search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சி தாக்குதல்"

    • நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    • பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-

    இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.

    ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.

    தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.

    • பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது.
    • சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் என்றாலே காரம் மிகுந்த சம்பா மிளகாய்தான் நினைவுக்கு வரும். கொளத்தூரில் வசிப்பவர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க செல்லும்போது, சம்பா மிளகாயை கட்டாயம் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல், கொளத்தூரில் வசிப்பவர்களிடம் உறவினர்கள் விரும்பி கேட்பதும் சம்பா மிளகாய்தான். நாட்டு ரகமான சம்பா மிளகாய் காரம், மணம் மற்றும் நிறம் மிகுந்தது.

    கொளத்தூர் மிளகாய்க்கு தமிழகம் முழுவதும் எப்போதும் நல்ல கிராக்கி உள்ளது ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். 150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை விளைச்சலை தரும்.

    கடந்த ஆண்டு பெய்த மிக அதிக மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சம்பா மிளகாய் பயிரிடும் பரப்பளவு குறைந்துபோனது. விவசாயிகள் வாழை, தர்பூசணி போன்ற மாற்று பயிர்களை பயிரிடத் தொடங்கி உள்ளனர்.

    கொளத்தூர் வட்டாரத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, சம்பா மிளகாய் சாகுபடி பிரதானமாக இருந்து வந்தது. ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வந்தது. அப்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் மிளகாய் உற்பத்தி இருந்து வந்தது.

    தற்போது பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது. தற்போது ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

    கொளத்தூர் வாரச்சந்தையில் மிளகாய் வற்றல் கிலோ ரூ.330 முதல் ரூ.340 வரை விற்பனையாகிறது.

    நாட்டு இனமான சம்பா மிளகாய் சாகுபடி சரிந்து வருவதால், தற்போது சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    • மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும்.
    • மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம்.

    தாராபுரம் :

    முருங்கை விவசாயத்தில் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறை குறித்து பொங்கலூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது: மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும்.

    இளம் குருத்து மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த புழுக்களின் முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாய் பூச்சிகளை அழிக்க விளக்கு பொறிகளை எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.

    மீன் எண்ணெய் ரோசின் கோப் லிட்டருக்கு 25 கிராம் வீதமும், கார்பரில் 50 டபிள்யூ பி மருந்தை லிட்டருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    வரும் மாதங்களில் காய்களில் ஈ தாக்குதல் இருக்கும். காய்கள் பிளந்தும், காய்ந்தும் காணப்படும். காய்களில் தேன் போன்ற திரவம் வடியும்.

    தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம். நிம்பிடைன் மருந்தை 50 சதவீத காய் உருவான பின்பும் 35 நாட்கள் கழித்தும் லிட்டருக்கு மூன்று மி.லி., வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன
    • முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    தாராபுரம் :

    மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கும் தை மாதத்தில் முருங்கை மரம் பூத்துக் குலுங்கும். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடைக்கு வரும். ஆனால் தற்போது முருங்கையில் பூச்சி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதன் இலை, தழை, பூ என அனைத்து பாகங்களையும் பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன.

    மருந்து தெளித்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. பூச்சிகள் வீரியம் பெற்று மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சீசன் காலத்தில் முருங்கை அறுவடைக்கு வருவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    • குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை.

    பூதலூர்:

    தமிழக காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல பாசனப்ப குதிகளில் அவ்வப்போது பெய்த மழையாலும், கால்வாய்களில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததாலும் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு குறுவைசாகுபடி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    தஞ்சை மாவட்ட த்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் கூடுதலாக சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறுவை சாகுபடி ஊக்குவிப்பதற்காக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்காக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வேளாண் துறை மூலமாக கூட்டுறவு சங்கத்தி லிருந்து உரங்களை பெற்று செல்கின்றனர்.அதே சமயத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்காலம் தப்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழகஅரசு அறிவித்திருந்த நிவார ணமும் முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள விவசா யிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளி வரவில்லை.

    அண்மையில் தஞ்சையில் காட்டு தோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை குறுவை சாகுபடி பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிவிட்டு சென்றார்.

    அது குறித்துஅறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாக வில்லை.இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தற்போதுள்ள பருவநிலை மாற்றத்தால் குறுவை சாகுபடியில் பூச்சி தாக்குதல், அறுவடை காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற சூழ்நிலையில் தமிழக அரசே மத்திய அரசுடன் போராடி குறுவை சாகுபடிக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    இன்சூரன்ஸ்திட்டத்தில் கடைசி தேதிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழக வேளாண் துறையும், தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    ×