search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள் போராட்டம்"

    • கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது.

    சேலம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக்கூடிய உதவிக்காக ரூ.2000 கேட்டு விண்ணப்பித்து பயனாளிகளை தேர்வு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் ஆயிரக்கணக்கான பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    மாவட்டம் முழுவதும் மாற்றித்திறனாளிகள் உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்ய செல்லும்போது சர்வர் வேலை செய்யவில்லை என காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கண்டித்தும், உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவருடைய உடல் ஊன தன்மைகேற்ப வேலை வழங்க வேண்டும் எனவும் அதுவும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் முறையான ஊதிய வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர் . இதுகுறித்து அதிகாரிகளும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க கேட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்தனர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தால் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த யூ.டி.ஐ.டி. கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கார்டு வந்துள்ளது. இதனால் பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கோடம்பாக்கம், வேப்பேரி பூந்தமல்லி சாலையில் அமர்ந்து கடந்த 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்ததை அடுத்து போக்குவரத்து சீரானது.

    சென்னை:

    அரசு பணி இடங்களில் நிரப்புவதில் முன்னுரிமை, ஆசிரியர் தேர்வு வாரிய நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு நேரடியாக பணியில் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 12-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் முக்கிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கோடம்பாக்கம், வேப்பேரி பூந்தமல்லி சாலையில் அமர்ந்து கடந்த 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.



    இந்த நிலையில் இன்று 5-வது நாளாக கிண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

    இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இவர்களின் போராட்டத்தால் நெரிசலில் சிக்கி நின்றனர். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாற்றுத்திறனாளிகளை குண்டு கட்டாக தூக்கி வேனிற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்-அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆனாலும் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்ததை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • ஆவின் பால் முகவர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அவர்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாற்றுத்திறனாளிகளை அலுவலகத்துக்குள் அழைத்து நிர்வாக இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் ஆவின் தலைமையகம் உள்ளது. இன்று காலையில் இந்த அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆவின் பால் முகவர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அவர்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்து நிர்வாக இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது தங்களின் பால் முகவர் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஆவின் அலுவலகத்தில் அலைக்கழிப்பதாகவும், பல ஆவின் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்வதற்காக சாய்வுதள படிக்கட்டு இல்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சா.மு.நாசர் உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கமாட்டோம் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து ஆவின் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் வற்புறுத்தினார்கள்.

    தற்காலிகமாக போராட்டத்தை அவர்கள் கைவிட்டுள்ளனர். ஆனாலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி மாற்றுத்திறனாளிகள் அங்கேயே காத்திருந்தனர்.

    • எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.
    • மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் மாவட்ட அளவிலும் ஆர்.டி.ஓ. அளவிலும் முறையாக நடத்திட வேண்டும்.

    தருமபுரி,

    அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் நுழைவுவாயிலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திவிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்:-

    எங்களது அடிப்படை கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. ஆனால் இங்கு மட்டும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். அவர்களது கோரிக்கைகள் பின்வரு மாறு:-

    தமிழ்நாடு வருவாய் ஆணையர் உத்தரவுபடி மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் மாவட்ட அளவிலும் ஆர்.டி.ஓ. அளவிலும் முறையாக நடத்திட வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்ப டும் முகாம்களிலேயே அனைத்துவித அடையாள சான்றிதழ்களும், பயண சலுகை சான்றிதழ்களும், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கிட வேண்டும். பயனாளிகளை அலைக்கழிக்க கூடாது.

    மாற்றுத்திறனாளி உதவித்தொகை வருவாய் துறையில் இருந்து மாற்றுத்தி றனாளி அலுவலகத்திற்கு மாற்றும்போது அலுவலக ரீதியான ஆவண மாற்றங்களை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். உதவித்தொகை ஏ.டி.எம். மூலமாக எடுத்துக்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் அடையாளச் சான்றிதழ் வழங்கிட ஊனத்தின் சதவீதம் குறிப்பிட உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும்போது முகவரி மாற்றம் எளிதாக செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகிகள் கரூரான், தமிழ்செல்வி, மாரிமுத்து, நம்புராஜன் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    ×