடியோ ஜப்பானில் எடுக்கப்பட்டிருப்பதும் உறுதியாகி உள்ளது.

    ×