search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் மீட்பு"

    • சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் சிலை கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது அம்பலமாகி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்ட விலை மதிக்கமுடியாத பழங்கால சிலைகளை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் தற்போது சிறை தண்டனை பெற்று, தமிழக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரால் கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற அமைப்பிடம் உள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதும் அம்பலமாகி உள்ளது. சோழர் காலமான 11-12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா கடத்தி சென்றுள்ளனர்.

    இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன், சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார், கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

    விலை மதிக்கமுடியாத இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது.
    • மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் என்ற பழமைவாய்ந்த சிவன் கோவில் இருந்தது. வெளிநாட்டினர் படையெடுப்பால் இந்த கோவில் சிதைந்தது. பின்னர் அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேகரித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இதில் கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது. அப்போது இதுபற்றி போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

    தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொன்மையான பல சிலைகளை மீட்டு வரும் தகவலறிந்து முருகன் சிலை காணாமல் போனது குறித்து தச்சூர் மக்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், தச்சூர் சிவன் கோவிலில் இருந்து திருடுபோன, நின்ற நிலையில் உள்ள முருகன் கற்சிலை அமெரிக்க நாட்டின் உள்பாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.
    • தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், 7-வது மெயின்ரோடு, 1-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சோபா துரைராஜன். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இவரும் கணவருடன் அமெரிக்காவிலேயே வாழ்கிறார். இவரது சென்னை வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே டிசம்பர் 9-ந்தேதி அன்று அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்து 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக கடந்த ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    3-வது முறையாகவும் அந்த வீட்டில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டார்கள். இதற்காக கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஷ்பாபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ராமர், வள்ளி, தெய்வானை இணைந்த முருகன், நந்தி உள்ளிட்ட 14 பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டது.

    பிரபல சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரிடம் இருந்து, கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து மேற்கண்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும், போலீஸ் விசாரணையில், சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட வீடு தரைதளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் என்ற 3 பகுதிகளை கொண்டது. அந்த வீட்டில் சோபா துரைராஜனின் வயது முதிர்ந்த 4 உறவுப்பெண்கள் மட்டும் தற்போது வசிப்பதாகவும், திரும்பிய திசை எல்லாம், அந்த வீட்டில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்களாக காட்சி அளிப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.

    இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோபா துரைராஜன் வீட்டில் இதுவரை கைப்பற்றிய சிலைகள் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத கலைப்பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தனிப்படை போலீசார் சிலை வாங்கும் வியாபாரிகள் போல, தரகர் சுரேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • திருவான்மியூர் ஜெயராம் தெருவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு மாறுவேட போலீசாரை அழைத்து சென்றார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஈரோட்டை சேர்ந்த சுரேந்திரன் என்ற தரகர் அந்த சிலைகளை விற்பதற்கு விலை பேசி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த சிலைகளை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு ரவி ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிலைவாங்கும் வியாபாரிகள் போல, தரகர் சுரேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுரேந்திரன் இதை உண்மை என்று நம்பி, ஈரோட்டில் இருந்து சென்னை திருவான்மியூர் வந்தார். திருவான்மியூர் ஜெயராம் தெருவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு மாறுவேட போலீசாரை அழைத்து சென்றார்.

    மாறுவேட போலீசார் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தரகர் சுரேந்திரனிடம் பேச்சு கொடுத்தபடி இருந்தனர். பேச்சை பார்த்து, வந்திருப்பது போலீசார் என்பதை சுரேந்திரன் கண்டு பிடித்துவிட்டார். உடனடியாக நைசாக தப்பி ஓடி விட்டார்.

    வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்கால சிலைகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும், வீட்டு உரிமையாளர் ரமேஷ்பாந்தியாவிடம் இல்லை. இதனால் 15 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அம்மன், புத்தர், சிவன், நடராஜர், நந்தி, நர்த்தன விநாயகர், ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் போன்ற 15 சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை.

    இந்த சிலைகள் ஏதாவது ஒரு கோவிலில் திருடப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும், என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் ரமேஷ்பாந்தியாவிடம் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய தரகர் சுரேந்திரனையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பெரும்பாலான சிலைகள் அமெரிக்காவில் உள்ள மியூசியங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
    • 2 சிலைகளும் சோழர் காலத்து சிலைகள் என்று போலீசார் கூறினார்கள்.

    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்ட பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலான சிலைகள் அமெரிக்காவில் உள்ள மியூசியங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலில் திருட்டுபோன நின்ற நிலையில் இருக்கும் விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தேடி வந்தனர்.

    துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த 2 பழமையான சிலைகளும் அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்டுக்கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த 2 சிலைகளும் சோழர் காலத்து சிலைகள் என்றும் போலீசார் கூறினார்கள்.

    • பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா பண்ணைத் தெருவில் அமைந்துள்ள பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அலமாரியின் பூட்டை உடைத்து பார்த்தனர். அதில், வள்ளி உலோக சிலை (உயரம் 38.5 செ.மீ., அகலம் 16 செ.மீ., எடை 7.3 கிலோ) புவனேஸ்வரி அம்மன் (உயரம் 30 செ.மீ., அகலம் 13 செ.மீ., எடை 6.2 கிலோ) திருஞான சம்பந்தர் (உயரம் 43 செ.மீ., அகலம் 12 செ.மீ., எடை 9.4 கிலோ) ஆகிய 3 சிலைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சிலைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்-யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மீட்கப்பட்ட சிலைகள் தமிழகத்தில் எந்த கோவிலில் திருடப்பட்டது, என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் வீட்டில் விலை மதிக்க முடியாத ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக கோவில்களில் திருடப்பட்ட அந்த சிலைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீசார், குறிப்பிட்ட வீட்டில் சோதனை போட்டனர். சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், மரத்திலான கலைப்பொருட்கள், ஒரு ஓவியம் உள்ளிட்ட 20 பழமையான கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை, குறிப்பிட்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர், பிரான்ஸ் நாட்டுக்கு கடத்திச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் கடத்திச்செல்ல முடியவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    மீட்கப்பட்ட சிலைகள் தமிழகத்தில் எந்த கோவிலில் திருடப்பட்டது, என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாரை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.

    • சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2018-ம் ஆண்டு மனு அளித்தார்.
    • கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் மாயமான சாமி சிலைகளில் 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகம், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வரர் கோவிலில் இருந்த நடராஜர், வீணாதாரி தட்சிணா மூர்த்தி, துறவி சுந்தரர்-பரவை நாச்சியாருடன் உள்ள சிலை, திரிபுராந்தகம் மற்றும் திரிபுரசுந்தரி உள்ளிட்ட 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டது. இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை.

    இந்த சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2018-ம் ஆண்டு மனு அளித்தார். அதன்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருடப்பட்ட சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் உள்நாட்டு, வெளிநாட்டு கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இந்த சிலைகளின் படங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்தனர். அதனை தடய அறிவியல் துறை மூலம் ஒப்பிட்டு சரிபார்த்தனர்.

    இதில் வீர சோழபுரம் கிராமத்தில் உள்ள நாரீஸ்வர சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட 6 சிலைகளும் அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை மூலம் கண்டுபிடித்து உள்ளனர்.

    இதையடுத்து 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் கீழ் இந்த சிலைகளை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் மாயமான சாமி சிலைகளில் 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘கவுண்டி ஆர்ட்’ என்ற அருங்காட்சியகத்தில், விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் இருப்பது தெரியவந்தது.
    • சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள ஆலத்தூரில் பழமைவாய்ந்த வேணு கோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிலைகளில், செப்பு கலவையில் வடிவமைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் இருந்துள்ளன.

    இந்த 3 சாமி சிலைகளும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கடத்தப்பட்டது. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அதே இடத்தில், அந்த சிலைகளைப்போல், போலி சிலைகள் வைக்கப்பட்டன.

    இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி நாகராஜன், விக்கிரபாண்டியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினாலும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதன்பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் மாயமான சிலைகளின் புகைப்படம் எதுவும் இருக்கிறதா? என்று ஆராய்ந்தனர். ஆனால், கோவில் அதிகாரிகளிடமோ, பிற பதிவேடுகளிலோ அந்த சிலைகளின் படங்கள் எதுவும் இல்லை.

    சிலைகளின் படங்கள் கிடைத்தால்தான், அதன் மூலம் மேற்கொண்டு விசாரணையை விரைவுபடுத்த முடியும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கருதினார்கள். அதிர்ஷ்டவசமாக 1959-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த சிலைகளின் அசல் படங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு, உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களின் வலைதள பக்கங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடந்தது. நீண்ட தேடுதலுக்கு பிறகு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 'கவுண்டி ஆர்ட்' என்ற அருங்காட்சியகத்தில், விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் இருப்பது தெரியவந்தது.

    தற்போது அந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிலைகளுக்கு உரிமைகோருவதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக அரசின் ஒப்புதலுக்காக இந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த ஆவணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்.

    அதன்பிறகு விரைவில் சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை வல்லுநர் ஸ்ரீதரன் ஆய்வு செய்தார்.
    • சிலை கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து பமீலா இமானுவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை பிராட்வே பிடாரியார் கோவில் தெருவில் பமீலா இமானுவேல் என்பவர் வீட்டில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இந்த பிரிவின் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆலோசனையின்பேரில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    உடனே தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். இதில் தட்சிணாமூர்த்தி சாமி சிலை முதலில் சிக்கியது. தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை அலசி ஆராய்ந்தபோது ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்தனர்.

    அந்த அறையில், முருகன், வள்ளி, தெய்வானை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு ஆகிய சாமி சிலைகளும், பீடத்துடன் கூடிய 2 பெண் தெய்வங்கள், என 9 சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பமீலா இமானுவேலுவின் கணவர் மானுவல் ஆர்.பினிரோ சிலைகளை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி வந்துள்ளார். அவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதால், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முடியாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை வல்லுநர் ஸ்ரீதரன் ஆய்வு செய்தார். இதில் 9 சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது என்பதும், சர்வதேச சந்தையில் இந்த சிலைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பு இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த சிலைகள் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து பமீலா இமானுவேலுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளுக்கு சாமி சிலைகள் கடத்தலை ரகசியமாக கண்காணித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சென்னையில் 9 சாமி சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி பாராட்டி உள்ளார்.

    • மகிமைதாஸ் என்பவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்கேயன், முருகபூபதி, பாண்டியராஜன், செல்வராஜ், சந்தனகுமார், ஏட்டு பரமசிவன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் 'எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்' என்று தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

    ×