search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் ஜோ பைடன்"

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் ஏழு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
    • போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, உக்ரைனுக்கு மேலும் 625 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என் உறுதியளித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன், ரஷியா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
    • இந்தப் புயலால் அம்மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

    புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

    இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.

    தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும். நாட்டைக் கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
    • புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை.

    புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம்.

    நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
    • இந்தப் புயலால் அம்மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

    புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

    இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

    இயான் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்தார்.

    வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

    இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இந்தச் சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இந்த புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.

    • சீனா உடனான விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
    • சீன படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றார் அதிபர் ஜோ பைடன்.

    வாஷிங்டன்:

    தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சீன போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, தைவானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ரூ.8,700 கோடி மதிப்பில் ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தை அதிபர் ஜோபைடன் வலியுறுத்தி இருந்தார். தைவானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் அவரது மானைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்கா சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

    • ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
    • ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார்.

    • அமெரிக்காவில் இரட்டை கோபுரம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
    • இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

    இந்த தாக்குதலின் நினைவாக நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது கணவருடன் அஞ்சலி செலுத்தினார்.

    • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
    • 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஜில் பைடன் டெலோவெலில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.

    தற்போது 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார். ஜோபைடைனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    • இந்தியாவின் சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.
    • இந்த சுதந்திர தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    சுதந்திர தினமான உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆகஸ்டு 15-ம் தேதி அன்று சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாகக் கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது.

    இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர்.

    இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்

    இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நேற்று நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொடூரமான தாக்குதலை அறிந்து நானும் ஜில்லும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். அனைத்து அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து, அவரது உடல்நலம் மற்றும் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
    • இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

    இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். ஜூலை 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

    ×