search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு துணைத் தலைவர்"

    • புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.

    தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:


    இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

    முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது.
    • உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும்.

    நாட்டின் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருது உள்பட 78 தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

    விருது பெற்றவர்களில் 36 பேர் பெண்கள். சில்ப் குரு விருதுடன் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய தன்கர் கூறியுள்ளதாவது: 


    முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த இடமாக இந்தியா உள்ளது. கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

    கலைஞர்களின் அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கைவினைஞர்கள் நமது கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்கின்றனர். இந்தியா, அளவில்லாத திறன்களைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு அவர்கள் பறை சாற்றுகின்றனர்.

    ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பதன் மூலம், பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை உலகம் கவனிப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உலகம் முழுவதும் ஆன்மிக நற்சிந்தனையை பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர்.
    • ஆன்மிகம் ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது.

    அபுநகர்:

    ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாவது:

    பிரம்ம குமாரிக்ள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டிய அவர்களது பணி பாராட்டுக்குரியது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும்.

    நாட்டில் இருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பது அவசியம். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது. உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி, இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
    • இந்தியாவை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை.

    இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். நாட்டில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டாண்மை அவசியம்,

    அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் கனவை நனவாக்க, சுகாதார சேவையில் பொதுத்துறையினரும்-தனியார்துறையினரும் இணைந்த பெரும் கூட்டு முயற்சி தேவை. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை.

    இந்தியா தனது குடிமக்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி செலுத்தியதுடன், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 1990 முதல் குழந்தை இறப்பு விகிதம் தடுப்பு போன்ற சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் உள்ளது.

    அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சுகாதார சேவை கிடைக்கும் இடைவெளி வெகுவாக குறைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியா முக்கிய பங்களிப்பு.
    • ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழங்கினார். இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: 

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவிலான மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் பங்களிப்பு தனிசிறப்பு வாய்ந்தது. நமது பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

    சுற்றுலாவுக்கான சொர்க்கமாக இந்தியா உள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா தளங்களை இந்திய சுற்றுலாப் பயணிகள் காணவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா.
    • நீதிபதிகளின் கண்ணியம் தவிர்க்க முடியாது.

    ஜக்தீப் தன்கர், 1979 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் வழக்கறிஞராக பணியாற்றிவர். 1990 ல் அவர் ராஜஸ்தானின் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் 2016 ஆண்டு சட்லஜ் நதி நீர் வழக்கில் ஹரியானா மாநிலம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

    இந்நிலையில் தற்போது குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. 


    இதில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பே, நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு அடிப்படையானது என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது என்றும் இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்தியா அனைத்து மட்டத்திலும் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.
    • நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் சந்தர்ப்பம்.

    குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

    ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.

    இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது.  இன்று இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

    விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

    இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
    • மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 


    ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,

    ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
    • சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்பட வேண்டும்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    ராஜஸ்தான் இளைஞர் சங்கம் செயல்படுத்தும் புத்தக வங்கி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் கடனாக வழங்கப்படுகின்றன.

    அதனை பெறும் மாணவர்கள் அந்த புத்தகங்களை இந்த ஆண்டு படித்து முடித்து பின்னர், அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

    ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்க முடியாமலோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமலே பின்தங்கி விடக்கூடாது.

    தேச வளர்ச்சியின் வேகத்திற்கு மிக பெரிய உந்து சக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும், ஆக்கப் பூர்வமான ஆற்றல்களையும் பயன்படுத்தி இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் சேரும்.

    அதிக மக்கள்தொகை தரும் நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது.

    21 ஆம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் பரந்த தொகுப்பை மிக திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

    தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அதை திரும்பக் கொடுப்பதுதான் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

    நம்முடையது பரந்த தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

    மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பை தமிழகம் பெற்றுள்ளது.
    • அமைதியை நிலை நாட்டியதற்காக தமிழக காவல் துறையினருக்கு வாழ்த்து.

    சென்னையில் நடைபெற்ற தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.

    இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதோடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.

    உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

    நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை.

    தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும். முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம்.

    மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும், தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தாய் மொழியில் கல்வி கற்பது சுயமரியாதையை அதிகரிக்கும்.
    • முதன்மை நிலையில்உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்ற வேண்டும்.

    ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

    தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

    சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன. தாய் மொழியில் கல்வியை கற்றுக் கொள்வது, சுதந்திரமாக தொடர்பு கொள்ள உதவும், சுயமரியாதையை அதிகரிக்கும். சொந்த கலாச்சார உணர்வை மாணவர்களுக்கு வழங்கும்.

    முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைகளுக்கும் விரிவுபடுத்தவும் வேண்டும். நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது.

    நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகள். உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும்.
    • வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே பயணிகளின் சொர்க்கமாக திகழ்கின்றன.

    நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.

    நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுவை சந்தித்து கலந்துரையாடினர். அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வெங்கைய நாயுடு கூறியுள்ளதாவது:

    வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.

    வடகிழக்கு பகுதி சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கிடையே அடிக்கடி நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், நாட்டின் ஒற்றுமையையும். ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தக் கூடியவை.

    அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் நான் அண்மையில், பயணம் மேற்கொண்டேன். அழகிய நிலப்பகுதி, செழுமையான கலாச்சாரம், மக்களின் இனிய விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாநிலங்கள் உண்மையிலேயே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.

    வடகிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டு அதன் எழில், கலாச்சாரம் ஆகியவற்றை பிற மாநில மக்கள் அனுபவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை விஷயத்தில் வடகிழக்கு பிராந்தியம் நாட்டுக்கே வழிகாட்டுகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கற்றுக் கொண்டு படிப்படியாக நீடித்த விவசாயத்திற்கு மாற வேண்டும்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு முன்னேற்றம், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. விபத்துக்களைக் குறைக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×