search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா.

    தூத்துக்குடி:

    பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் முத்தாரம்மன் கற்பக விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மூன்றாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கலையரங்கத்தில் சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

    • கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்
    • உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    உடுமலை

    கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்.இந்த விழாவானது புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வருகின்ற வளர்பிறை ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.

    விழாவின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான பார்வதி தேவியையும்,நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமி தேவியையும்,இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியையும்,10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வழிபாடு செய்யப்படுகிறது.

    பெண்களுக்கே உரித்தான இந்த பண்டிகை நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் ஆண்டுதோறும் தவறாமல் விரதம் இருந்து வீடுகளில் கொலு வைத்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு 23-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.இதை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில் கொலு வைத்து நவராத்திரி விழா தொடங்கி உள்ளது.உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் முதல் நாளன்று அம்பாள் சைலபுத்திரிதேவி வடிவத்தில் ஆரஞ்சு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதே போன்று உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    இதற்காக கோவில்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.ஒரு சில பொதுமக்கள் வீடுகளில் கொலு வைத்தும் நவராத்திரி விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான்.
    • பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான்.

    தனு என்ற அசுரனுக்கு மிகவும் பராக்கிரமசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த புத்திரர்களை பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தனர். கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், 'இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து' என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அப்போது அக்னி தோன்றி, `உனக்கு வரம் தருகிறேன். இவ்வாறு செய்யாதே" என்றார். ரம்பன் மகிழ்ந்து, `எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்" என்றான். அதற்கு அக்னி தேவன், 'நீ முதலில் எந்த உயிரினத்தை பார்க்கிறாயோ, அதன் மூலம் உனக்கு புத்திரன் பிறப்பான்' என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் முதலில் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையை பார்த்தவுடன் அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எருமைத்தலையும் மனித உடலுமாக பிறந்த அந்த பிள்ளை மக்ஷாகரன்' என்று அழைக்கப்பட் டான்.

    மகிஷாசுரன் மகாமேரு என்ற மலையை அடைந்து அங்கு பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. வேறு வரம் கேள்" என்றார். அதற்கு அவன். "தேவர்களாலும் பூதங்களாலும். ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால். பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும். தாம்ரன் என்பவன் தளபதியாகவும் இருந்தனர். அசிலோமா, பிடாலன், பாஷ்களன், காலபந்தகன், உதர்க்கன், த்ரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் அவனுடன் இருந்தனர்.

    அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் மிக அழகிய மாஹிஷம் என்ற பட்டினத்தை அஞ்சனம் என்ற மலையில் நிர்மாணித்தான். தேவர்களை தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும். தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இந்த பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள். இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள். தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து மகிஷாகரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த இன்னை மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள். எந்த இடத்தில் தேவர்களின் சத்ருவான மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் `தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றிபெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மகிஷாசுர மர்த்தினிக்கு, "துர்க்கா தேவி" என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு சமயம் துர்கமன் என்ற அசுரன், தேவர்கள், மகரிஷி, முனிவர்கள், வேதியர்கள் போன்றவர்களிடம் இருந்த மந்திரங்களை தன் சக்தியால் கவர்ந்து சென்றான். இதனால் உலகில் ஜபம், யாகம் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் மழை பொழியாமல் பயிர்கள் வாடின. பசுமையான மரங்கள் கூட உதிர்ந்தன. கிணறு, குளம், நதி ஆகியவை வற்றியது. இவ்வாறு நூறு ஆண்டு காலம் மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். இதையடுத்து தேவர்கள், அன்னை பராசக்தியை துதித்து வழிபட்டனர். அப்போது தேவி அங்கு தோன்றினாள். இவர் பல கண்களைக் கொண்டிருந்ததால், 'சதாட்சி' என்று பெயர் பெற்றாள்.

