என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை உயிரிழப்பு"
- வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரில் வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் இருந்து தம்பதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கணவன் கௌதம், மனைவி மஞ்சு இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
- சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி அக்சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார்.
- மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவுக்கு டந்த 45 நாட்களுக்கு முன்பு 2வது ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார். அதன் பிறகு நேற்று மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை கொடுத்துள்ளனர்.
இன்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அவரது கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கதறி அழுதனர். தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குழந்தை இறப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
- எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது.
பரமத்திவேலூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சுராம் (வயது 36). இவரது மனைவி மனிஷா தேவி. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள பிரபாகரன் என்பவரது தேங்காய் மட்டையில் இருந்து நார் பஞ்சு பிரித்து எடுக்கும் நார் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
பஞ்சுராம் வழக்கம் போல் நேற்று மாலை நார் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க வந்த மனைவி மனிஷாதேவி, அவர்களது 1½ வயது ஆண் குழந்தை தீஷ்குமாரையும் அழைத்து வந்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது. இதில் படுகாயம் அடைந்த தீஷ்குமார் அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், தீஷ்குமார் எந்திரத்தில் சிக்கியதை பார்த்து பதறினர். ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீஷ்குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ வயது குழந்தை நார் மில்லில் உள்ள எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
- குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35)-பிரியா (27).
இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இரவு 7 மணிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு 8 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி செய்வதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனதாக தெரிகிறது.
அதன்பிறகு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது.
இதனால் இன்று காலை ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாரமங்கலம் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்ததில் டைப்-1 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுமாதிரியான நோய் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி இந்த நோய் வரும் பட்சத்தில் 6 மாதத்தில் இருந்து 1 ஆண்டுக்குள் தான் தெரியவரும். 6 மாதத்துக்கு பிறகு தாய்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்கு உட்கொள்ள கொடுக்கும்போது இதுமாதிரியான சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
சம்பவத்தன்று மரியா ஆரோனிக்காவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், மூளை செயலிழந்து விட்டது. நோயின் தன்மை தீவிரமடைந்ததால், சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
- என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
- அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.
பாம்பு கடித்து பலியான குழந்தை தனுஷ்காவின் தாய் கூறியதாவது:-
என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.
அல்லேரி மலை பஞ்சாயத்து மக்கள் நீண்ட காலமாக அடிப்படை சாலை மற்றும் சுகாதார வசதிகளை கோரி வந்தனர். "சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகளுக்காக நாங்கள் பலமுறை கெஞ்சினோம், ஆனால் எங்கள் பலன்கள் வீணாகிவிட்டன." என்றார்.
இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-
2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம், ஆனால் பணிகளை தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார துணை மையத்தை ஏற்பாடு செய்வோம் என்றார்.
- சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
- குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.
சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.
மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.
இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.
சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.
அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது35). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நாகலட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டார். 2-வது மகள் விஜயதர்ஷினி (வயது9), 4-வது மகள் சண்முகப்பிரியா(4) ஆகிய 2 பேர் வீட்டில் இருந்தனர்.
அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப்பாம்பு 2 பேரையும் கடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயதர்ஷினி மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுமி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார்.
- குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் மது என்ற பெண் குழந்தை இருந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார். இதையடுத்து இசக்கியம்மாள் கரிவலம் வந்தநல்லூர் இந்திரா காலனியில் உள்ள அவரது சகோதரி மாலதி வீட்டின் அருகே வாடகை வீட்டில் குழந்தை மது மற்றும் தனது தாயார் ராமாத்தாளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இசக்கியம்மாள், மதுவை அருகிலுள்ள வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மது தனது தாயை பார்க்க வேண்டும் என கூறி அழுததாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயங்கிய அந்த குழந்தையை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் போடப்பட்டு இருந்தது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன.
இதற்கிடையே காலை 10 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசி சென்று இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார். இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
- குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23), இவரது மனைவி செல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
தலை பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்தார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது.
திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.