search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234255"

    • தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் டோல்கேட் அருகே சுற்றிதிரிந்தது.

    ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

    • யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
    • சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது.

    இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

    இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த 2 தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.

    சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் காணப்பட்ட 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

    அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதேபோல் நேற்றும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை குட்டியுடன் வந்த காட்டு யானைகள் வழிமறித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் சென்றதும், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் மீண்டும் நடமாடி வருகிறது. 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.

    இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.
    • குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதி.

    இந்த பகுதிகள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக ஊருக்கு மத்தியில் உள்ள சாலைகளில் ஒய்யார நடைபோட்டு சென்றன.

    பின்னர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள வீடுகளின் முன்பு சில நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு தெருக்களில் சுற்றி திரிந்தன.

    யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.

    வீடுகளில் இருந்தபடியே யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். சிறிது நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. அதன்பின்னரே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று வீடு திரும்புவர்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

    குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.

    எனவே, வனச்சரகத்தினா் மலை கிராமத்தில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் வந்தது.
    • வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த யானை கூட்டம் அந்த பகுதியில் இருந்த 3 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    வால்பாறை அடுத்துள்ளது முத்துமுடி எஸ்டேட். இந்த பகுதி அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இங்கு காட்டு யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் சுற்றி திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் வந்தது.

    வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த யானை கூட்டம் அந்த பகுதியில் இருந்த 3 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.

    வீட்டில் இருந்த ஜன்னல், கதவு உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியது. இந்த வீடுகளில் தற்போது யாரும் வசிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் எழுந்து பார்த்தபோது 3 வீடுகளும் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். உடனடியாக வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் யானைகள் அட்டகாசம் தினமும் தொடர்ந்து வருகிறது.
    • வனத்துறை நிரந்த தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    கொடைக்கானல் :

    கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் யானைகள் அட்டகாசம் தினமும் தொடர்ந்து வருகிறது.ஒவ்வொரு நாளும் தங்களது விவசாயப்பயிர்களையும், உடைமைகளையும், உயிரையும் பாதுகாப்பதற்கு மட்டுமே நாட்களை கடத்த வேண்டி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகளுக்கு சென்று வரும் தங்களது குழந்தைகள் நல்ல முறையில் திரும்பி வருவார்களா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    வாழ்க்கையை வாழ்வதற்கே போராடும் சூழலில் வாழ்வாதாரத்தை காப்பதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளதாக பேத்துப்பாறை கிராம மக்கள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.அன்றாடம் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் முழுமையாக திருப்பிவிட வனத்துறை நிரந்த தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    தினசரி ஒவ்வொரு விவசாயிகளின் தோட்டத்தையும் சேதப்படுத்தி வரும் யானைக்கூட்டங்களால் பணப் பயிர்கள் முழுவதும் அழிந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று மட்டும் கணபதி, வடிவேல், ரத்தினகுமார், தமிழன், சசி, பிரபு ஆகியோருடைய பல லட்ச ரூபாய் மதிப்பிலான அவரைப் பந்தல்களை மூன்று யானைகள் நாசம் செய்துள்ளன.

    சேதமடைந்த பந்தல்களை மட்டும் சீரமைக்க சுமார் ரூ.2 லட்சம் செலவாகும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பயிர்கள் விளைந்து அவற்றை பணமாக்குவது என்பதும் கேள்விக்குறிதான் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க உடனடியாக மாநில நிர்வாக அமைச்சர்களை தங்கள் பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்து தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கொடைக்கானல் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டு பன்றி, முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
    • தனியார் விடுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானை புகுந்துள்ளது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

    கொடைக்கானல் :

    கொடைக்கானலை யொட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டு பன்றி, முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    அப்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியை யொட்டி யானைகள் முகாமிட்டுள்ளன.

    அஞ்சு வீடு, பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. மேலும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    கடந்த சில நாட்களாக பேத்துப்பாறை, அஞ்சு வீடு ஆகிய பகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானை புகுந்துள்ளது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் பொதுமக்களும் உயிர் பயத்தில் உள்ளனர். விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் கூட்டம் கூட்டமாக வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×