    புஷ்பம், தளிர் கீரை, காய்கறிகள், கிழங்குகளுடன் தோன்றியதால், இந்த தேவியை `சாகம்பரி' என்றும் பெயரிட்டு அழைத்தனர். இந்த அன்னை, துர்கமனுடன் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாள். அவன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து அவன் கவர்ந்து சென்ற மந்திரங்கள் பேரொளியோடு அன்னையை வந்து சரணடைந்தன. அதைக்கண்ட தேவர்கள் ஜெய ஜெய' என்று கோஷமிட்டனர்.

    துர்கமன் என்னும் அசுரனை அழித்ததால் அன்னை `துர்க்கா' என்று அழைக்கப்பட்டாள். சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரி துர்க்கா என நவ துர்க்கைகளாகவும் இருந்து அன்னை அருள்புரிகிறாள்.

    இந்த தேவியின் பெருமைகளை கூறும் தேவி மாகாத்மியத்தை, ஒன்பது நாளும் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அப்படி முடியாவிட்டால் துர்க்கைக்கு மிக- விசேஷமான துர்க்காஷ்டமி அன்றாவது பாராயணம் செய்வது நல்லது. தேவர்கள் மகிஷனை வதம் செய்த போது மகிஷாசுர மர்த்தினியை துதித்த துதிக்கு மகிஷாசுரமர்த்தினி சுலோகம் என்று பெயர் வந்தது.

    • திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நவராத்திரி விழாவில் தினமும் மாலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மன், பிரம்மசாரினிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பங்காரம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    • நவராத்திரி கொலுப்படிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
    • புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது.

    தஞ்சாவூர்:

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரையும் போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது. நவராத்திரி கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கும் அம்பாளை அழைக்கும் விதமாக கொலு வைக்கும் வைபவம் கோயில்கள் மற்றும் வீடுகளில் நடக்கும்.

    இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும் , இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறவும் போற்றி வழிபடுகின்றனர்.

    அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. வரும் 23-ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி கொலுப்ப டிகள் அமைக்கும் பணி தொடங்கியது.

    தஞ்சை -நாகை சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில், மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலை, கலாச்சாரம் ,வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், விநாயகர், பார்வதி தேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், துர்க்கை, நடராஜர் ,கருப்பசாமி, தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.

    இதேபோல் பல்வேறு வீடுகளிலும் பெண்கள் விரதம் இருந்து கொலு வைக்க தொடங்கியுள்ளனர். அஷ்டலட்சுமி ,ஆண்டாள், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி என பல்வேறு வகையாக பொம்மைகள் வைத்து அலங்கரித்து மங்களப் பொருட்கள் வைத்து அம்பாளை சிறப்பு பூஜை செய்து வீடுகளுக்கு அழைக்கின்றனர்.

    • தமிழகத்தில் ஏழு இடங்களில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.


    இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர்.



    திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

    இந்நிகழ்ச்சிகள் முதலாவதாக காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் நடைபெற்றது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து நவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.


    இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் 16 அக்டோபர் , ஈரோட்டில் 17 அக்டோபர் , திருச்சியில் 18 அக்டோபர் திருநெல்வேலியில் 20 அக்டோபர் , தஞ்சாவூரில் 21 அக்டோபர், மதுரையில் 22 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது.

    உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision-க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

    • அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • வருகிற 24-ந் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதநாயகி அம்மன்- வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக மூல ஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், எழுந்தருளும் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலெட்சுமி அம்மன் கேடயத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    தொடர்ந்து, 10 நாட்களும் அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    • விழாவை முன்னிட்டு ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது
    • 24-ந் தேதி வரை மாலை அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதி அருகில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூரில் ரேணுகாதேவி அம்மன் என உள்ள ஒரே கோவிலாகும்.

    இன்று நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் இன்று முதல் வரும் 24-ம்தேதி வரை மாலையில் வெகுவிமரிசையாக ரேணுகாதேவி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    மேலும் இசைக்கச்சேரி நடக்கிறது.

    ×