search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிப்பு.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார்.
    • முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார்.

    அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    • வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்து விட்டனர்.
    • தீர்ப்புக்கு பின்னரே அடுத்தக் கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க உள்ளதாக தகவல்

    அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது.

    கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. ஆனால், இந்த முறை மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

    நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர்.  

    இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார். அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது. 

    ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
    • இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

    பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

    பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறார்கள். கார் மற்றும் வேன்களில் ஒன்றாக சென்னை நோக்கி வருகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தீவிரமாக உள்ளனர்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பகலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களில் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிற்பகலில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள். ஒரு சிலர் விமானத்திலும் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இரவு புறப்பட்டு வருகின்றனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2,650 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

    எம்.எல்.ஏ. விடுதியிலும், சென்னையில் உள்ள முக்கிய ஓட்டல்களிலும் அறைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.

    இதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் மதுரை, தேனி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குவியத் தொடங்கி உள்ளனர். நாளை அதிகாலை 7 மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை அதிகாலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப அதிகாலையிலேயே அவர்கள் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் கடைசி நிமிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய இடையூறு எதுவும் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எனவே நாளை காலை ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை சற்று கலக்கத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. மிச்சம் இருக்கும் ஆதரவாளர்களும் ஓடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களை அதிகாலையிலேயே தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை' என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை ஐகோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார்.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் நீடிக்கிறது.

    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து வெளியே விவாதிப்பது என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம் கிடையாது. விவாதங்கள் முடிந்துவிட்டன. எனவே ஒரு நல்ல தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து வரும் திங்கள்கிழமை 100 சதவீதம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக ஓபிஎஸ் வழக்கறிஞர் கூறினார்.
    • கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

    சென்னை:

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருக்கிறது, அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

    அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது, என்றார்.

    அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அப்போது, 11ம் தேதி கூட்டத்தைக் கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கியிருப்பதாகவும் கூறினார்.

    தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின் நகல்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது ? என்று நீதிபதிகள் கேள்வி.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடிவு செய்திருந்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் கூடும் என்றும் அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் சேர்க்கப்பட்டு ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாளை (7-ந்தேதி) விசாரணைக்கு வர உள்ளது.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர்.

    மேலும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்புதராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

    அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு தராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை மாறி இன்று ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக மட்டும் செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறதோ அந்த பொறுப்புகளுக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை சரிவர செய்யவில்லை. பொருளாளர் கையெழுத்திடாததால் பணியாளர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை' என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சுப்ரீம் கோர்டு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக் கூடாது என்கிற அந்த சமயத்தில் ஏற்கனவே நடை பெற்ற பொதுக்குழுவில் முடிந்துவிட்டது.

    ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே அதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த வக்கீல், 'எங்களுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போடப்படுகிறது. எனவே கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்று ஆணையிட வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுகூட்டத்துக்கு எந்த விதமான தடங்கலும் இருக்க கூடாது. தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற சுதந்திரம் வேண்டும்.

    கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தது போல எந்தவிதமான தடையோ, கட்டுப்பாடுகளோ வந்துவிடக்கூடாது என்ற வாதங்களை முன் வைத்தார். அதற்கு நீதிபதி, 'ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு நாங்கள் ஏன் தடை விதிக்க வேண்டும்? கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன.

    இந்த வழக்கு ஐகோர்ட் டில் இருக்கிறது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் பொதுக்குழுவுக்கு கட்டுப்பாடு மற்றும் தடையை ஏன் விதிக்க வேண்டும்?

    இது உள்கட்சி பிரச்சினை என்பதால் இதை நீங்கள் தான் சரிசெய்துகொள்ள வேண்டும். இதை ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வருகிறீர்கள்? தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் நீதிமன்ற அவமதிப்பு என்ன இருக்கிறது?

    இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் ஒரு நபர் அமர்வு முடிவு எடுக்க வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? கட்சி உள் விவ காரங்கள், பொதுக்குழு செயல்பாடுகளில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    நீங்கள் ஒரு கட்டத்தில் நட்பாக இருந்தீர்கள். இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது' என்று நீதிபதி கூறினார்.

    இதையடுத்து இந்த மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பினரும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல்கள் வைத்தியநாதன், சித்தார்த்ருத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடி னார்கள். வழக்கு விசாரணை நடைபெற்றதை யொட்டி சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

    • ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல்.

    சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாளை இந்த வழக்கு விசாரணை வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

    வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு சட்ட ரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

    பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளனர்.

    இதன்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேள்வி:-சமூக விரோதிகள் ஓ.பி.எஸ். ஆட்களா?

    பதில்:- கட்சியின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமூக விரோதிகளாக யார்? வருவார்கள் என்பதை எல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? பிரச்சினை ஏற்படாமல் பொதுக்குழு நடைபெற வேண்டும் என்கிற எண்ணத்திலேயே பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:-கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டத்தை காணொலியில் நடத்த வாய்ப்புகள் உள்ளதா?

