search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"

    • பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.
    • எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

    குடும்பத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ நம் முன்னோர்கள் ஆசி தேவை. பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.

    தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள்.

    இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

    எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம்' என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ' என்று பொருள். விஷ்ணுவில் இருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாக கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாட்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும்.

    அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையில் இருந்து விடுபட்டு வளர்பிறைக்கு செல்லும் நாள். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் சந்திரன் தந்தை சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

    சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடியாக வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம்.

    சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

    நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாக செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு.

    தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாரும் இல்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

    • பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
    • பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள்.

    சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

    பித்ரு தோஷம்

    ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.

    பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.

    லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

    அமாவாசை தர்ப்பணம்

    வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

    அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

    மூன்று தலைமுறை தர்ப்பணம்

    அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

    அகத்திக்கீரை

    முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.

    கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஆடி அமாவாசை அன்று மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    அதன்படி, ஆடி அமாவாசையன்று நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, ஆடி அமாவாசையையொட்டி இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர். இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

    இதேபோல், கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் ஆடி அமாவாசையை யொட்டி சூரிய உதயத்தின்போது கடலில் நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, கடலில் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலும்பிச்சை பழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனிதநீராடி சூரியபகவானை வழிபட்டனர். பின், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி அமாவாசையை யொட்டி இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • காகம் வடிவில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.
    • அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் நம் வீட்டிற்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம்.

    ஆடி அமாவாசையில் காகத்திற்கு சாதம் கொடுக்க மறக்காதீர்கள். காகம் வடிவில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

    அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

    சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

    தோஷங்கள் நீங்கும்

    முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

    காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள், குடும்ப பிரச்சினைகள்தீரும். குழந்தைபாக்கியம், கல்யாண யோகம் கிட்டும்.

    காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை தரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.

    அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானை திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

    முன்னோர்கள் மகிழ்ச்சி

    சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    • தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    • ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரை மற்றும் ஆறங்கரைகளில் பக்தர்கள் புனித நீராடினார்கள். தாமிரபரணி ஆற்று படித்துறை, காவேரி படித்துறை, ராமேஸ்வரம், பவானி கூடுதுறை மற்றும் குளித்துறை, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர்.

    முன்னோர்களின் ஆசி

    ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. த்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம்.
    • முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஆடி அமாவாசை சிறந்த நாள்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்று ஏராளமானோர் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம். எனவே நீர்நிலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக பித்ருக்களை சென்றடையும்.

    இதன்படி நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் கடற்கரை ஒரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு அமாவாசை சிறந்த நாள் அதிலும் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆடி அமாவாசை தினத்தில் பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    ஒருவரது குடும்பத்தில் தீராத நோய்கள் இருக்கும், பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும், எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போகும், கடன் பிரச்சினை அதிகமாகும். கணவன்- மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவு என தினம் தினம் குருச்ஷேத்திர போர்க்களமாக வீடு இருக்கும். இதற்கு காரணம் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.

    • கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.

    கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

    ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.

    குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    திருச்சி:

    இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

    அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரிகரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.

    இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. திருமலை ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பவனி. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பெருந்திருவிழா.

    பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-31 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை பிற்பகல் 3.50 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.22 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம்: பூராடம்- உத்திராடம்

    கீழ்நோக்கு நாள்

    இன்றைய ராசி பலன்

    மேஷம் - செலவு

    ரிஷபம் - முயற்சி

    மிதுனம் - புகழ்

    கடகம் - அலைச்சல்

    சிம்மம் - குழப்பம்

    கன்னி - மாற்றம்

    துலாம் - பரிசு

    விருச்சிகம் - சிந்தனை

    தனுசு - கவனம்

    மகரம் - தடை

    கும்பம் - பக்தி

    மீனம் - ஓய்வு

    • நாளை ஆடி அமாவாசை தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ந வபாஷாணத்திற்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், நாளை (16-ந்தேதி) ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்து உள்ள கடல் பகுதி வரை கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையாக பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    • சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    வருடந்தோறும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாளன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் இருந்தே சதுரகிரிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 3 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நாளை (16-ந் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் அதிகளவில் திரண்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர் பின்னர் மலையேற அனுமதித்தனர்.

    அடிவாரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் பக்தர்கள் சாரைசாரையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். சங்கிலிபாறை, வழுக்கு பாறை, பிலாவடி கருப்ப சாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் 17-ந் தேதி வரை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சதுரகிரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள்.
    • இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.

    நாளை மறுநாள் காலை எழுந்து, அருகில்இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ×