search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • சுதந்திர தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைப்பது மரபு.
    • தேசியக் கொடி ஏற்றிவைப்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். 

    ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 

    இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு-17ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

    1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய

    குற்றமாகும்.

    மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 

    இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய

    பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

    மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.

    இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் (Help line) / ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம்.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.08.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்த அறிக்கையை 17.08.2022க்குள் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சனிக்கிழமை முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும்.
    • இரவில் தேசிய கொடி இறக்க தேவையில்லை.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும்.

    திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்பு செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வழக்கறிஞர் பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர், அவரவர் வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்க விட்டு நாட்டு பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    தேசிய கொடியை நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவில் இறக்க தேவையில்லை. பறந்தவாறே இருக்கட்டும் என்று அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கயில் அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு மண்டலத்திலும் தலா நாற்பதாயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன.

    திருச்சி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தேசியக் கொடி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா நாற்பதாயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடிக்கு ரூ.21 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் இரண்டு லட்சம் மக்களுக்கு கொடி விற்பனை செய்யலாம் என கருதுகின்றனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது மாநகராட்சி கவுன்சிலர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம். மேலும் 16 ஆயிரம் கொடிகள் பள்ளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்.

    கவுன்சிலர்கள் நன்கொடையாளர்கள் மூலம் தேசியக் கொடிகளை வாங்கி வார்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் நிறைய வீடுகளில் கொடி ஏற்றும் வாய்ப்பு ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    துணியினால் செய்யப்பட்ட இந்த கொடி ரூ.21 -க்கு வாங்கப்பட்டு அதே விலைக்கு பொதுமக்களுக்கு விநியோகிப்பதாகவும், இதில் எந்த லாப நோக்கமும் இல்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய கொடிகள் வழங்கும் விழா நடைபெற்றது
    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தில் தேசிய கொடிகள் வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.

    வருகின்ற ஆகஸ்ட் 15 -ந் தேதி 75-வது சுதந்திர தின விழா நடைப்பெற உள்ளது.இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியின் சார்பில், நடுநிலை பள்ளி முன்பு தேசிய கொடி வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தலைமை வகித்தார்.ஒன்றியக்குழு தலைவர் சுதாஅடைக்கலமணி பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு தேசிய கொடி வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் 75- வது சுதந்திர தின விழா பற்றியும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் முறை குறித்து பேசினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் அழகப்பன் சரோஜாதேவி தலைமை ஆசிரியர் சுபத்ரா ஊராட்சி செயலாளர் அழகப்பன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற கருத்தியல் படி ஏற்றி கொண்டாடுமாறு அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணியில், நகராட்சி ஊழியர்கள், தற்காலிகபணியாளர்கள், மற்றும் கவுன்சிலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேசியக்கொடிகளை பெற்றுக் கொண்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வீடுவீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,பல்லடத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பச்சாபாளையம் பகுதியில்,நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியுடன்,கருப்பு கொடியும் பறக்கும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பச்சாபாளையம் பொது மக்கள் கூறியதாவது:-

    சுற்றுப்புறம் குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தப் பகுதியில் மின்மயானம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் உடன், சுற்றுப்புறச் சூழலும் கெடும்.எனவே, பச்சாபாளையத்தில் மின்மயானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10நாட்களாக வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளோம்.இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசிய கொடியையும் மற்றும் கருப்பு கொடியையும் பறக்கவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    உயர்கல்வி துறை அறிவுறுத்தலின் படி 75வது சுதந்திர தினத்தை (பவள விழா) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக வீடுவீடாக சென்று பவளத் தினத்தை பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சி அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குடிசைப் பகுதியில் வீடுவீடாக சென்று வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும் கொடி காத்த திருப்பூர் குமரனின் புகைப்படத்தை‌ கையில் ஏந்தியபடியும், தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார் ஆகியோர் தலைமையில் 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கப்பட்டது.
    • தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியில் உள்ள கிராமப்புற நூலக வளாகத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தில் இதற்கான நிகழ்ச்சி தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு தேசிய கொடியை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசினார்.

    முன்னதாக மாணவர்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடும் முறை மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் மாணவர்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவி யோகரசி, மாணவர் கவுதம்குமார் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார் குறித்து கலை நிகழ்ச்சி நடத்தினர். மடவார்வளாகம் தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, நூலகர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இது குறித்து, மாவட்ட நூலக ஆணைக்குழு வாயிலாக நூலகர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக, ஊராட்சித்தலைவர்களுடன் திட்டம் குறித்த ஆலோசனை நடத்தி சிறப்பு கூட்டங்கள் வாயிலாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.நூலகப்பணியாளர்கள், நூலகத்திலும், வீடுகளிலும், தேசியக்கொடி ஏற்றி, அதன் விபரங்களை,நூலக ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாசகர் வட்டம் வாயிலாக தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

    ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • தையல் கடைகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து உள்ளது.
    • பிரதமர் மோடி தற்போது வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    மதுரை:

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பேசுகையில், வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேன்சி ஸ்டோர், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பொது இடங்களில் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. மதுரையில் 50-க்கும் மேற்பட்ட ஆப்செட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தேசிய கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    தையல் கடைகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து உள்ளது.

    மதுரை கீழஆவணி மூல வீதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறுகையில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் தேசிய கொடி விற்பனை அதிகமாக இருக்கும். அரசு நிகழ்ச்சி உள்ளிட்ட தினங்களில் தேசியக்கொடி விற்பனை ஓரளவு இருக்கும். பிரதமர் மோடி தற்போது வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகாசி, திருப்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தேசியக்கொடிக்கு கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளோம். 8 செமீ. உயரம்-12 செ.மீ. நீளம் முதல், 48-க்கு 72 செ.மீ. வரை பல்வேறு அளவுகளில் காட்டன் தேசியக்கொடி உள்ளது. இவற்றை ரூ.30 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம்.

    பாலியஸ்டர் கொடி 18க்கு 27 செ.மீ-ரூ.95, 24க்கு 36 செ.மீ-ரூ.140க்கு விற்கப்படுகிறது. சட்டை பாக்கெட்டில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடி 120 எண்ணம்-ரூ.100, சாதாரண பாக்கெட் கொடிகள் 5000 எண்ணம்-ரூ.500க்கு விற்கிறோம்.

    வாகனங்களின் முன்புறம் பறக்கவிடும் கொடி, விசிறி, தொப்பி என்று பல்வேறு வகைகளில் தேசிய கொடிகள் உள்ளன. வீடுகளில் ஏற்ற 8-க்கு 12 செ.மீ., அல்லது 14க்கு 21 செ.மீ., அளவுள்ள தேசிய கொடி பொருத்தமாக இருக்கும் என்றனர்.

    மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஆர்வமாக உள்ளதால், பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

    • வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.

    திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது. அதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது. அஞ்சலகங்களில் தலா 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகளின் யோசனைப்படி தையல் தொழில் செய்து வரும் மகளிர் குழுவினர் தேசியக்கொடி தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளனர்.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வரும் 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் கொடுத்து தலா 2,000 தேசியக்கொடிகள் வீதம், 20 ஆயிரம் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- தேசிய அளவில், வீடுகள் தோறும் தேசியக்கொடி கட்டும் மக்கள் இயக்கம், விமரிசையாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டுப்பற்றை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் துணிகள் கொள்முதல் செய்து, 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கொடி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக மகளிர் திட்ட விற்பனை மையம் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×