    பதில்:-தற்போது வரை சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

    கேள்வி:-15 நாட்களுக்கு முன்பே பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும், அது கடைபிடிக்கப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் கூறியுள்ளனரே?

    பதில்:-23-ந்தேதியே பொதுக்குழுவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    கேள்வி:-அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சசிகலா கூறி வருகிறாரே?

    பதில்:-இது வீண் முயற்சி. தினகரன் ஒரு பக்கமாக வண்டியை தூக்கிக் கொண்டு செல்கிறார். சசிகலா ஒரு பக்கமாக வண்டியில் போகிறார். இருவரும் நேரத்தைதான் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோலும் வீணாகி கொண்டே இருக்கிறது.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வற்புறுத்தினர். ஆனால் அதை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சினை எழுந்தது.

    கடந்த மாதம் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருந்தனர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.

    தீர்ப்பு சாதகமாக வராததால் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விடிய விடிய விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.

    பரபரப்பான சூழ்நிலையில் நடந்த அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வர முடியாததால் ஒட்டுமொத்தமாக தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க மீண்டும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் உள்ள 2,660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேருக்கு மேலாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். எனவே 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி முடிவு செய்யவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கோர்ட்டு உத்தரவை மீறிவிட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கேட்டும் முறையிட்டனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு டிவிசன் பெஞ்சில் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

    இந்த நெருக்கடிகளுக்கு இடையேயும் 11-ந்தேதி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். அதேநேரம் சட்ட நடவடிக்கை மூலம் அதை முடக்குவதற்கான வேலைகளில் ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக நேற்று இரவு சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தார். அப்போது மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பொதுக்குழுவுக்கு தடை கேட்டு இன்று வழக்கு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே ஓ.பி.எஸ். தனது மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எனக்கு நேற்று மாலையில் தான் அழைப்பிதழ் கிடைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் ஆனால் 11-ந்தேதி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய முறைப்படி கூட்டப்படாத இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை (6-ந்தேதி) விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

    ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதால் 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.

    • ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார்.
    • 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரங்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு தொடர்பான விசாரணையை 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    விசாரணையின் போது வருகிற 11-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி ஓ.பி.எஸ். தரப்பில் முறையிடப்பட்டது. அது தொடர்பாக தனி நீதிபதியை அணுகும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

    இதையடுத்து தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் கள்கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தனக்கு நேற்று மாலைதான் அழைப்பு வந்ததாகவும் முறைப்படி பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

    • வானகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை 11-ந்தேதி நடத்த முடியாதபடி சட்ட சிக்கல்கள் எழுந்தால் மாற்று ஏற்பாடுகளாக என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
    • கொரோனாவை காரணம் காட்டி தடை வந்தால் என்ன செய்வது என்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகளில் சுமார் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டுகளை மட்டுமே நம்பி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி அனைத்து முடிவுகளையும் அதிரடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் அவர், 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கோர்ட்டு அவமதிப்பாகும். எனவே 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    ஆனால் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் கூறுகையில், 'இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளதால் நாங்கள் இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது. 11-ந்தேதி பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும்' என்று அறிவித்தார்கள்.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து இந்த 11-ந்தேதி வானகரத்தில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த கடிதம் தலைமை கழகம் என்று பெயரிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும். என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மொத்தம் 16 தீர்மானங்களை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது முதல் தீர்மானம் ஆகும்.

    அடுத்து தி.மு.க. ஆட்சி தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகு ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள் அடுத்தடுத்து கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளன.

    குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    இதன்காரணமாக அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானமும் கொண்டுவரப்பட உள்ளது. தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால பொதுச்செயலாளரை 11-ந் தேதி கூட்டத்திலேயே தேர்ந்தெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தலைமையில் கட்சி நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடர செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அறிவிப்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ரத்துசெய்யும் தி.மு.க. அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியது தொடர்பாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

    அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முயற்சிப்பதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும். நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிப்பது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

    இந்த நடைமுறை மூலம் புதிய சட்ட சிக்கல்கள் எதுவும் அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி பணிகளை தடுக்க முடியாதபடி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கருதுகிறார்கள். எனவே அ.தி.மு.க. வரலாற்றில் 11-ந்தேதி செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    மேலும் அ.தி.மு.க. கட்சி விதிகளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிகளில் கடைபிடிப்பது போன்றும் மாற்ற முடியும். எனவே 11-ந்தேதி பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் எடப்பாடி பழனிசாமி அணியிடம் அ.தி.மு.க. முழுமையாக செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.

    வானகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை 11-ந்தேதி நடத்த முடியாதபடி சட்ட சிக்கல்கள் எழுந்தால் மாற்று ஏற்பாடுகளாக என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை காரணம் காட்டி தடை வந்தால் என்ன செய்வது என்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைவர்கள் சென்னையில் இருந்து கூட்டத்தை நடத்துவார்கள்.

    அந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்களது மாவட்ட தலைமை கழகத்தில் இருந்தபடியே பங்கேற்பார்கள். எனவே 11-ந்தேதி அ.தி.மு.க.வில் மாற்றங்கள் நிகழ்வது உறுதியாகி இருக்கிறது.

    ×