search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரியா தெளிப்பு"

    • நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
    • ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் வள்ளுவகுடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் ஜானகிராமன் என்பவரின் வயலில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர் தலைமையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர், நானோ யூரியாவின் முக்கியத்துவத்தையும் பயன்பாடுகளையும் பற்றி கூறினர்.

    நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது. நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது.

    மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.

    அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று கூறினார்கள்.பின்னர் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் எஸ். தமிழரசன் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் செவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.

    • இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி நடைபெற்றது.
    • ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடிகிறது.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் வேலாயுதின் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசரின் வழிகாட்டுதல்படி நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது.

    நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் 46 சத தழைச்சத்து கொண்ட யூரியா செய்யும் பணியை 4, சத தழைசத்துக் கொண்ட நானோயூரியா செய்கிறது.

    விவசாயிகள் பொதுவாக பரிந்துரைப்படி ஏக்கருக்கு இட வேண்டியது 22 கிலோ என்ற போதிலும் நிலவும் பருவ சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா வரை செலவு செய்கின்றனர்.

    தெளிப்பதற்கான செலவினம் தனியாக ரூ.300 ஆகிறது. ஆனால் நானோ யூரியா பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானது இதன் விலை ரூ.230, நானோ யூரியா, யூரியா போல வீணாக கரைவதும் இல்லை. ஆவி ஆவதும் இல்லை. நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை. நானோ யூரியா நேரடியாக பயிரினால் எவ்வித சேதம் இன்றி இலை வழி உரமாக நேரடியாக பயிரினா லா எடுத்து கொள்ளப்படுகிறது.

    விவசாயிகள் நெம்மேலி கிராமத்தில் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்டனர்.

    ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடித்து விடுகிறது. ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரியின் ஒத்துழைப்புடன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடனும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர்அன்புமணி கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து நானோ யூரியா தெளித்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    நெம்மேலி கிராம முன்னோடி விவசாயிகள் பெரமையன், சேதுராமன், இருளப்பன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு இது போன்ற திட்டங்கள் தங்களுக்கு மிக உதவியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி தொழில்நுட்ப உதவியாளர் அருள் தாஸ் நன்றி கூறினார்.

    • கள்ளக்குறிச்சி அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

     கள்ளக்குறிச்சி:

    உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்(த.க) அன்பழகன் பயிர் சாகுபடியில் அதிகப்படியான இராசயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து,தேவையான அளவு பயிர்களுக்கு உரமிட்டு மண்வளத்தை பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.இப்போ உர நிறுவன பிரதிநிதி அப்துல்ரகுமான் கூறுகையில் விவசாயிகள் தழைச்சத்து உரமான குருணை யூரியாவுக்கு மாற்றாக அனைத்து பயிர்களுக்கும் மேலுரமாக இப்கோ நானோ யூரியாவை ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் உரச்செலவை மிச்சப்படுத்திடவும் மண்வளத்தை பாதுகாக்கலாம் என கூறினார்.

    மேலும் நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயிகள் இரசாயன உரங்களை இடுவதை குறைத்து தக்கைப்பூண்டு, சணப்பை, கொளஞ்சி போன்ற பசுந்தாள் பயிர்களை விதைத்து பூக்கும் பருவத்தில் வயலில் மடக்கி உழுவதுடன், நன்கு மக்கிய தொழுவுரம் மற்றும் புண்ணாக்கு வகைகளையும் உரங்களாக பயன்படுத்தும்போது பயிர்களுக்கு பூச்சிநோய் தாக்குதல் இன்றி அதிக மகசூல் பெற்றிடவும்,நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திடவும் விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அப்போது கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×