search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
    • கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.


    நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.

    • கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம்.
    • பா.ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளில் போடும் முதல் கையெழுத்து இந்து அறநிலையத்துறையை ஒழிப்பது தான். இந்து அறநிலையத்துறைக்கு அன்றே கடைசி நாளாக இருக்கும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.

    அவருக்கு பதிலடி கொடுத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் சரி எத்தனை ரெய்டுகள் வந்தாலும் சரி நடக்காது. இது திராவிட மண். அண்ணாமலைக்கு கையெழுத்து போடும் வாய்ப்பை மக்கள் கொடுக்க மாட்டார்கள். அது உங்கள் தலையெழுத்து.கையெழுத்து என்றும் எங்களது தான் என்றார்.

    • விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது.
    • மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க., பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த போது அ.தி.மு.க.வில் சேர்ந்த பலர் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டார்கள். இப்போது அப்படி சேர்ந்தவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அ.தி.மு.க.வுக்கு செல்பவர்களை விடாதே பிடி என்ற ரீதியில் அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். ரகசியமாக கண்காணித்து அ.தி.மு.க.வுக்கு செல்லும் எண்ணத்தில் இருப்பவர்களை தடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு தடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் சூர்ய சிவா.

    • அனைவரும் அறிந்த உண்மை தான்.
    • இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை.

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை என்பது பா.ஜனதா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுத்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது ஏவப்படுகின்றன. இது அனைவரும் அறிந்த உண்மை தான். அதிலும் பா.ஜ.க. மிகத் தீவிரமாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த இந்த அமைப்புகளை பயன்படுத்துகிறது. இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை. விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறட்டும். அதன் பிறகு அதை முடிவு செய்வோம் என்றார்.

    • அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு.
    • எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.

    காங்கிரஸ் எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    அரசியலில் அண்ணாமலைக்கு கூட்டம் வருவதை வைத்து அவ்வளவும் ஓட்டாக மாறி விடும் என்று நினைக்க முடியாது. அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு. தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது வந்த கூட்டத்தை பார்த்து நானே அசந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கூட்டத்தை வேறு யாருக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் என்னாச்சு? எனவே அண்ணாமலைக்கு வரும் கூட்டம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப முடியாது.

    ஏனென்றால் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனக்கும் ஒரு ஆசை உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்ற சின்ன ஆசை. அதை விட பெரிய ஆசை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் கூட முதல்வராக ஆசைப்படும் போது இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எனக்கும் அந்த ஆசை வரத்தானே செய்யும்? ஆனால் அதற்கான காலமும், நேரமும் இருக்க வேண்டும். என்னால் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். அண்ணாமலை தமிழகத்திற்கு என்று என்ன திட்டம் வைத்துள்ளார். எந்த பாதையில் தமிழகத்தை நடத்தப்போகிறார். அது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார். இப்போது அவர் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் எதிர் கட்சியான அ.தி.மு.க. மவுனமாக இருப்பதால் பா.ஜனதா செய்வதெல்லாம் எடுபடுகிறது. எங்களை பொறுத்தவரை எதிர் கட்சியும் இல்லை, ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கிறோம். எனவே எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரவுடிகள் பா.ஜனதாவில் தான் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தான் நல்லாட்சியை தரப்போகிறார்களா?

    • தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது.
    • ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளையும், ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியையும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு சோதனை நடத்துகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? இத்தனை நாட்கள் கழித்து தேர்தல் வரும் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஜெகத்ரட்சகன் இப்போ பணக்காரர் ஆனவர் இல்லை.

    இந்த சோதனையில் நேர்மை இல்லை என இது முதலமைச்சர் சொன்னது உண்மைதான். சோதனையை வைத்து அச்சுறுத்தலை பா.ஜ.க. செய்கிறது. இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சாதாரண பூர்வ குடிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவத்தில் அனைத்து தரப்பு இந்தியர்களும் இடம் பெற முடியும். ஆனால் இலங்கையில் பூர்வ குடிகள் ராணுவத்தில் இடம்பெற முடியாது.

    சனாதனம் என்றால் என்ன என்பதற்கான வரையறை இல்லை. வர்ணாசிரம தர்மம், சனாதனம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு- தாழ்வு சொல்வதுதான் சனாதன வர்ணாசிரம கொள்கை.

    இந்த கோட்பாடுகள் இந்த நூற்றாண்டிலும் அறிவியல் உலகத்திலும் இதனை நம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எனக்கு யாரும் அடிமை இல்லை, நானும் யாருக்கும் அடிமை இல்லை. இதைத்தான் பெரியாரும் சொல்கிறார்.

    உலகத்திலேயே உயர்ந்த குடி உலகத்திற்கு உணவளிக்கும் உழவர் குடி மட்டுமே. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்டதே குற்றம் என சொல்வதில் நியாயம் இல்லை. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அவருடன் கூட்டணி வைப்போமா என்பது குறித்து அவருடன் பேசி விட்டு தான் சொல்வோம்.

    தற்பொழுது நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். 20 தொகுதிகளில் பெண்களையும் 20 தொகுதிகளில் ஆண்களையும் நிறுத்துகின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள்.
    • முதலில் அவரது கட்சி நிலைமையை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டும்.


    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. இந்தியாவே வெறுக்கும் கட்சி பா.ஜனதா. அந்த கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள்.

    அருவெறுப்பான கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் அவரது கட்சி நிலைமையை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டும்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • கோட்டை குமுறல் இப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஆளும் தி.மு.க. அரசில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு உடனுக்குடன் சென்று விடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் அவ்வப்போது தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்ற புகார் ஏற்கனவே தி.மு.க.வுக்குள் புகைந்து கொண்டே இருப்பது தான். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

    அந்தக் கூட்டத்தில் அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான் பலமுறை நேரில் சந்திக்கும் போதெல்லாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி இருக்கிறேன்.

    மோடி அரசின் விசாரணை அமைப்புகள் நம்மை வேவு பார்ப்பதிலும், வேட்டையாடுவதிலும் தீவிரமாக உள்ளன. அவ்வப்போது இரவு நேரங்களில் நாளை ரெய்டு வரலாம். இன்று ரெய்டு வரலாம் என்ற தகவல்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. நம்மிடையே பேசும் பல தகவல்கள் உடனுக்குடன் பா.ஜனதாவுக்கும், கவர்னருக்கும் செல்கிறது என்று ஆவேசப்பட்டுள்ளார்.

    சில உயர் அதிகாரிகளை மத்திய அரசு கையில் எடுத்து விட்டதாகவும் அவர்கள் மூலம்தான் அரசை பற்றிய பல தகவல்கள் வெளியே பரிமாறப்பட்டு வருதாகவும் கடும் கோபத்தில் முதலமைச்சர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோட்டை குமுறல் இப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது.
    • என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.

    சினிமா புகழ், டி.வி. புகழ் என்று சில பிரபலங்களுக்குஅடைமொழி ஒட்டிக்கொண்டு இருப்பது போல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது. அவர் விட்ட தெர்மாகோல் தண்ணீர் ஆவியாவதை தடுத்ததோ? தடுக்க வில்லையோ? அவரது பெயரோடு அது ஒட்டிக்கொண்டதை மட்டும் தவிர்க்க முடிய வில்லை.

    மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் செல்லூர் ராஜு பேசும்போது, நான் மதுரைக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்டால் என்னை தெர்மா கோலோடு இணைத்து பேசி திசை திருப்புகிறார்கள். தெர்மா கோலுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? மாவட்டத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தெர்மா கோலை விட்டார்கள். நானும் சென்றிருந்தேன் அவ்வளவு தானே?!. அதற்காக என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.

    • கொடியேற்றுவதும், போராட்டம் நடத்துவதுமாக போய்க்கொண்டிருக்கிறது.
    • மாவட்ட தலைவர்களை அழைத்து வரக்கூடிய 28-ந் தேதி ஆலோசனையும் நடத்த உள்ளார்.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கட்சி கொடி கம்பத்தை போலீசார் அகற்றியதால் தமிழகம் முழுவதும் 100 நாட்களில் பத்தாயிரம் கொடிகள் ஏற்றப்படும் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.

    அதன்படி ஆங்காங்கு கொடியேற்றுவதும், போராட்டம் நடத்துவதுமாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் பா.ஜனதாவுக்கு அரசியல் செய்ய கை கொடுத்திருக்கிறது என்பது உண்மை.

    அதே நேரம் தேசிய கட்சியான பா.ஜனதா இப்படி அதிரடி காட்டும்போது தேசிய கட்சியான நாமும் அதிரடி காட்ட வேண்டுமே என்று காங்கிரசுக்கும் திடீரென்று ஆவேசம் வந்திருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஒரு தொகுதிக்கு 100 கொடி வீதம்234 தொகுதிகளிலும் 23,400 கொடிகள் ஏற்ற கே.எஸ். அழகிரியும் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட தலைவர்களை அழைத்து வரக்கூடிய 28-ந் தேதி ஆலோசனையும் நடத்த உள்ளார்.

    • மதுரையில் பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்திக் காட்டினார்.
    • அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.

    தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்திருக்கும் நிலையில் அதனை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவர் கடந்த சில மாதங்களாகவே தென் மாவட்டங்களை குறி வைத்து மாநாடு பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார். மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு செல்வாக்கான இடங்கள் என்பதை பொய்யாக்கி காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்திக் காட்டினார்.

    அதன்பிறகு சங்கரன்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றபோது அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தென் மாவட்ட மக்களின் வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

    இதனை மனதில் வைத்து இந்த 58 தொகுதிகளுக்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் இந்த முறை எப்படியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து விட வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக உள்ளது ஏனென்றால் அ.தி.மு.க.வுக்கு ஆரம்பகட்ட வெற்றி கிடைத்ததே தென் மாவட்டங்களில் தான் 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கிய நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது அதன்பிறகு 1977, 1980, 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தென் மாவட்ட மக்கள் அ.தி.மு.க.வை வெகுவாக ஆதரித்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தான் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிரடியாக சரிந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதி என்பது எப்போதுமே அ.தி.மு.க. வின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலில் அந்த தொகுதி யையும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. பறிகொடுத்தது.

    கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அங்கு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இப்படி அ.தி.மு.க. செல்வாக்காக இருந்த பல தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.

    இதுபோன்ற தொகுதிகள் என்னென்ன என்பதை எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் களமாட வேண்டும் என்று தென் மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.

    தமிழக பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. கூட்ட ணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

    வலுவான கட்சிகள் இதுவரை கூட்டணியில் சேராத நிலையில் அந்த கட்சிகளின் முடிவுக்காகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்காகவும் எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    நிச்சயம் தி.மு.க. கூட்டணியில் இருந்து பெரிய கட்சிகள் விலகி தங்கள் பக்கம் வரும் என்று அ.தி.மு. க.வினர் நம்புகிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரான வக்கீல் சேலம் மணிகண்டன் கூறும்போது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு மீதான மக்களின் அதிருப்தியை ஓட்டுகளாக மாற்றி அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரசே அந்த கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேரவும் வாய்ப்பு உள்ளது.

    அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டதால் மற்ற கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அதுவே அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அமைத்து வரும் வியூகம் அ.தி.மு.க.வுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி உண்மையான சமூகநீதி நாயகனாக இருப்பவர் பிரதமர் மோடி.
    • தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நமது நாட்டின் முதல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஏழ்மையை கல்வி மற்றும் அரசியல் அங்கீகாரம் என்ற நெருப்பால் பொசுக்கி தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர்.

    திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி உண்மையான சமூகநீதி நாயகனாக இருப்பவர் பிரதமர் மோடி. அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அங்கீகாரம் வழங்குவதால் மட்டுமே மக்களாட்சி முழுமை அடைகிறது.

    நாங்கள் ஆரியத்துக்குத் தான் எதிரி. ஆன்மீகத்துக்கு இல்லை என்று கூறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்ணான முர்முவுக்கு வாக்களிக்காமல் இவர் எதிர்க்கும் ஆர்யரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களித்தார். இதுதான் தி.மு.க.வின் சமூக நீதி.

    பிரதமர் மோடியின் 78 மத்திய மந்திரிகளில் 11 பேர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள். மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 34 பேரில் ஒருவர் கூட இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக ஆரியம், திராவிடம் என்று நாடகம் ஆடுகிறார்கள்.

    அனைத்து சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகே சட்டமாகும். அத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும் ஜனாதிபதியை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய ஏன் அழைக்கவில்லை என்கிறார்கள் தி.மு.க.வினர்.

    2010-ம் ஆண்டு மகளிர் மசோதாவை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த போது, அப்போதைய பெண் ஜனாதிபதியான பிரதிபா பாட்டீலை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. அழைக்கவில்லை. அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சிகளே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வில்லை. ஆனால், எதிர்க் கட்சியாக இருந்த பா.ஜ.க. ஆதரித்தது. இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை பா.ஜ.க. தான் நிறைவேற்றியுள்ளது.

    2010-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி இன்று இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது. அவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்திற்கு, இந்திய அளவில் 2021-2026-ம் ஆண்டு வரை ஒதுக்கியுள்ள நிதி 26,135.46 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர். பழங்குடியினர் நலனுக்காக, 2018 முதல் 2021-ம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1425.18 கோடி ரூபாய். பத்தாம் வகுப்பு வரையிலான தமிழகப் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 2014 முதல் 2022 வரை, 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதி 19.76 கோடி ரூபாய். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் தமிழகப் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி 226 கோடி ரூபாய்.

    நாடு முழுவதும் 694 ஏகலைவா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்திற்கு 8 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. அதில் 2867 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 8.67 கோடி ரூபாய் நிதியை இந்தப் பள்ளிகளுக்கு நமது மத்திய அரசு வழங்கியுள்ளது.

    கிராமப்புற மாணவர்கள், அனைத்து கல்வி வசதிகள், பேருந்து கட்டணம் என்று பயன்பெற மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் நமது மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. இந்தியாவில் சுமார் 625 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை.

    இந்திய அளவில், 2,78,356 மாணவ, மாணவிகள் நவோதயா பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் 89 சதவீதம் 2,30,817 பேர் கிராமப்புற மாணவ, மாணவிகள். 25.38 சதவீத மாணவ-மாணவிகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவோதயா பள்ளிகள் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கிறது என்ற ஒரே அரசியல் காரணத்தினால் தமிழக அரசு நவோதயா பள்ளிகளைப் புறக்கணித்து வருகிறது.

    கேரளாவில் 14, கர்நாடகாவில் 28, ஆந்திராவில் 15, தெலுங்கானாவில் 9 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு அழிந்து விட்டதா? நவோதயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அவரவர் தாய் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இது எப்படி இந்தியை திணிக்கும் பள்ளி என்று கூறுகிறார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில், போலி சமூக நீதி வேஷம் போடும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை முழுவதுமாகப் புறக்கணிப்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×